வியாழன், 28 டிசம்பர், 2023

சங்கு சுட்டாலும்

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் நடைமேம்பாலம் வழியாக தொடர்வண்டி நிலையம் சென்று கொண்டிருந்தேன்.

பழ வியாபாரிகள், குறிப்பாக வாழைப்பழம் விற்போர் நடை மேம்பாலத்தின் முகப்பில் நின்றபடி மிக கண்ணியமாக விற்பர்.

அன்றைய வியாபாரம் முடிந்து, மீதம் இருக்கும் பழத்தை கிடைக்கும் விலைக்கு விற்பதற்கு ஆயத்தமாகவே வருவார்கள்.

சுமார் 18-20 பூவன் பழங்கள் வெறும் 10-15 ரூபாய்க்கே கிடைக்கும்.

இருப்பினும் இரவு நேரத்தில் அங்கு வாங்குவோர் மிகவும் குறைவே என்பதை ஏக்கம் தோய்ந்த வியாபாரிகள் முகமே சொல்லும்.

அன்று 10 ரூபாய்க்கான பழங்களை வாங்கிய படியே, 20 ரூபாயை அவரிடம் நீட்டினேன்.

அதன் நோக்கம் சில்லறை இல்லை என்பது மட்டுமல்ல,அவ்வளவு பழங்களை கொடுக்கும் அவருக்கு என்னாலான பலன்களை கொடுக்கலாம் என்ற எண்ணத்திலும் தான்.

"சில்லறை இல்லாட்டி பரவாயில்லை, விடுங்க" என்றேன்.

அவரோ புன்னகைத்தபடி, "சில்லறை இல்லாட்டி என்ன சார் பழம் தான் நிறைய இருக்கே பிடிங்க" என்றபடி மேலும் ஒரு சீப்பு வாழைப்பழத்தை நீட்டவில்லை, மாறாக கையில் திணித்தார்.

ஏழை வியாபாரிக்கு உதவ நினைத்த நான்,அந்த நிலையிலும் அவரது நேர்மையையும், தன்மானத்தை மதித்து பழங்களை பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினேன்.

பின்னர் தான் என் மனதில் உறைத்தது, இவர் போன்றோருடன் புகைப்படம் எடுக்கத் தவறியது.

நியாயமாக நடந்து கொள்ளும் வியாபாரிகளைப் பற்றிய மதிப்பு உயர்ந்த அதே நேரம், என்னுள் ஊழல்வாதிகளைப் பற்றி எண்ணம் எழாமல் இல்லை.

            "அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்

            நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

            கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு

            சுட்டாலும் வெண்மை தரும்"


 

-       நன்றி அவ்வைப் பாட்டியார்


ஞாயிறு, 17 டிசம்பர், 2023

ரயில் தோட்டத்தில் பூத்த தமிழ் மலர்

என்னை விட வயதில் சுமார் 14 வருடங்கள் மூத்தவராக இருந்தாலும், எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

கூடல் நகர் வளர்த்தது, தமிழ்ச் சங்கத்தை மட்டுமல்ல, இவரையும் சேர்த்துத் தான் என்பதாலோ என்னவோ, தமிழ் மீது அளவில்லாப் பற்று கொண்டவர்.

பட்டப் படிப்பு முதுகலை வேளாண்மை, கோவை தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்.

அப்பல்கலைக்கழகத்தில் ஓராண்டு உதவிப் பேராசிரியராக பணி புரிந்த பின்னர்,  குடியுரிமைப் பணிகள் வாரியம் நடத்தும் தேர்வில் (UPSC -Civil Services Examination) 134 தர வரிசை பெற்றார். 

அதற்கு முக்கிய காரணமாக இருந்த நண்பர் திரு.V.K. சுப்புராஜ் I.A.S அவர்களை, என்றும் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

1981 ம் ஆண்டு 134 வது தரவரிசை என்பது,அகில இந்திய அளவில், I.P.Sக்கான முதல் இடம் எனினும் கூட, மருத்துவப் பரிசோதனையில் உயரக் குறைவு காரணமாக I.P.S கிட்டாமல், I.R.S (Indian Railway  Service) பணியை தேர்ந்தெடுத்தார்.

36 ஆண்டுகள் இந்திய ரயில்வேயில் பணி புரிந்த நம் நண்பர் வகித்த பதவிகள் மட்டுமல்ல, சாதனைகளும் அதிகம்.

IRFC (Indian Railway Finance Corporation) நிர்வாக இயக்குனர், இந்திய ரயில்வேயின் நிதித் துறை ஆலோசகர் (Adviser Finance, Railway Board) போன்ற பல உயர் பதவிகளில் பரிமளித்தவர்.

1994-98 ஆண்டுகளில், அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே எழும்பூர் - திருச்சிராப்பள்ளி இடையே அகல ரயில்பாதையை அமைத்தது,

தானே உருவாகிய "தானே" புயல் கடலூரை தாக்கிய சமயத்தில், திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளராக இருந்து, ரயில் போக்குவரத்தை ஒரே நாளில் சீரமைத்து,  தமது மேலதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது ,

பல்வேறு சவால்களுக்கிடையே ஜம்மு - ஸ்ரீநகர் ரயில் பாதை என்னும் சாதனையில் ஜமாய்த்தது என்று இவரது சாதனை பட்டியல் தொடர் வண்டி போல் நீண்டு கொண்டே செல்கிறது.

தலைநகர் டெல்லியில் பணி நீட்டிப்பை ஏற்கச் சொல்லி மத்திய அமைச்சரே அன்புக் கட்டளையிட்ட போதும், பெற்ற அன்னையாருடனும், அன்னைத் தமிழுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே சென்னை திரும்பியவர்.

பள்ளிகளில் ஆசிரியர் குறைபாடு என்றால்,  தமது செலவிலேயே அதனை சரிகட்டும் பணியை செய்வார்.

சிற்றூர்களில் யோகாசன வகுப்பு நடத்த வேண்டுமா, பொருட்செலவு என்னுடையது என்று(ம்) முன்வருவார்.

சென்னையை ஒட்டிய சேரிப் பகுதிகளில் அடிப்படை கணிப்பொறியும் /ஆங்கிலமும் சொல்லித் தர வேண்டுமா,

இன்றளவும் வார இறுதிகளில் சென்று விடுகிறார், தன் மனைவியுடன்.

இவற்றுகெல்லாம் தன் பெற்றோர்கள் காட்டிய வழியும், சுவாமி விவேகானந்தர் மற்றும் சத்திய சாய்பாபாவின் போதனைகளும் தான் முக்கிய காரணம் என மறவாமல் குறிப்பிடுவார்.

பல ஆண்டுகளாக யோகாசனம் செய்பவர் மட்டுமல்ல, எனக்கும் கற்பித்து எனது ஆரோக்கியத்தை மெருகேற்றிய ஆசானும் கூட.

கவிதைகள் மூலமும் பிறருக்கு நல்ல தகவல்களை கொண்டு சேர்க்க முடியும் என்ற நோக்கில் நிறைய எழுதுகிறார்.

இவரின் பல கவிதைகள் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதே அதற்கு சான்று.

சமீபத்தில்சீறிப் பாயும் என் கவிச் சிந்தனைகள்என்ற பெயரில் தாம் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டார்.




நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த நண்பர்கள் கூட்டம், இவர் மீதான நட்பை சொல்லியது என்றால் , கூட்டத்தினரின் ஏகோபித்த பாராட்டு நண்பரின் கவித்திறனை சொல்லியது.

                                                நண்பர்களின் கருத்து

                                       விழா மேடையில் நண்பரின் பேச்சு

இந்த அகவையிலும் வரிப்பந்தாட்ட (டென்னிஸ்)களத்தில் எதிராளிக்கு சவால் விடும் சூரர்.

Love All , Server All” என்னும் சாய்பாபாவின் போதனையை , ஆட்டக்களத்தில் தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு மட்டுமல்லவாழ்க்கையிலும் கடைபிடித்து  வரும் இவர் தான்                                                                

                          திரு.P.V. வைத்தியலிங்கம் I.R.S அவர்கள்.