வியாழன், 13 அக்டோபர், 2022

திரைநாயகர்களும் தரை நாயகர்களும்

நட்சத்திர விடுதியின் அறையில் அமர்ந்தபடி இயக்குனர் கதை சொல்ல துவங்குகிறார்.

இரு கரங்களையும் “ப வடிவில் பாரதிராஜா போல் வைத்து இல்லாத ஒளிப்பட கருவியை இயக்கி, கதை சொல்கிறார் தயாரிப்பாளருக்கு.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரியும் திரு.வைத்தியநாதனுக்கு ஆண் மகவு பிறக்கிறது.

பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீனிவாசன் என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

பள்ளி படிப்பை முடித்து பொறியாளர் கனவை எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவனுக்கு கிடைத்த மதிப்பெண் 85% மேல்.

நுழைவு தேர்வில் நன்கு தேறியும் கூட,

இட ஒதுக்கீட்டின் காரணமாக தாம் விரும்பிய பொறியியல் படிப்பு முதல் நிலை கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்ற செய்தி பேரிடியாய் தலையில் இறங்குகிறது.

இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளில் கிடைத்தும் ,

பொருளாதார சூழ்நிலை காரணமாக இளங்கலை படிப்பை தேர்ந்தெடுக்க நேர்கிறது.

81 விழுக்காடுகளுக்கும் மேல் பெற்று, வகுப்பில் முதல் மாணவன் என்ற பெருமையுடன் கல்லூரி படிப்பை முடிக்கிறான்.

வேலையில்லா திண்டாட்டம் என்ற சிக்கலுக்கு நமது கதாநாயகனும் விலக்கல்ல.

தன் முயற்சியில் சற்றும் தளராத அம்புலிமாமாவின் விக்கிரமன் போல் விடா முயற்சியானது ,

சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைக்கச் செய்கிறது.

மிக குறைந்த ஊதியத்தின் காரணமாக நம் நாயகன் சில நாட்கள் பேருந்தை பயன்படுத்தாமல் ,

நடராஜனையே நம்பி அலுவலகம் செல்வதுண்டு.

இவனது இந்த நிலை கண்டு மனமிரங்கும் இந்த நிறுவனத்தின் மேலாளர்கள் இருவர்,

கணிப்பொறியில் இவன் மேலும் தொழில் நுட்பங்களை கற்க பொருளாதார உதவி செய்கிறார்கள்.

நாயகன் வாழ்நாள் முழுதும் செய்நன்றியை மறவாமல் நினைவில் வைத்திருக்கிறான்.

காலச் சக்கரம் மெல்ல உருண்டோடுகிறது.

பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் , முதுநிலை மேலாளர் , பின் இயக்குனர் போன்ற பதவிகளை வகிக்கிறான் நாயகன்.

மிதி வண்டி மிதித்தும் , தொடர் வண்டியில் தொற்றிக் கொண்டும் சென்றவனை இப்போது மகிழ்வுந்து மகிழ்விக்கிறது.

தஞ்சையின் ஏதோ ஒரு சந்தின் மூலையில் ஒண்டுக் குடித்தனம் செய்தவன்

இன்று உலக வரைபடத்தில் மூலைகளில் இருக்கும் தேசங்களுக்கெல்லாம் பறக்கிறான்.


அறிமுக நாயகன் - ஸ்ரீனிவாசன்

பிரம்மச்சாரியாய் இளங்கலை பட்டம் பயின்றவனுக்கு காலப் போக்கில் கணவன் என்ற பட்டமும் பின்னர் தந்தை என்று பட்டங்களும் கிட்டுகின்றன.

கடும் முயற்சியின் பலனாய் இரு முதுகலைகள், ஒரு முனைவர் என பட்டங்களின் பட்டியல் நீளுகிறது 40 வயதிற்கு பிறகும்.


அமைச்சரின் கையால் முனைவர் பட்டம்

நிற்க – இப்படி நாயகன் வளர்ந்து வருகையில் கதையில் திருப்பம் வேண்டுமல்லவா.

தந்தை வைத்தியநாதன் தலையில் பலத்த அடிபட்டு நினைவிழக்கிறார்.

தாயார் திருமதி. ஜெயலக்ஷ்மி கூடவே இருந்து கணவரை, குழந்தை போல் கவனித்துக் கொள்கிறார்.

அடுத்து உணர்ச்சிப் பிழம்பான காட்சி (அதாங்க sentiment) .

ஒரு நாள் தாயார் பூஜை அறையில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை சொல்லியபடி முழங்தாளிட்டு கடவுளை வணங்குகிறார்.

வணங்கியவர் இறைவன் தாள் பற்றியபடியே அவனடி  சேர்கிறார் பூஜை அறையிலேயே.

தாயார் மரணம் என்ற துக்கத்தில் நாயகன்.......

இதை பற்றி எதுவும் தெரியாத நிலையிலோ தந்தை.........

இதற்கிடையே தாம் நீண்ட நாட்களாக பணிபுரிந்த நிறுவனம் ,  அயல் நாட்டிற்கு கட்டாய பணி மாற்றம் செய்கிறது.

நினைவு தவறிய தந்தையை, நித்தம் தவறாமல் நினைவில் நிறுத்தியிருக்கும் நாயகன்

தந்தையே முக்கியம் என்று வேறு நிறுவனத்தில் வேலை கிடைக்காமலே இப்பணியை துறக்கிறான்.

நீண்ட நாட்களாக அப்படியே இருக்கும் தந்தை , தம் துணைவியார் மறைவை பற்றி ஏதும் அறியாமலே இயற்கை எய்துகிறார்.

தந்தையின் மறைவு அளித்த சோகத்தை விட, அவர் தம் மனைவியின் மரணம் பற்றி ஏதும் அறியாமலே உயிர் நீத்த நிகழ்வு,

நாயகனை மீளாத் துயரில் ஆழ்த்துகிறது.

பீனிக்ஸ் பறவையாய் மீண்டு(ம்) எழுந்த ஸ்ரீனிவாசன் இன்று “Tigma Technologies என்ற பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.


தலைமை செயல் அதிகாரியாக வெளிவந்த அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் 10 நம்பிக்கை அளிக்கும் வியாபார நுண்ணறிவு (Business Intelligence) சேவை நிறுவனங்களில் ஒன்றாக டிக்மா நிறுவனத்தை , சிலிக்கான் இந்தியா என்ற சஞ்சிகை தேர்ந்தெடுப்பதற்கு மூல காரணமாகிறான். 


சிலிக்கான் இந்தியா நிறுவனத்திற்கு ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டி

என்ன சார் இப்படி கதையை முடிக்கலாமா என்று தயாரிப்பாளரை வினவுகிறார் இயக்குனர்.

திரையில் தோன்றும் நாயகரை போற்ற தெரிந்த பலருக்கு , தரையில் நம் கண் முன்னே தெரியும் ஸ்ரீனியை போன்ற பல நிஜ நாயகர்களை தெரிய வாய்ப்பில்லை.

செலவை பத்தி கவலை படாம இந்த கதையே படமா எடுங்க என்ற படி கிளம்பினார் தயாரிப்பாளர்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிலம்பாட்டம்

சிலம்பத்தை விட ஒல்லியான உடல் வாகு.

எடுத்து சுழற்றினால் சிலம்பம் போலவே இவரை எளிதாக சுழற்றி விடலாம் என்றே தோன்றுகிறது.

"வாங்க" என்று புன்னகைத்த படி என்னை சற்று காத்திருக்க சொன்னார்.

மார்கழியின் தொடக்கத்தில் ஒரு நாள் அதிகாலை எங்கள் பள்ளி விளையாட்டுத் திடலை சுற்றி  வந்து கொண்டிருந்த போது,

சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டத்தை கண்டேன்.


அவர்களிடம் பயிற்சியை தொடருமாறு சொல்லி விட்டு என்னிடம்  உரையாடலை தொடங்கினார்.

ஆசான் பெயர் யோவான்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ராமலிங்கம் எனும் காவல் ஆய்வாளரிடம் இக்கலையை கற்றுத் தேர்ந்திருக்கிறார் இவர்.

தேசிய / மாநில அளவிலும் பெற்ற பரிசுகள் போதாதென்று ,

பிரான்ஸ் நாட்டில் நடந்த சிலம்ப போட்டியில் பங்கேற்று நமக்கு பெருமை சேர்த்தவர்.

சிலம்பம் என்பது கம்பு மட்டுமே தொடர்புடைய

தற்காப்புக் கலை என்று தவறாக நினைத்திருந்த எனக்கு,

இவரது பதில் ஆச்சரியத்தை தந்தது.

முதல்ல நாங்கள் கராத்தே / குங்குபூ  மாதிரி கையால பாதுகாத்துக்கற வழியை சொல்லி தருவோம் .

அதுக்கு அப்புறம் தான் சிலம்பம் பழக ஆரம்பிக்கணும்.

சிலம்பம் எதனால் செய்யப் படுகிறது

பச்சையா மரத்திலிருந்து வெட்டி எடுத்த உடனே நாம விளையாட முடியாது.

குச்சியை உறுதி படுத்துற வழி முறைகள் கொஞ்சம் இருக்கு.

அதன் படி நாங்க செஞ்சு உறுதியான்னு சரி பாத்து

அப்புறம் தான் விளையாடுவோம்.

ஆரம்பத்துல மூங்கில் மாதிரி மரத்துல செஞ்சாங்க.,

கல் மூங்கில் மரத்துல  சிலம்பு செஞ்சா ரொம்ப உறுதியா இருக்கும்,

நிறைய நாள் விளையாடலாம்.

இப்போ கல்லு மூங்கில் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமுங்க சார்.

ஆல மர விழுதுலயும் செய்றதுண்டு.

இப்பல்லாம் பெரும்பாலும் பிரம்பை கொண்டு தான் செய்றாங்க.

இக்கலையில் பலவகைகள் உண்டா

கள்ள புத்து , கரடி பீடம் , குறவஞ்சி மற்றும் நாகபாசம் அப்படின்னு ஒரு சில வகை இருக்குங்க.

போட்டியில் எதை கொண்டு ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப் படுகிறார்

புள்ளி கணக்கு தான்.

எத்தனை தடவை எதிராளி மேல ஒருத்தன் தன்னோட சிலம்பத்தால நெத்தி, தோள் பட்டை , கை இது மாதிரி இடங்கள்ல பொட்டு வைக்கிறான் அப்டிங்கறதை வச்சு தாங்க வெற்றி .

இதன் பூர்வீகம்

நம்ம தமிழ்நாடு தாங்க. ஆதி காலத்துல மனுஷன் மிருகங்க கிட்டயிருந்து பாதுகாத்துக்கறதுக்கு செஞ்ச முயற்சி பின்னாடி சிலம்பமா மாறிடுச்சுங்க.

அதனால இந்த கலையில நாங்க செய்ற ஒரு சில அங்க அசைவுகள் விலங்கு மாதிரி இருக்கும்.

சிலம்பம் கற்றுக் கொள்ள ஏதேனும் தகுதி

ஆர்வம் ஒன்னு தாங்க.

அப்புறம் மெய்ப்பாடம்ன்னு எங்க மொழியில சொல்ற மாதிரி.

மாணவன் உடலையும் மனதையும் உறுதி படுத்திக்கணும்.

அப்புறமா தான் நாங்க சிலம்பத்தையே கையில கொடுப்போம்.

இதுவரை சுமார் எத்தனை சீடர்களை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள்

கடந்த 26 வருஷத்துல சுமார் 5000 மேல சொல்லி குடுத்திருப்பேங்க

மாதாந்திர கட்டணம் எவ்வளவு

கறாரா கேட்டதில்லைஅவங்களா எது குடுத்தாலும் வாங்கிப்பேன்.

எனக்கு இந்த கலை வளரணும். அது தாங்க முக்கியம்.

போட்டிக்கு வெளியூர் போன அனுபவம்

தமிழ்நாடு முழுக்க அப்புறம் ஆந்திரா , கர்நாடக டெல்லி மாதிரி இடங்கள்லாம் போயி போட்டியில கலந்துக்கிட்டு இருக்கோம்.

திறமை இருக்குற மாணவர்கள் அப்போ போட்டிக்கு வர முடியலைன்னா என் வீட்டு பித்தளை சாமான்களை அடகு வச்சு அவங்கள நிறைய தடவ கூட்டு போவேனுங்க.

(அருகில் இருக்கும் அவரது ஆஸ்தான சீடர் கார்த்தி அதனை வெகுவாக ஆமோதிக்கிறார்)

உங்கள் சீடர்களில் குறிப்பிடத்தக்க வகையில் யாரும்

அவங்கள்ல வைத்தியர்கள் ,ஒரு சில போலீஸ் ஆளுங்க, ஒரு பெண் நீதிபதி இப்படி உண்டுங்க.

உங்க புகைப்படம் கிடைக்குமா

வேணாங்க.அப்படி ஒன்னும் நான் பெரிய ஆள் இல்லையே

இப்படி பணம் எதுவும் வாங்காமல் சொல்லி தருகிறீர்களே, நிறைய படிச்சுட்டு ஒரு பெரிய வேலையில் இருக்கிறீர்களா

நான் ஒரு ஜவுளி கடையில பட்டு துணி செக்ஷன்ல “salesman” ஆ இருக்கேங்க.

நமக்கு தான் படிப்புக்கான அஸ்திவாரம் அஞ்சாவதோட அஸ்தமனம் ஆயிடுச்சுங்களே.



மானிட சேவை என்பது கலைகளை வளர்ப்பதிலும் இருக்கிறது என்பதை நமக்கு  என்பதை இவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.


"வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்"