சனி, 21 டிசம்பர், 2019

எங்கேயோ கேட்ட குரல்


Are you from India by any chance …?
இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கும் நிகழ்ச்சி நடந்தேறியது 2001ம் ஆண்டு ஜூன் மாதம்.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் மாலை நேரத்தில் பேருந்திலிருந்து இறங்கி இல்லம் திரும்பிக் கொண்டிருந்தேன்.
கேள்வி கேட்ட அமெரிக்கனை நிமிர்ந்து பார்த்தேன் .
கோடை ஆதாலால் அரைகால் சராயும் , பனியனும் அணிந்திருந்தான் .
போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனை யாரும் சட்டை செய்ததாய் தெரியவில்லை.
மீண்டும் அதே வினாவை தொடுத்தான் என் மீது.
பொதுவாய் அமெரிக்கர்கள் நம் மீது மரியாதை கொண்டவர்கள் தான்.
மேலும் பொது இடங்களில் கண்ணியமாய் பழகுபவர்கள் தான்.
ஆனால் இவன் பார்வை என் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது.
இதற்கு முன்பு இவனை பார்த்த ஞாபகம் இல்லை . 
ஊரும் தெரியாது பெயரும் தெரியாது.
பின் ஏன் இப்படி  என்னை முறைக்கிறான் , என்னுள் கேள்வி எழாமல் இல்லை.
விடை சொல்லவில்லை என்றால் அவன் எதிர்வினை என்னவாயிருக்குமோ என்ற அச்சத்தில் தயங்கியபடியே ஆம் என்றேன்.
இன்னும் நெருங்கி வந்தான்.
உங்கள் ஊரில் சாதி எனும் கொடுமையால் மனிதர்களை பிரிக்கிறீர்களாமே.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் என்று பிரிவுகள் இருப்பதாய் கேள்விப்பட்டேனே.
அதற்கு அரசு சான்றிதழ் உண்டாமே.
நீ எந்த பிரிவை சேர்ந்தவன்.
கேள்விகள் கணைகளாக வரவில்லை, தணலாகவே வந்தன.
சிறு வயதிரிலிருந்து வேறுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான்.
இன்று வரை நீ எந்த இனம் என்று ஒருவரையும் கேட்டதில்லை என்று நான் மார் தட்டி கொள்ளலாம் என்று நான் நினைக்கும் போதே ,
அட முட்டாளே அது உன் அடிப்படை கடமையடா என்று மேலெழும் தற்பெருமையை மனசாட்சி அடக்கி வைக்கிறது.
அதே சமயம் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் என்னிடம் சாதி சங்கத்திற்கு நன்கொடை கேட்ட பொது , பல ஆண்டுகளுக்கு முன்பே தர மறுத்தவன் என்று பெருமை பட்டு கொள்கிறேன் .
நினைவுகள் இவ்வாறு ஓடிகொண்டிருக்கும் போதே ,கேள்வி கேட்ட அமெரிக்கருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
வழக்கம் போல் திரு திரு வென விழித்தேன்.
What the F***
மனிதன் எல்லாரும் ஒன்று தானே .உனக்கு இருக்கும் உதிரம் தானே அவனுக்கும்
பிரிவு உண்டாக்கி என்ன பெரிசா சாதித்து விட்டீர்கள்.
தடித்த சொற்கள் வர தொடங்கின
இது தர்மம் சங்கடமான நிலையாக தோன்றவில்லை.
மாறாக மிகவும் இழிவான நிலையாக இருந்தது.
கூனி குறுகி நின்றேன்.
அது பலர் நடமாடும் சாலையாயினும் யாரும் எங்களை சட்டை செய்யவில்லை.
மெல்ல துப்பாக்கி கலாச்சாரம் வேறு என் எண்ணத்தில் மேலோங்க துவங்கியது.
அவரையே நோக்கிய படி பேந்த பேந்த விழித்து கொண்டிருந்தேன்.
என்னிடமிருந்து மறுமொழி ஏதும் வராது என்று சற்று நேரத்தில் அவருக்கு தோன்றியது போலும்.
என்னை முறைத்தபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அடுத்த எகிற துவங்கிய எனது இதய துடிப்பு, சராசரி நிலைக்கு வரவே ஒரு வாரம் ஆனது.
என் அறிவுக்கு எட்டிய வரை ஜாதி என்பது தொழிலின் அடிப்படையில் ஏற்பட்டது என்றாலும், இன்று அதன் எதிர்மறை தாக்கம் ஏராளம் என்றும் ,
என்றும் அதனை நியாயபடுத்த முடியாது என்ற கருத்திலும் ஒத்து போகிறேன்.
ஜாதியை ஒழிக்க வேண்டுமென பல சங்கங்களின் முழக்கம் வெறும் ஏட்டளவில் இருக்கையில், தொலைவில் இருந்து கொண்டு மனித இனத்திற்காக குரல் கொடுத்த அந்த அருமை அமெரிக்கர் இன்றும் என் மனதில் உயர்ந்து நிற்கின்றார்.

சனி, 12 அக்டோபர், 2019

உங்களுக்கு 12 எனக்கு 13


ஓர் ஆண்டிற்கு எத்தனை மாதங்கள்  ?

இந்த கேள்விக்கு 5 ம் வகுப்பு படிக்கும் சிறார்களே 12  மாதங்கள் என்று யோசிக்காமல் விடை சொல்வார்கள்.

ஆனால் இங்கு ஒரு நாடே மிக ஆச்சரியமாய் 13 மாதங்கள் என்று சொல்வது மட்டுமல்ல நடைமுறை படுத்தியும் வருகிறது.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. வாருங்கள் பார்ப்போம்.

மெஸ்கிரிம் என்று துவங்கும் முதல் ( நமக்கு செப்டம்பரில்) மாதத்திலிருந்து  அடுத்த 11 மாதங்களும் 30 நாட்களை கொண்டுள்ளன.

பகுமியினி எனப்படும் 13ம் மாதம் மட்டும் 5 நாட்களை உள்ளடக்கியது.

லீப் ஆண்டுகளில் இது 6 நாட்கள்.

இதன் காரணம் தெரியுமா நண்பர்களே.

உலகமே க்ரெகரி (Gregory) நாட்காட்டியை பின்பற்றும் பொழுது,

இத்தேசம் அப்படியேதும் உத்தேசம் இல்லாமல்,

காப்டிக் எனப்படும் நாட்காட்டியை பின் பற்றுவது தான்.

காப்டிக் நாட்காட்டி என்பது பண்டைய எகிப்திய நாட்டில் வழக்கிலிருந்த ஒன்று தான் 13 மாதங்களுடன்.

உலகிற்கே டிசம்பரில் தான் கிறிஸ்துமஸ் என்றால் இவர்களுக்கு ஜனவரியில்.

க்ரெகரி நாட்காட்டியிலிருந்து சுமார் 7 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதால் உலகமே கொண்டாடிய மில்லினியம் எனப்படும் 2000மாவது ஆண்டு இவர்களுக்கு செப் 2007ல்.

இப்படி இவர்கள் தமக்கென நாட்காட்டியை கொண்டிருந்தாலும் , ஆங்கில நாட்காட்டியையும் சேர்த்தே பல இடங்களில் பின்பற்றுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு பெரிதும் சிரமம் இருப்பதில்லை.

அது எல்லாம் சரி - இது என்ன தேசம்.



ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் மொத்த மலைகளில் 70% மலைகளை தன்னிடம் கொண்ட , குளம்பியின் தாயகமான எத்தியோப்பியா தான் அது.


இறுதியாக ஒரே ஒரு கேள்வி.

ஐந்தே நாட்கள் கொண்ட ஆண்டின் கடைசி மாதத்தில் ஊதியம் எப்படி கணக்கிடப்படுகிறது …..

5 நாட்களுக்கான அல்லது 30 நாட்களுக்கா ..?

தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்.

வியாழன், 20 ஜூன், 2019

பொன்னியின் செல்வன்

தமிழில் வெளி வந்த புகழ் பெற்ற புதினங்களை திரை படங்களாய் எடுக்க, மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் ஒரு சில மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.



கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தில்லானா மோகனாம்பாள் , சுஜாதா அவர்களின் பிரியா ஆகியவை இதில் அடக்கம் என்பது நம்மில் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
தில்லானா மோகனாம்பாள் தொடர் நிறைவு பெற்ற போது ,
நாயகன் ,நாயகியின் திருமணத்தை வாழ்த்தி வாசகர்கள் ஏராளமானோர் ஆனந்த விகடனுக்கு தந்தி அனுப்பினார்கள் என ,
அக்கதையின் தாக்கத்தை இன்றும் சிலாகித்து சொல்லிக் கொண்டிருப்பார் என் தந்தை.

இருப்பினும், அதற்கும் மேலான தாக்கத்தை பொன்னியின் செல்வன் புதினம் நம்மிடையே இன்றும் ஏற்படுத்துகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
மோக முள் கதையில் தி.ஜானகிராமன் அவர்கள் நம்மை 1940களின் குடந்தைக்கே நம்மை இட்டு செல்வதை போலவே ,
ஆடி திருநாளில் துவங்கி வீராணம் ஏரிக்கே இட்டு செல்வதிலும் சரி , குந்தவையுடனும் வந்தியத்தேவனுடனும் ஓடத்தில் நம்மை பயணம் செய்ய வைப்பதிலும் கல்கி அவர்கள் வெற்றி பெறுகிறார்.
மிக அதிக கதா பாத்திரங்களும் , அளவுக்கு அதிகமாக புகுத்தப்பட்ட 
பா மாலைகளும் கதையின் ஓட்டத்தினை சற்றே மட்டுப் படுத்துவதாக நான் கருதுகிறேன்.
இந்த புதினத்தை திரைப்படமாக எடுக்க மேற்கொள்ள பட்ட முயற்சிகள் யாவும் ,
இன்று வரை வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன என்பதே
கல்கி அவர்களின் பெருமையை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

திரையிலும்,அரசியலிலும் வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த MGR அவர்கள் கூட முயற்சித்து பின்னர் கைவிட்டதாகவும் கேள்வி.

ஆயினும் ஒரு வேளை அனைத்தும் கைகூடி வந்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டால், 
யார் யார் எந்த பாத்திரத்திற்கு அழகாக பொருந்துவார் என்று யோசித்தேன்.
இந்த நடிகர் வயது என்ன, இவருக்கு அவர் பொருத்தமா, இப்போது உயிரோடு இருக்கிறாரா போன்ற வினாக்களுக்கு என்னிடம் விடை இல்லை.

பாத்திர தேர்வு என்பது , கல்கி அவர்கள் விவரித்த படியும் , மணியம் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு கிட்ட தட்ட பொருந்தும்படியும் அமைவதும்,
யார் இதனை திரையில் அழகாக செய்ய கூடும் என்பதே.

இயக்குனராக இமயங்களும் , சிகரங்களும் மேலும் பிரும்மாண்டமானவர்களும் எண்ணத்தில் வந்து மோதினாலும் ,
இதற்கு பொருத்தமானவர் திரு. A. P நாகராஜன் அவர்களே என்பதில் ஐயமில்லை.
K.பாக்கியராஜ் அவர்களின் திரைகதைக்கு  பொருத்தமான இசை அமைப்பாளர் K.V மஹாதேவன் அவர்கள் தான்.


ரவி தாசனாக - இணையற்ற நடிகர் பாலையா
   


தேவராளனாக – நடிகவேள் M.R. ராதா
                       
இடும்பன்காரியாக  – அசோகன்
   

நந்தினியாக   - அலட்சிய நடிகை பானுமதி
 
நாகை புத்த பிக்குவாக  -  சத்தியராஜ்



குடந்தை ஜோதிடராக -  தேங்காய் ஸ்ரீனிவாசன்
பினாகபாணியாக –  டணால் தங்கவேலு         
   
தியாக விடங்கராக – VK ராமசாமி


ஈசான சிவபட்டராக  – சுப்பையா
                               
படகோட்டி முருகையானாக - வடிவேலு
        
                    



பார்த்திபேந்திர பல்லவனாக - பார்த்திபன்   
 

அன்பில் அநிருத்த பிரம்மராயராக – T.R மகாலிங்கம்


கந்தமாரனாக - நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ்


மணிமேகலையாக -  நடிகையர் திலகம் சாவித்ரி


சாந்தமான சேந்தன் அமுதனாக

 


அழகிய மதுராந்தகராக - அரவிந்தசாமி



செம்பியன் மாதேவியாக -கண்ணாம்பாள்
 

சுந்தர சோழனாக - நடிகர் திலகம் சிவாஜி


வானவன் மாதேவியாக  - நாட்டிய பேரொளி பத்மினி
 
ஆதித்த கரிகாலனாக - இளைய திலகம் பிரபு
     

ஊமை பெண்ணாக - ஆச்சி மனோரமா
   

புத்திசாலித்தனம் நிறைந்த குந்தவையாக - ரேவதி

                                      
அப்பாவி பெண் வானதியாக - மீனா
  
பித்துக்குளித்தனம் நிரம்பிய பூங்குழலி கதா பாத்திரத்திற்கு - ஊர்வசி   
பெரிய பழுவேட்டரையராக - நம்பியார்


சிறிய பழுவேட்டரையராக  - நாசர்  




ஆழ்வார்கடியானாக - நகைச்சுவை மன்னன் விவேக்


அருள்மொழிவர்மனாக - நவரச நாயகன் கார்த்திக்


வந்தியத்தேவனாக கமல் ஹாசன்



மருதநாயகத்தை கைவிடும் முன்னரே ,
கமல் 80களின் இறுதியில் கல்கிக்கு அளித்த பேட்டியுடன் இந்த திட்டத்தையும் ஏட்டளவில் நிறுத்திக்கொண்டார் போலும்.



ஒரு வேளை இத்திட்டத்தை இவர் நிறைவேற்றி இருந்தால் , 
பொன்னியின் செல்வன் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.