செவ்வாய், 31 மார்ச், 2020

விளையும் பயிர்கள்

"மகள் தந்தைக்கு  ஆற்றும்  உதவி  இவள்  தந்தை
என்நோற்றான்  கொல்எனும்  சொல்"

ஆம் நண்பர்களே,வள்ளுவர் குழந்தைகளுக்கிடையே நிச்சயம் பாகுபாடு கண்டிருக்க மாட்டார் என்பதால் மேற்கூறிய குறளை என் வசதிக்கு மாற்றிக் கொண்டேன்.

இது போன்ற குறளுக்கு பொருத்தமாக ஒரு குழந்தை அல்ல, இருவர் இருந்தால் ..?

இரண்டு இலக்குமிகளை வாரிசாக பெற்ற என் நண்பர் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள அரசு அதிகாரி. 

தமது அதிகாரத்தை நல் வழியில் பயன்படுத்தி பெருமளவில் மக்கள் தொண்டு செய்து வரும் மனித நேயர்.

தந்தை 8 அடி பாய்ந்து வந்ததை பார்த்து வளர்ந்ததனாலோ என்னவோ , குழந்தைகள் இருவரும் 16 அடி பாய்ந்து விட்டார்கள் மிக இளம் வயதிலேயே.

மூத்தவள் நிவேதிதா

அகவை 3ல் -

குழந்தையின் வற்புறுத்தலின் பேரில் ,பெற்றோர் சென்னையில் புகழ் பெற்ற ஒரு பரத நாட்டிய ஆசிரியரிடம் கொண்டு சென்றனர்.

8 வயதுக்கு மேல் தான் மாணாக்களை சேர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கும் ஆசிரியர் நடனத்தில் அவளது செயல் திறன் கண்டு தன்னை மாற்றிக் கொண்டார்.

நடன வகுப்பில் சேர்த்து கொள்ளப் பட்டாள் உடனே.

5 ம் வகுப்பு - குழந்தை தாயிடம் சொல்கிறது.

அம்மா – பள்ளி சுற்றுலாவிற்கு ரூ. 1000 வேண்டும்.
கட்டணம் செலுத்தப்பட்டது.

அடுத்த வாரம் – அம்மா நாளை நான் சுற்றுலா செல்லவில்லை. நான் திட்டமிட்டே தான் செய்தேன். எனக்கு பதிலாக என்னுடன் படிக்கும்  ஏழை மாணவியை அனுப்பலாமா .

இளையவள் காவியா: ஏனம்மா எனது பழைய உடுப்புகளை கரிதுணியாக பயன் படுத்துகிறாய். ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கலாமே.

"தம்மின்  தம்மக்கள்  அறிவுடமை  மா நிலத்து
மன்னுயிர்க்கு  எல்லாம்  இனிது"

தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் என்ற பழமொழிக்கு மாறாக இளம் சிறார்கள் இருவரும் நடந்து கொண்டது வியப்பே இல்லை ,மரபணுவிலேயே தான் அது இருக்கிறதே.

சில வாரங்களுக்கு முன்பு நானும் நண்பர் ராஜேஷ் பிரபாகரன் அவர்களும் , நண்பரின் இல்லம் சென்று நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

குழந்தைகளின் தெளிவு நம்மை அசரத்தான் வைக்கிறது.

மூத்த மகள் பள்ளியில் படிக்கும் போதே தமது எதிர்காலத்தை தேர்ந்தெடுத்து விட்டார், இ.ஆ.ப தான் என்று.

அந்த உறுதியின் காரணமாக தந்தை மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரின்  அறிவுரைகளை செவிமடுக்காமல் , இளங்கலை வரலாற்றை  தேர்ந்தெடுத்தார்.

இவரின் திறமைகள் கொஞ்ச நஞ்சமல்ல பட்டியலிட.....



2 ம் வகுப்பிலேயே வானொலியில் பாடி பொருளீட்ட தொடங்கியவர்.

இளம் வயதிலேயே காரைக்குடியில் உள்ள கோடாக நல்லூர் கோவிலுக்காக தமது சகோதரியுடன் சேர்ந்து பாடிய தெய்வீக பாடல்கள் இசை தட்டாக வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் ரமணர் மகரிஷி அவர்களின் ஆசிரமத்திற்காக இவர்  பாடல் பாடியிருக்கிறார்.

ம் வகுப்பிலிருந்தே சக மற்றும் பள்ளியின் மூத்த மாணவர்களுக்கான நடன இயக்குனராக உருவெடுத்தவர்.

தடகள வீராங்கனையாகவும் பரிமளிதிருக்கிறார்.

தாம் படித்த கல்லூரியில் 2019 – 2020 க்கான மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பங்களிப்பை செய்தவர்.


பொது புலமைக்கான கல்லூரி மற்றும் படிப்பை முடித்து வெளியேறும் சிறந்த  மாணவிக்கான கல்லூரி விருது என விருதுகளின் பட்டியல் நீளுகிறது.

வரலாற்றை அகலவும் மற்றும் ஆழவும் உழுது இன்று துறையின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தேசிய மாணவர் படையில் பணியாற்றியவர். 

தேசிய மாணவர் படையில் காட்டிய செயல் திறன் காரணமாக  குவாலியர் நகரில் நடந்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பிற்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரில் ஒருவர்.


2019 ம் ஆண்டுக்கான குடியரசு தின மாணவர் அணிவகுப்பில் பங்கேற்றவர், தலை நகர் டெல்லியில்.



இதில் சிறப்பு சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36 மாணவர்களில் ஒருவர் என்பது.

கவிதைகள் மூலம் தமது ஆசிரியரின் கவனத்தை ஈர்ப்பவர்.



அருமையான ஓவியர்.



 
                                                                                             
பரதத்தை முழுமையாக கற்று தமது சகோதரியுடன் சேர்ந்து திருமதி வீணை காயத்ரி அவர்களின் தலைமையில் நடன அரங்கேற்றத்தை நிறைவு செய்தவர்.


நிவேதிதாவின் சரித்திர பார்வை சற்றே மாறுபட்டது.

சோழர்கள் இலங்கை , கடாரம் போன்ற நாடுகள் மீது படையெடுத்ததால் , அண்டை நாடுகள் மீது படை எடுத்த தேசத்தின் பட்டியலில் நம் பரதமும் உண்டு  என்ற என் எண்ணத்தை இவர் மாற்றுகிறார்.

ஐரோப்பிய நாடுகள் மற்ற நாடுகள் மீது படையெடுத்தது ஆதிக்கம் செலுத்தவும் , செல்வத்தை அள்ளிச் செல்லவும் தான் , ஆனால் சோழர்கள் செய்தது தேச விரிவாக்கம் மட்டுமே என்று மாறு பட்ட கோணத்தில் இவர் நம்மை சிந்திக்க வைக்கிறார்.

சுதந்திர போராட்ட தலைவர்களிலேயே இன்னும் அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கபட்டிருக்க வேண்டியவர்கள் நேதாஜி அவர்களும் மற்றும் வ.வு.சி அவர்களும் என்ற இவரது குரலில் ஆதங்கம் நன்கு தெரிகிறது.

இளைய மகள் காவ்யா தந்தையை போலவே சீட்டி அடித்து பாடல் பாடுவதில் மிகவும் திறன் பெற்றவர்.

சொன்ன கணத்திலேயே எந்த ஒரு பாடலையும் சீட்டியிலேயே முழுமையாக பாடி நம்மை சொக்க வைக்கிறார்.

மிக தெளிவாக சிந்திக்கும் இவர் நீண்ட கால திட்டம் ஏதும் வைத்து கொள்ளவில்லை. 

மாறாக வாழும் ஒவ்வொரு நாளும் இயன்ற வரை தாம் பிறருக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறோம் என்பதை குறிக்கோளாக கொண்டே வாழ்கிறார்.

ஊட்டியை பூர்வீகமாக கொண்ட தந்தை, 
சாதி / மத பேதம் ஊட்டி வளர்க்கவில்லை ,

மாறாக தாம் சார்ந்த பெருமை மிகு சமூகத்தை பற்றி அணு அணுவாக சொல்லி கொடுத்திருகிறார் மகள்களுக்கு.

( இந்த பெருமை மிகு சமூகத்தை பற்றி ஒரு பதிவிட விரும்புகிறேன் பின்னர்)

இவ்வளவு சொல்லி விட்டு பெற்றோரை பற்றிய தகவலை சொல்லவில்லை என்றால் எப்படி.

தாயார் முனைவர் திருமதி ரேவதி. கல்லூரி உதவி ஆசிரியர்.

தந்தையார் எனது நீண்ட கால அருமை நண்பர் காவல் துறை உதவி ஆணையர் திரு. கிருஷ்ணமுர்த்தி.

குழந்தைகள் தாம் விரும்பிய பாதையில் வெற்றி நடை போட நண்பர்கள் , சான்றோர்கள் ஆகியோரின் ஆதரவையும் நல் வாழ்த்துகளையும் வாரி வழங்குமாய் இரு கரம் கூப்பி வேண்டி கொள்கிறேன்.

சனி, 14 மார்ச், 2020

எங்கே போனார்கள்


திரைத்துறையில் நீண்ட காலம் கொலேச்சியவர்கள் நிறைய இருந்தார்கள்.
இன்றும் கோலேச்சும்  முதியவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் திறமை இருந்தும் பல வெற்றிப் படங்களை கொடுத்தும் கூட , சில காலமே புகழ் பெற்று காணாமல் போனவர்கள் ஒரு சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.

அவர்கள் பல  தரமான படங்களை அளித்தவர்கள் தான்.

அதன் காரணமாகவே இன்றும் நம் மனதில் அடிக்கடி வந்து செல்பவர்கள் தான்.
மோகன் ஒன்றல்ல இரண்டல்ல , சுமார் 25 மேல் வெள்ளி விழா கொண்டாடிய படங்களின் சொந்தக்காரர்.

கோகிலாவில் துவங்கிய பயணம் பல ஏற்றங்களை கண்டு வந்தாலும், உருவம் படம் வந்த பின் இவரது உருவம் திரையில் காணாமல் போனது.

ஒரு வேளை சொந்த குரல் தான் காரணமா ..... ?

கார்த்திக் மற்ற நடிகர்களை விட மனதை கொள்ளை கொள்ளும் அழகு.

பல வருடங்களுக்கு முன் உள்ளத்தை அள்ளி கொள்ளை கொண்டு போனவர் தான்.
இன்று வரை அவ்வப்போது சிறிய கதாபாத்திரங்களில் தலை காட்டிக்கொண்டிருப்பதோடு சரி.

நேரம் தவறாமை தான் காரணமா ..?

பாக்யராஜ் – வேட்டிய மடிச்சு கட்டிய இந்த திரை கதை மேதையின் திறமை அப்புறம் என்ன ஆனதோ தெரியவில்லை.

மாதவன் வந்த புதிதில் இவரது அலை பாயத் தான் செய்தது. இன்று ..?

ராஜேந்தர் கதை, திரை கதை, பாடல்கள், இசை , இயக்கம் , ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு என பல பொறுப்புக்களில் பரிமளித்து  ஒரே நேரத்தில் செய்து, பல வெற்றி படங்களை அளித்தவர்.

இன்று இவரது முகவரி அவ்வப்போது மீமீஸ்களிலேயே தென்படுகிறது.

விவேக் –  இந்த சின்ன கலைவாணரை இனி சின்ன திரையில் தான் பார்க்க முடியுமா தெரியவில்லை.

கவுண்டமணி / செந்தில்  – இவர்களது பங்களிப்பு பல சொதப்பல் படங்களை தூக்கி நிறுத்தி இருக்கிறது என்றால் மிகையில்லை . 

இன்று எங்கிருக்கிறார்கள் .. முதுமை தான் காரணாமா ..?

வடிவேலு மீமீஸ்களின் மன்னர் அல்ல, சக்ரவர்த்தி. இன்றும் நம்மை மகிழ்விக்கிறார் சின்ன திரையில். 

ஆனால் வெண் திரையில் வட போச்சே .

ஏன் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கை தான் காரணமா ..?

சந்தானம் நீண்ட காலம் உலா வர இயலாததிற்கு காரணம்
வடிவேலு போன்ற கொள்கையா ..?

காற்றின் மொழியே , மலரே மவுனமா போன்ற பாடல்களை அளித்த வித்யாசாகர் இன்று மவுனமாகி விட்டார் பெரிதும்.

பொங்கியதே காதல் வெள்ளம் , கண்ணுக்குள் நூறு நிலவா போன்ற நல்ல பாடல்களை அளித்த தேவேந்திரன் எங்கே இன்று ..?

ஒ காதல் என்னை காதலிக்கவில்லை , சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டா போன்ற பாடல்களை தந்த இசை அமைப்பாளர் ஹம்சலேகாவின் வாசம் எங்கே ..?

நீ ஆண்டவனா , நாடோடி மன்னர்களே என்று வானமே எல்லை யிலும் ,
மறக்க முடியவில்லை என்று ஜாதிமல்லியிலும் அருமையான பாடல்களை அளித்த மரகதமணி அவர்களை நம்மால் மறக்கத்தான் முடியவில்லை.

எனக்கு தெரிந்து பழம் பெரும் நடிகர் சிவகுமார் அவர்கள் மட்டுமே ஓய்வை அறிவித்த நடிகர்.

பிறரை பற்றி விடை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

பி.கு : நண்பர் கில்லர்ஜி அவர்களை அச்சு எடுத்து, அவர் எழுதுவதை போன்றே ஒரு பதிவை எழுத  முயன்றுள்ளேன்.

சுமாராக இருந்தாலும் கூட நற்பெயர் அவருக்கே.
இல்லாட்டி கூட  ...