வியாழன், 15 ஏப்ரல், 2021

ஈன்ற பொழுதின்

நாம் இருவருமே ஒரே ஊரில் பிறந்தோம் , ஒன்றாய் படித்தோம் பள்ளி இறுதி வரை.

நுழைவு தேர்வில் உனக்கு கிடைத்தது இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (IIT) பொறியியல் படிப்பு.

எனது ஆர்வத்தினால் நான் தேர்ந்தெடுத்தது இந்திய ராணுவம்.

நீ பொறியியல் படிப்பை தொடர்ந்தாய்

நான் மிக கடினமான பயிற்சியை மேற்கொண்டேன்

உனக்கு வரையறுக்கப் பட்ட பணி நேரம்

எனக்கோ காலை 4 மணிக்கு துவங்கி மாலை 9 வரை , சில நேரங்களில் பணி நேரம் நீளவும் செய்யும்.

படிப்பை முடித்த உனக்கு பட்டமளிப்பு விழா.

பயிற்சிக்கு பின் பணியை மேற்கொண்ட எனக்கு வீர தழும்புகள்.

மிக பெரிய நிறுவனத்தில் வேலை உனக்கு.

எனக்கு மனம் நிறைவான நாட்டுப் பணி.

ஒவ்வொரு பண்டிகைக்கும் / நிகழ்சிக்கும் உனக்கு பெற்றோரை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

எனக்கோ தேசத்தை காக்கும் ஒவ்வொரு நாளும் தீபாவளி

பண்டிகைகளை நீ விளக்கேற்றியும், பொம்மை துப்பாக்கி வெடித்தும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தாய்.

நானோ பதுங்கு குழியில் இருந்தபடி நிஜ துப்பாக்கியுடன் தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன்.

ஒவ்வொரு மாலையும் உன்னை வரவேற்க உனது மனைவி காத்திருந்தார்.

எனது மனைவியோ , ஒவ்வொரு நாளும் நான் உயிரோடு இருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

பணி நிமித்தமாக நீ ஆல்ப்ஸ் மலை மீது பல முறை பறந்தாய் விமானத்தில்.

நானோ பயிற்சியின் ஒரு பகுதியாக மலையேற்றம் பழகிக் கொண்டிருந்தேன்.

நீ இல்லம் திரும்பிய போது , உன் மனைவியால் ஆனந்த கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை.

உன்னை கட்டி அணைத்துக் கொண்டார், நீயும் ஆறுதல் கூறினாய்.

உனக்கு உறவினரின் மலர் மாலைகள்.

நான் இல்லம் திரும்பிய போது எனது மனைவியாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை.

ஆனால் என் மனைவியால் ஆலிங்கனம் செய்ய இயலவில்லை.

எனக்கு மலர் வளையங்கள்.

காரணம் , நான் இருந்தது சவப் பெட்டியில் மார்பில் பாய்ந்த குண்டுகள் மட்டுமல்ல, உடன் வீர பதக்கங்களும்.

இந்த நீயும் நானும் இரு வேறு நபர்கள் அல்ல ,

1996 ம் பிறந்த கேப்டன் அஷுதோஷ் தனக்கு கிடைத்த பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்காமல்,

நமது ராணுவத்தில் சேர்ந்தார் தேசப்பற்றின் காரணமாக.



சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிர் துறந்தார், 24ம் அகவையிலேயே.

இந்த புண்ணிய தேசத்தில், பஞ்சமும் பட்டினியும் வராமல் இருப்பது பல நல்ல தொண்டு உள்ளங்களால், பிரார்த்தனைகள் / யாகங்களால் மட்டுமல்ல.

உன்னை போன்ற நல்ல ஆத்மாக்களும் முக்கிய காரணம்.

சென்று வா வீரனே. நீ என்றும் எங்கள் நினைவில் வீற்றிருப்பாய்.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ,

தன் மகனை (தேசத்திற்காக) மாண்டான் என கேட்ட தாய்.

நன்றி – இந்திய ராணுவம்.

சனி, 10 ஏப்ரல், 2021

சொர்க்கமே என்றாலும்

பல வருடங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு தீபாவளியின் போது எனது சொந்த ஊரான தஞ்சையில் சுமார் ஒன்றரை மாதம் தங்கும் வாய்ப்பு கிட்டியது.

கரோனாவுக்கு நன்றி (கூறும் முதல் நானாக தான் இருப்பேனோ என்னவோ)

அவ்வப்போது நண்பர்கள் திரு.ஜெயகுமார் அவர்களையும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சரவணன் அவர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதுண்டு.

ஒரு நாள் இருவரிடமும் பேசிவிட்டு இல்லம் திரும்பும் போது தான் மனதில் அசை போட துவங்கினேன்.

என்ன தான் பிழைப்பு தேடி என்னை போன்ற நண்பர்கள் தேசங்கள் பல விஜயம் செய்திருக்கிறோம் என்று பெருமை பீற்றி கொண்டாலும் சரி ,

டாலரிலோ அல்லது பவுண்டிலோ ஊதியம் பெற்றாலும் சரி ,

IIT, IISC போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் பயின்று அந்நிய தேசத்தில் நிரந்தரமாக குடி புகுந்தவர்களானாலும் சரி ,

அவர்கள் மன நிறைவு அடைந்து விட்டார்களா அல்லது மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்களா

(ஒரு சிலரை குறை சொல்ல இயலாது, இங்கிருக்கும் சாதி வெறியும் புரையோடிப்போன ஊழலுமே ஒரு சில காரணங்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்)

பணவாசம் சரிமனவாசம் இருக்குமா ..?

கூப்பிட்ட குரலுக்கு இங்கு உடனே வர இயலுமா ..?

நினைத்த மாத்திரத்தில் பள்ளி நண்பர்களுடன் ஒன்றாய் கூடி பழங்கதை பேசி மகிழ இயலுமா ..?

திருவிழாக்களிலும் , திருமணங்களிலும் சொந்த பந்தங்களை சந்தித்து மகிழ முடியுமா ..?

ஒன்று அல்லது இரண்டாண்டிற்கு ஒரு முறை சுமார் 15 நாட்கள் விடுப்பில் வரும் அவர்கள் எத்தனை பேரை சந்தித்து மகிழ இயலும் ..

(அதே சமயம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க குடியுரிமையை, தந்தையரின் உடல் நலம் கருதி உதறி தள்ளிய நண்பன் சீனிவாசனையும், அமெரிக்க குடியுரிமை பெற்ற பின்பும்10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருக்காக தாயகம் திரும்பி விட்ட நண்பன் இளங்கோவையும் இங்கு  நினைவு கூற விரும்புகிறேன்)

இவர்களை விட , பிறந்த ஊரில் தாம் படித்த பள்ளியிலேயே ஆசிரியப் பணி செய்து பல மாணவர்களின் இதயங்களில் என்றும் குடியிருக்கும் நண்பர்கள் ஜெயகுமார் மற்றும் சரவணன் போன்றோர்க்கு கிட்டிய பேறு சிறிதன்று.




கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கலாம்

வயதான பெற்றோருக்கு வேண்டிய நேரத்தில் பணிவிடை

தானா சேர்ந்த (மாணவர்) கூட்டம்

நிறைவான ஊதியம் , புண்ணிய தொழில் மற்றும் மகிழ்வான வாழ்க்கை

இதுக்குமேல வேறென்னங்க வேணும் ...................

ஊரு விட்டு ஊரு வந்து,

ராமராஜன் சும்மாவா பாடி இருக்கார்

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா "