புதன், 27 மார்ச், 2019

பழமொழியை பொய்யாக்கியவர்

இந்த பதிவின் முதற்பகுதியை இந்த இணைப்பில் காணலாம்.


“Jack of all , master of none” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

தமிழில் இதற்கு தொடர்புடைய ஒரு பழமொழி உண்டென்றால்
"அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்" என்பதே.

அனைத்து விஷயங்களிலும் அரை குறையாய் கற்று சொதப்புவதை விட
ஒரே விஷயத்தை முழுமையாக கற்று தேற வேண்டும் என்ற பழமொழியை
பொய்யாக்கி அகலவும் உழுதிருக்கிறார் ஆழவும் உழுதிருக்கிறார் ஒருவர்.

இவரை சந்திக்க நானும் நண்பர் ராஜேஷும் நேரம் கேட்டது டிசம்பரில்
நேரம் கிடைத்தது பிப்ரவரியில் இறுதியில்.                                

                                             நானும் உமர் அவர்களும் 


                                        நண்பர் ராஜேஷுடன்

அந்த அளவிற்கு மனித இதயம் ஓய்வின்றி துடிப்பதை போல, பல்வேறு பணிகளில் சுழன்று கொண்டிருக்கிறார்.

ரத்தவியல் தொடர்பான படிப்பை முடித்தவருக்கு,
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பணிபுரிய துவங்கிய பின்னர் தான்
அதிலிருக்கும் ஒரு சில விரும்பத்தகாத விஷயங்கள் பிடிபட துவங்கின.

இளைஞனுக்கே உரித்தான நேர்மையும் கோபமும் வெளிப்பட மெல்ல மெல்ல அத்துறையிலிருந்து விலகி ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.

இந்த மருத்துவத்தில் சரியான மருந்து அளவில் கொடுக்கப் பட்டால் அற்புதமாய் வேலை செய்யும் என்பதும் , 
தவறான அளவில் கொடுக்கப் பட்டால் அதீத கேடும் என்பதே அந்த மருத்துவத்தின் சிறப்பு.

அப்படியென்றால் இதையும் தாண்டி வேறேதும் சிறந்த மருத்துவம் இருக்க முடியுமா ..?

தேடினார்.

தொடு சிகிச்சை பற்றி கேள்வியுற்றார். அதை பற்றி ஆராயலானார்.

அக்குபங்சர் என்பது ஓர் உயர் நிலை மருத்துவம் என்பதை உணர்ந்த அவர் மெல்ல மெல்ல அதை நோக்கி திரும்ப தொடங்கினார்.

2002ல் திரு. போஸ் முஹம்மது மீரா அவர்கள் நடத்தி வந்த தொடு சிகிச்சை நிலையத்தில் ,

மருத்துவ அறிக்கைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும் ,

நோயாளிகளுக்கு சிகிச்சை நேரம் என்பது வெறும் 1 நிமிடமே என்பதும் அவரை வெகுவாக ஈர்த்தது.

அதனை முழுமையாக கற்று தேர்ந்தார்.  
            
இந்த அற்புத கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் , கம்பம் கல்வி குழுமத்தை நிறுவி இக்கலையை பிறருக்கு கற்பிப்பதிலும் ,

திரு .போஸ் என்ற விஜயனுக்கு வில்லாய்  இருந்தார் , இன்றும் இருக்கிறார்.

தற்போது கம்பம் கல்வி குழுமத்தின் முதல்வராக பணி புரிந்து வருகிறார் .

திரு. போஸ் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர் என்றால் , இவர் ஒரு  தகவல் பெட்டகம் என்பது மிகையே அல்ல.

இவர் வகுப்பெடுக்க துவங்கினால் குண்டூசி விழும் ஓசை பக்கத்து அறையிலிருந்தும் கேட்கும்.

அக்குபங்சரின் வரலாறு ஆகட்டும் , அதன் தத்துவங்கள் அல்லது கிருமிகள் பற்றிய பாடம் ஆகட்டும் ,   

இவர் அழகான பேச்சு ஆர்வமற்றோரையும் தம்பால் ஈர்க்கும்  ஈர்க்கும்.

அருமையான எழுத்தாளர்.

உடல் , மனம் , மருத்துவம் தொடர்புடைய பல நூல்களின் ஆசிரியர் இவர்.

தொடு சிகிச்சை துறைக்கு வரும்முன்னே ஒரு சில கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

டாக்டர் விகடன் , குங்குமம் போன்ற போன்ற சஞ்சிகைகளிலும் தொடர்கள் எழுதியுள்ளார்.

இவரது முதல் நூலானஉடலின் மொழி” வெறும் 5 நாட்களில் எழுதப்பட்டது.
உண்ணும் உணவுகளை பற்றிய விழிப்புணர்வு வேண்டுமா .

இவரது “Kitchen to clinic படியுங்கள்.

“Sodium Lauryl sulfate “ என்ற வேதி பொருள் 2  / 4 சக்கர ஊர்திகளை பழுது பார்க்கும் இடங்களில்,

தரையில் உண்டாகும் கருமை நிற கறையை போக்கும் ஒரு வேதி பொருளே என்பதும்,

நமது பற்பசைகளில் அது பயன்படுத்தப் படுகிறது என்ற செய்தியையும்
Kitchen to clinic” நூலில் படித்தால் நாம் பற்துலக்கவே 100 முறை யோசிப்போம்.

கவலை வேண்டாம் , அதற்கான தீர்வையும் அவர் சொல்கிறார்.

நோயில்லாமல் வாழ வேண்டுமா - "நோய்களிலிருந்து விடுதலை"

தடுப்பூசி தேவையா ஒன்றா - "தடுப்பூசி - வெளிப்படும் உண்மைகள்"

தற்போது பிரபலமாகி வரும் பேலியோ உணவு முறை பற்றி தமது அடுத்த நூலில் எழுதவிருக்கிறார்.

பழங்கால பிராமி  தமிழெழுத்துக்களை கற்க வேண்டுமா ..?

இவர் கற்றுக்கொண்டதோடு முறையாய் அதற்கான ஏற்பாடும் செய்கிறார்.

                                     அகழ்வாராய்ச்சி பணியில் 

பல ஊர்களுக்கு சென்று கேட்பாரற்று கிடைக்கும் கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்து சட்ட ரீதியாக தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் உண்மையை வெளிக்கொணர.

பிராமி எழுத்துக்களை பயின்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில்

கஜா புயலா - அங்கு பறக்கிறார் தமது குழுவினருடன்.

கேரளாவில் வெள்ளமா - நேரில் சென்று உதவி கரம் நீட்டுகிறார்.

திரு . போஸ் அவர்கள் இறைவனை தேடுவது ஒரு தனி மார்க்கம் என்றால் , இவர் மனித தொண்டாற்றுவதில் இறைவனை காண்கிறார்.

அது மட்டுமல்ல நண்பர்களே.

எழுத்தாளர்களை இவர் ஊக்குவிக்கும் முறை முற்றிலும் வேறு பட்டது.

தம்முடைய மாணவர்களை ஒரு குழுவாக இணைத்து எழுத்தாளர்களின் நூல்களை படிக்கச் செய்கிறார்.

பின்னர் மாணவர்களின் கருத்துக்களை / விமர்சனங்களை கை அடக்க புத்தகமாக அச்சடித்து அதனை நூலாசிரியர்களுக்கு பரிசளித்து விடுகிறார்.
இதன் மூலம் சுமார் 250 - 300 நூல்கள் ஒரே நேரத்தில் விற்பனையாவது மட்டுமல்ல,

வெளிப்படையான கருத்துக்கள் / விமர்சனங்கள் எழுத்தாளர்களுக்கு தூண்டு கோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.


                                     எழுத்தாளர்களுடன்

நவீன மருத்துவத்தில் புதிதாக ஏதேனும் வெளியிடப்படுகிறதா .

அதை பற்றி அறிந்து கொள்வதோடு அதன் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.

கீழடி பழமையானதா, சிந்து சமவெளி பழமையானதா ?

இவர் ஆதாரத்துடன் வாதிடுகிறார்.

தஞ்சையில் எத்தனை தங்கும் விடுதிகள் உள்ளன ..?

இந்த மருத்துவம் சம்பந்தப்பட்ட அரசாணை எந்த நாட்டில், எப்போது வெளியிடப்பட்டது.

16  ம் நூற்றாண்டில் எந்த நாடு செல்வ செழிப்புடன் இருந்தது.

தற்போதைய இந்திய மருத்துவ குழுவின் தலைவர் யார் , இப்பதவிக்கு வரும் முன் என்ன செய்துகொண்டிருந்தார்.

30  வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா கண்டத்தில் வந்த நோய் என்ன , அது எத்தனை நாட்களில் சரி செய்யப்பட்டது .

இந்த நூற்றாண்டில் இந்த நாட்டில் ஆலயம் கட்டப்பட்ட போது என்னென்ன நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

இணையத்தில் தேட வேண்டாம்.

இவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே போதும்.

நமக்கு வேண்டிய விவரங்களும் கிடைக்கும், சற்று அதிகமாகவும் கிடைக்கும்.

தீராத அறிவு வேட்கையே இவரின் வெற்றிக்கு காரணம்.

2010ல் இவர் எழுதியவீட்டுக்கொரு மருத்துவர்” நூலை வெளியிட்டது
நம்மாழ்வார் ஐயா அவர்கள் தான்.


தமது நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை அடிக்கடி சந்தித்து பேசினாலும்,
ஒரு முறை கூட அவரின் புகழ் பெற்ற கதா பாத்திரங்களான பரத் மற்றும் சுசீலா பற்றி இவர் பேசியதில்லை என்பது வியப்பை தரும் விஷயம் தான்.

சுமார் 5 ஆண்டுகள்  திரு. போஸ் அவர்களுடனே இருந்து, நண்பராக பெருமதிப்பை பெற்ற இவர்,
அவரது உறவினராகவும் ஆனார், மருமகன் என்ற முறையில்.

இந்திய ஆட்சி பணி அதிகாரி ஆவதற்குரிய அனைத்து திறமைகளும் இருந்தும் இவர் ஏன் அந்த பதவிக்கு முயலவில்லை என்ற வினாவிற்கு ,

ஒரு மருத்துவனாய் நோயற்ற சமுதாயம் உருவாக்குவதே முதற்கடமை என்று அதற்குரிய விடை வருகிறது.

இப்படி தாம் தொட்ட துறையில் எல்லாம் ஒளிரும் மனிதர் கணீர் குரலில் பேசி கவர்பவர் இப் பதிவின் நாயகர்,

மரியாதைக்குரிய எங்கள் அக்குபங்சர் ஆசான் திரு.உமர் பாரூக் அவர்கள்.