செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

சகலகலா வல்லவன்

ஒரு மனிதனால் பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்க முடியுமா .

முடியும் என்று சொல்லில் மட்டுமல்ல.., தாம் கற்ற கலைகளில் நிபுணர் என்பதை செயலிலும் நிரூபித்து வருகிறார் இந்த வல்லுநர். 

பெயர்திரு .ரவிந்திரன்.

அக்குபஞ்சர் சிகிச்சையினை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இவருக்கு, 

சுஜோக் எனப்படும் கை விரல்களுக்கிடையே புள்ளிகளை

தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிப்பது கை வந்த கலை.

சில வாரங்களுக்கு முன் நானும் நண்பர் பாலுவும் இவரது இல்லம் சென்றிருந்தோம்

சுற்றிலும் மா ,தென்னை, சப்போட்டா ,எலுமிச்சை ,பப்பாளி என பலவகை மரங்கள் , செடிகள் என வண்டலூர் அருகே ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது இல்லம்.

வாங்க என்று அன்புடன் வரவேற்கிறார் ,

கூடவே அவரது செல்ல பிராணியான அப்புவும் வாலை ஆட்டி வரவேற்கிறது.



பழங்களை போலவே இவரது குணமும் இனிமையாய் இருப்பதால் ,

உடலுக்கு ஏறிய கனமானது, தலைக்கு ஏறவில்லை .

நண்பரின் குடும்பம் அளித்த விருந்தோம்பலில் திளைத்தபடி உரையாடலை துவங்கினோம்.

தமது செல்வங்களுடன்

இல்லத்தினருடன்

                             சகோதரர் குடும்பத்தினருடன் 

உங்களின் தொடு சிகிச்சை பயணம் பற்றி

சுமார் 10  ஆண்டுகள் முன்பு கம்பம் கல்வி குழுமத்தில் பயின்று, தற்போது சென்னையில் 3  இடங்களிலும் , புறநகர் பகுதிகளில்  2 சிகிச்சை நிலையங்களும் வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

சுமார் 5 - 10 லட்சம் நோயாளிகளுக்கு வணிக நோக்கமற்ற சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது எனது வாழ் நாள் குறிக்கோள்.

அலோபதி மருத்துவருக்கு இணையாக அல்லது மேலாக உடற்கூறு பற்றியும், நோய்க்கான காரணங்கள் / தீர்வுகளையும் உங்களால் எப்படி எளிதாக சொல்ல முடிகிறது.

அலோபதி பாரதம் வந்து ஒரு நூற்றாண்டு தானே இருக்கும். அதற்கு முன்பே நாம் பல்லாயிரம் வருடங்களாக சித்த / ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோடிகள் அல்லவா .

அப்புறம் உங்கள் வினாவிற்கு விடை - தொடு சிகிச்சை நிலையம் துவங்கும் போதே நான் என்னை நன்கு ஆயத்தப் படுத்திக் கொண்டேன் .

நண்பரின் மருத்துவம் பற்றிய பேச்சு இணைய தளத்தில்

ஏன் தலைவலி வருகிறது

நோயின்றி வாழ

உங்களின் இசையுலக பயணம் பற்றி ......

நானே பாடவும் , குழல் இசைக்கவும் கற்றுக் கொண்டேன்.

குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் , ராகங்களை முழுமையாக கற்பதற்கும்  மட்டுமே குருவின் உதவியை நாடினேன்.

பல திரை பாடல்களுக்கு குழல் வாசித்திருக்கிறேன்.

புகழ் பெற்ற பாடகர்கள் திரு.யேசுதாஸ் , ஷங்கர் மகாதேவன் , ஹரிஹரன் மற்றும் மறைந்த SPB ஆகியோருடன் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பலமுறை மேடை ஏறி இருக்கிறேன் என்பது பெருமை என்று சொல்வதை விட எனக்கு மகிழ்ச்சி என்பதே பொருந்தும்.

                    மேடையில்

அப்படி என்றால் மறக்க முடியாத அனுபவங்கள் இருக்க வேண்டுமே …………..

இங்கிலாந்து பர்மிங்ஹாம் நகரில் ஹரிஹரன் "உயிரே" பாடல் பாடுகிறார்.

திடீரென எழுந்த பார்வையாளர்கள் கரவொலி சுமார் 3 நிமிடம் நீடித்தது.

பாடகர் நன்றி கூறி விட்டு மீண்டும் துவங்க,

பார்வையாளர்களோ இது குழல் வாசிப்பவருக்கு என்று சொன்னதோடு , மீண்டும் கரவொலி மூலம் பாராட்டுதலை தெரிவித்தார்கள்.

வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

திருக்கழுகுன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீபம் என்ற விழா நடப்பது வழக்கம்.

சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் விழாவில் நாங்கள் காலை 11 மணி அளவில் இசை கருவிகளோடு கோவில் குளத்திற்குள் படகில் செல்வோம்.

பசிக்காகவோ , இயற்கை உபாதைக்காகவோ நினைக்கும் நேரத்தில் கரைக்கு சென்று வர இயலாது. 

அதற்கு சுமார் 12 மணி நேரம் ஆகும்.

இது வரை 2 முறை அந்த விழாவில் பங்கேற்று எனது இசை பங்களிப்பை செய்துள்ளேன் என்பது மனநிறைவான செய்தி.

1988 இல் அகில இந்திய அளவில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றேன் , IUCS (Inter university Cultural Services) நடத்திய குழல் போட்டியில்.

இந்த விருதை எனக்கு வழங்கியவர் ,மரியாதைக்குரிய நமது முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள்.

மனதை கொள்ளை அடிக்கும் இந்தி பாடல்

இசைக்  கலையை பிறருக்கு கற்றுத் தருகிறீர்களா

பல திரை இசை கலைஞர்களும் , பிரபல நடிகர்களும் மற்றும் தொடு சிகிச்சையில் புகழ் பெற்று விளங்கும் ஒரு சிலரும் எனது மாணாக்கள்.

தொடு சிகிச்சையில் எனது ஆசாயிருந்தவர்க்கு இன்று நான் புல்லாங்குழலில் ஆசான்.

நீங்கள் என் மாணவர் தானே. 😊

இக்கலை வளர வேண்டுமென்ற நோக்கில் ,

நான் கட்டணம் எதுவும் பெரிதாய் கேட்பதே இல்லை.

ஆசானை மிஞ்சிய சீடன் என்று பேர் வாங்குவதே ,

நீங்கள் அனைவரும் எனக்கு பெற்று தரும் ஊதியம்.

எப்படி குழல் கற்க துவங்குவது


மேடை கச்சேரியில்




அடுப்பில்லா சமையலிலும் நீங்கள் சிறந்தவராமே.

GEM தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் வெளியாகும் உங்கள் சமையல் நிகழ்ச்சி பிரபலம் என்று கேள்வி பட்டோமே....

பட்டாசு வெடிப்பது போல சிரிக்கிறார்.

சமையற்கலை என்பது எனக்கு சிறு வயதில் ஒரு சித்த மருத்துவர் கற்றுத் தந்தது.

உணவின் சுவையை கூட்டவும் அதனை மாற்றவும் நமது எண்ணங்களால் இயலும் என்பதை நிரூபித்து காட்டவும் செய்தார் .

நான் சமையற்கலை கற்க இவரே மூல காரணம் .

ஆர்வத்தின் பேரின் தான் இதையும் கற்றுக் கொண்டேன்.

எப்படியோ தொலைக்காட்சி வரை சென்று விட்டது.       

தற்போது வாரம் மூன்று முறை என GEM TVயில் எனது சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

GEM TV நிகழ்ச்சியில்

சப்போட்டா சக்கரை பொங்கல்

மிளகு அவள் சாதம்

வாழைப் பழ பகாளா பாத்

ஆய கலைகளில் எதையும் விட்டு வைக்கும் எண்ணம் இல்லை போல் இருக்கிறதே.

வர்மக்  கலையில் இந்தியன் தாத்தாவிற்கு நீங்கள்  போட்டி என்று கேள்வி பட்டோமே.

இப்போது பட்டாசு அல்ல,  சரவெடி வெடித்தது.

10 வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பரும் காஞ்சிபுரம் செல்கையில் வர்மக்கலை அறிந்த ஒரு மூதாட்டியை சந்திக்க நேர்ந்தது.

அவர் மூலமாக வேலூரில் இருக்கும் பயிற்சி பள்ளி பற்றி அறிந்து கொண்டு பின்னர் அங்கு பயின்றோம்

வர்மக்கலை என்பது இந்தியன் படத்தில் வருவது போல் , பெரும்பாலும் பிறரை தாக்குவதற்காக அல்ல , அது உயிர் காக்கும் மருத்துவமே என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இக்கலையில்  நான் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்.

உங்கள் சமூக சேவை பற்றி.... ...

மிகுந்த தயக்கத்திற்கு பின்னரே விடையளித்தார்.

(செய்யும் பணியை வெளியில் சொல்ல கூச்சப்படுவதே காரணம்)

கரோனா காலத்தில் நலிந்தோர்க்கு குறிப்பாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமக்கு தெரிந்தோரிடம் பணம் / பொருள் வசூலித்து

5-6 மாதங்கள் அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை  வழங்கி வந்தேன்

இதனில் எனது பங்களிப்பு மட்டுமே சுமார் 1.75 லட்சம்.

2015 ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்த போது வண்டலூரை சுற்றிய பகுதிகளில், சுமார் ஒரு வார காலம் உணவு வழங்கினேன்.

வடியாத வெள்ளத்தில் நாம் கால் வைக்கவே யோசிக்கும் நேரத்தில், இஸ்லாமிய நண்பர்களும் ,நானும் உணவை சுமந்து கொண்டே அழுக்கு நீரில் நீந்தி சென்று பல நாட்கள் உணவு மற்றும் நீர் குடுவைகளை வழங்கியதை இன்றும் சுற்று வட்டாரம் மறக்கவில்லை.


நண்பருக்கு வணக்கம் சொல்லி விடை பெற்றோம்.

64 கலைகளில் சமூக சேவை என்பது இருக்கிறதா என்பது தெரியவில்லை .

அப்படி இல்லை என்றால்,  

65 வது கலையாக இதுவும் சேர்க்கப் பட வேண்டும் என்பதற்கு 

முழு முதற்காரணமாக நம் கண் முன்னே மனித நேயம் மற்றும் ,மருத்துவ உலகின் மூலமும் தொண்டு செய்து வரும் ,

எனது ஆசானை இப்பதிவின் மூலம் அறிமுகம் செய்து வைப்பதில் நான் மகிழ்வு கொள்கிறேன்.