வெள்ளி, 9 ஜூன், 2017

தர்மம் தலை காக்கும் – அது தலைமுறையை காக்கும்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல – என்ற குறளிற்கு உதாரணமாக என் வாழ் நாளில் நான் கண்ட முதல் மனிதர் எனது தந்தை வழி பாட்டனார் திரு வ. க.அருணாசலம் அவர்கள். என் முற்பிறவியின் நான் பெற்ற பேறு அன்றி வேறு இல்லை. பொறுமையின் சிகரம், அன்பின் இலக்கணம், இன்னும் சொல்லப் போனால் என்னை பொறுத்த வரையில் கலியுக கர்ணன். ஆம், உண்மை தான் அது.
1958-இல் மாவட்ட கல்வித்துறை அதிகாரியாக ஓய்வு பெற்ற அவர், தனக்கென எதையும் சேர்த்து வைக்காதவர். (தான் இறக்கும் தருவாயிலும் தன்னிடம் இருந்த ரூ.500 என் தங்கையிடம் கொடுத்து பயன்படுத்த அவர் சொன்னதை, நான் எடுத்து ஒரு கை கடிகாரம் வாங்கிக்கொண்டது வேறு கதை)  தன் வாழ் நாளில் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாங்கித் தந்தவர் மட்டுமல்ல, தன்னால் இயன்ற வரை அக்கால மாணவர்களுக்கு படிப்புதவியும் செய்தவர்.

அதற்கு திரு. ஈரோடு தமிழ்அன்பன் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம் என்றால் ,
மீமிசல் ஊரில் கல்யாணசுந்தரம் என்ற அன்பர் தனது பூஜை அறையில் எனது தாத்தாவின் படத்தை வைத்து வணங்கி வந்தது இன்னோர் உதாரணம்.

எனக்கு நினைவு தெரிந்த வரையில் ஒரே ஒரு முறை மட்டுமே என்னிடம் கோபித்துகொண்டார், நான் ஐந்து பைசாவை இனிப்பு பண்டம் வாங்காமல் , சீட்டு கிழித்ததற்காக. வேறு எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னிடம் அவர் கோபித்து கொண்டது இல்லை.
நான் ஐந்தாம் வகுப்பு பயிலும்போது , சிறு வயது குறும்பு காரணமாய் எனது இடது கரத்தை ஒடித்து கொண்டு சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாய் கையில் மாவு கட்டு போட்டு சுற்றி கொண்டு இருந்தேன். வலது கரத்தினால் சாப்பிட்டாலும் , பள்ளியில் பாடம் எழுதினாலும் இயற்கை அழைப்பிற்கு இடது கரத்தை என்னால் பயன் படுத்த இயலவில்லை. சுமார் 30 நாட்களுக்கும் மேலாக தாத்தா எவ்வித தயக்கமோ , அருவருப்போ இல்லாமல் நான் கழிவறையில் இருந்து வரும் வரை காத்திருந்து என்னை சுத்தம் செய்வார் அவர்.

இன்று எனக்கு சற்றேனும் ஆங்கில அறிவு உண்டெனில் அது என் பாட்டனார் எனக்கு போதித்த, என்னிடம் சரளமாக உரையாடிய காரணத்தால் தான்.  ஒவ்வொரு பள்ளி தேர்வு முடிந்த பின்னரும் என்னுடனும் எனது தங்கையுடனும் அமர்ந்து கேள்வி கேட்டு அதன் மூலமாக மதிப்பெண்களை கிட்டத்தட்ட சரியாக கணித்தவர்.  
தனது பெயரன் வயது ஒத்த எனது நண்பர்களை அவர் வந்தார், இவர் வந்தார் என்று கூறி மரியாதையை எனது பள்ளி நாட்களில் கற்று தந்த பெருமகனார் அவர்.

தன்னுடைய 87ம் அகவையிலும் மறைந்த தனது சகோதரற்காக இடு காடு வரை சென்று இறுதி கடனை முழுமையாய் செய்ததை குடந்தை நகரமே புருவம் உயர்த்தி பார்த்தது உண்மை.

1904 –இல் பிறந்த அவர் 1994 ஜனவரி 19இல் மறைந்தார். அவரது மிகப்பெரிய சொத்து அவரது ஈகை குணம் மட்டுமல்ல, அவரது ஆரோக்கியமும் கூட.
ஆம் நண்பர்களே, அவர் இறக்கும் வரை ஒரு நாள் கூட அவர் நோய்வாய் பட்டு(ஜுரம் / இருமல் கூட) நான் பார்த்ததில்லை. மூப்பின் காரணமாக கண் பார்வைசரியாக தெரியாதால் அறுவைசிகிச்சை செய்துகொண்டார், Dec 16 1993 இல். அதுவே அவருக்குஎமனாய் அமைந்தது. சுமார் ஒரு மாத காலம் நோய்வாய் பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இறைவனடி சேர்த்தார்.

இன்று அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆனாலும், அவரை பற்றி நினைத்தால் என் உள்ளம் உடையத்தான் செய்யும். அதை என்னில் கண்டவர்கள் நண்பர் ஜெயகுமார் அவர்களும் ஈரோடு தமிழ்அன்பன் ஐயா அவர்களும்.


ஊழ்வினையின் காரணமாய் மறுமை எனக்கு கிடைக்குமானால்,  இறைவா என்னை ஒரு நாயாக பிறக்க வை. பூமியில் மனித அவதாரம் எடுத்த உன் காலடியை சுற்றி வந்து என் நன்றி கடனை தீர்க்க முயற்சி செய்கிறேன்.

12 கருத்துகள்:

  1. மாபெரும் மனிதர்... அறிய வைத்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. குமார் அருமையான மறவாத நினைவு பதிவு
    ஆனாலும் 500 ரூபாயை! அப்பவே ஆட்டைய போட்டத இனி நான் மறக்க மாட்டேன்

    பதிலளிநீக்கு
  3. அரிய மனிதரைப்பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே. உங்களை போன்ற நண்பர்களின் ஊக்கம் என்னை மேலும் மெருகேற்றும்

      நீக்கு
  4. போற்றுதலுக்கு உரிய மனிதர் ஐயா
    கொடுத்து வைத்தவர் தாங்கள்
    தங்கள் தாத்தாவினை நான் பார்த்ததில்லை,
    ஆனாலும் தங்களின் தாத்தாவின் குணங்களை, பழகும் விதத்தைத்
    தங்களின் தந்தையிடம் கண்டிருக்கிறேன்
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் அது போன்ற குணம் கொண்ட ஒருவர் தானே நண்பரே

      நீக்கு
  5. அன்பு குமார்,ஈகை குணம் கொண்ட தங்களின் தாத்தா அருணாச்சலம் அவர்களைப் பற்றி அறிந்து வியந்தேன். தங்களின் பதிவு அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் நன்றி.அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு