வெள்ளி, 29 அக்டோபர், 2021

46 ஆண்டு கால இடைவெளி

90 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு சிதிலம் அடைந்து கொண்டிருந்த எங்கள் தஞ்சை இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட விரும்பி, வேலைகளை துவங்கினோம் 2017ம் ஆண்டு இறுதியில்.

இல்லம் கட்டி முடிக்கும்முன் தஞ்சையை அடுத்த வல்லத்தில் இருக்கும் எங்கள் குல தெய்வ கோவிலை புதுப்பித்து பூஜை செய்ய ஆவல் கொண்டேன்.



           குலதெய்வம் - நந்தவனத்து வீரனார்         

என் சித்தப்பா திரு.சிவகுமார் அவர்களிடம் இதனை ஒரு தகவலாய் தெரிவித்து விட்டு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

சில நாட்கள் கழித்து என்னை அலைபேசியில் அழைத்தார் அவர்.

உறவினர்கள் அனைவரும் இணைந்து குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டுமென்ற அவரது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவோம் என்றார்.

18–ஏப்ரல்-2018 என்று நாள் குறித்துக் கொடுக்கப்பட்டது எங்கள் பாட்டனாரால்.

அனைத்து உறவினர்களுக்கும் பூஜையை பற்றிய தகவல் தெரிவிப்பதும், கோவில் பணிக்கான பணம் வசூலிக்கும் பொறுப்பும் எனக்கும் எனது ஒன்று விட்ட சகோதரர் சரவணன் அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.

ஒவ்வொரு உறவினரையும் அலைபேசியில் அழைத்து பேசும்போது தான்,

எங்கள் தலைமுறையில் எனக்கு தெரிந்திராத பல உறவினர்கள் அறிமுகமானார்கள்.

பூஜைக்காக முன் வந்த ஒவ்வொருவரின் ஆர்வத்தையும்,பங்களிப்பையும் என்னால் எழுத்தில் வடிக்க இயலாது.

மறைந்த விளையாட்டு வீரர் திரு. VB சந்திரசேகருடன் மாநில அளவில் மட்டைப் பந்து விளையாடிய சித்தப்பா, ஒன்று விட்ட அத்தை /  மாமா என்று தூரத்து உறவாய் இருந்தவர்கள்,

ஒன்றும் விடாமல் நெருங்கிப் பழகும் அளவிற்கு வந்தார்கள்.

அலைபேசியில் குழுவாக கூடி அலசினோம் / பேசினோம் நிகழ்ச்சி நிரல்களை.

நந்தவனத்து வீரனார் என்ற குல தெய்வத்தின் பெயருக்கேற்ப கோவிலை நந்தவனம் போல் மாற்றிட வேண்டுமென தனது ஆவலை தெரிவித்தார் எங்கள் தாத்தா .

அப்பணியை ஓவிய கலையில் சிறந்தவரான சித்தப்பா (திரு)நாவுக்கரசு அவர்கள் ஏற்றுக்கொண்டார்.


உணவு ஏற்பாடுகளை சித்தப்பா அம்பிகாபதி அவர்கள் மேற்கொண்டார்.

கோவில் அலங்காரம் மற்றும் பூஜை பொருட்கள் வாங்கும் பொறுப்பை சகோதரர் சரவணன் மேற்கொண்டார்.

உறவினர்கள் அனைவரும் தங்கள் சக்திற்கேற்ப தயக்கமின்றி பங்களிப்பை செய்தார்கள்.

நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பானது, கோவிலை சுற்றி ஓடுகள்(அதுதாங்க Tiles ன்னு கூகுள் சொல்லுது) பதிக்கும் பணியும் , வர்ணம் அடிக்கும் வேலையும்.

பூஜை நாளும் வந்தது.

அதிகாலை 5.30 மணிக்கே குழுமி விட்டோம்.

சுமார் இரண்டு மாதங்களாக தொலைபேசியில் பேசி வந்த பல குரல்களுக்கு அன்று உருவம் கண்டு மகிழ்ந்தோம். 

களிமண் / சந்தனம் கொண்டு சாமி சிலை செய்தல் மலர் மாலைகளை கொண்டு கோவிலை அலங்கரித்தல் போன்ற வேலைகளை முடித்தோம்.

பெண்களும் பூஜைக்கு வேண்டிய பிரசாதங்களையும் இன்ன பிற இத்யாதிகளையும் தாமதமின்றி செய்து கொடுத்தார்கள்.

உறவினர்களிலேயே மூத்தவரான 90 அகவை நிரம்பிய திரு.நடராஜன் தாத்தா அவர்களும் அவரது துணைவியாரும் அதிகாலையிலேயே தம்பதி சகிதமாய் அனைவரையும் வரவேற்றது எங்கள் இதயத்தை நெகிழச் செய்தது.

    

பாட்டனார் பூஜையை சிறப்பாக செய்து கொடுத்தார்.

அன்றைய நாளில் குல தெய்வ பூஜையை ஒரு திருவிழாவாகவே நாங்கள் கொண்டாடினோம் என்றால் அது மிகையில்லை.

1972ல் தான் எங்கள் முன்னோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமரிசையாக நடத்தியிருந்தார்கள்.






                        முன்னோர்கள் அன்றும்

அதன் பிறகு தனித்தனி குடும்பமாகவே பூஜை நடைபெற்று வந்தது.

46 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2018ம் ஆண்டில் தான்

குல தெய்வ பூஜை விமரிசையாக நடைபெற்றது.

சும்மாவா பின்னே, பூஜை அன்று வந்திருந்த உறவினர்களின் எண்ணிக்கை 83 என்பது எங்களுக்கு மிகப் பெரும் சாதனையே.



                        இந்த தலைமுறை இன்றும்

இனி குல தெய்வ பூஜை ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் நடைபெற வேண்டுமென்று

பாட்டனார் அவர்கள் கூறியதை நாங்கள் ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறோம்.

இந்த பூஜை ஒவ்வோர் ஆண்டும் நிச்சயம் தொடர வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஆயினும் இதற்கு மூல காரணமாயிருந்த தாத்தா அதே ஆண்டு டிசம்பரில் மறைந்தார் என்பது மனதை பிழியும் செய்தியே.

இதனை மீண்டும் துவக்கி வைத்த மூவரில் நானும் ஒருவன் என்பது எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதை விட மனநிறைவு என்ற சொல்லே சால பொருந்தும்.