சனி, 24 அக்டோபர், 2020

என்னை கவர்ந்தவை

சிறுவயது முதல் பஞ்சதந்திரம், பரமார்த்த குரு கதைகள் என சிறுவர் புதினங்களை படித்து  வளர்ந்திருந்தாலும் , காலப் போக்கில் நானும் உங்களை போல் எழுத்தாளர்களை மாற்ற துவங்கினேன்.

எனது முதல் புதினம் , என் பள்ளி நண்பனும் கமலின் தீவிர வெறியனுமான சரவணகுமார் பரிந்துரைத்த சாண்டில்யன் அவர்களின் “மஞ்சள் ஆறு” .


                               நண்பன் சரவணகுமார்

அதன் பின் யவன ராணி , கடல் புறா என அவரை தீவிரமாக பின்பற்றி வருகிறேன்.

இடையே பிகேபி , சுஜாதா மற்றும் தேவன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் என்னை(யும்) தங்கள் எழுத்துக்களில் இளமை மாறாமல் என்றுமே ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பல புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் நம்மை கவர்ந்தாலும் எழுத்துலகில் அவ்வளவாக பெயர் பெற்றிராத ஆயினும் என் நினைவில் என்றும் பதிந்திருக்கும் இரு நூல்களை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

தனிக்குடித்தனம் , ஊர் வம்பு போன்ற நாடங்கள் மூலமாக நமக்கு அறிமுகமான எழுத்தாளர் மெரினா அவர்கள் தம் சிறு வயது குறும்புகள் பற்றி எழுதியிருக்கும் , இல்லை இல்லை எழுத்திலேயே வாழ்ந்திருக்கும் நூல் தான் " சின்ன வயதினிலே ".





பட்டம் விடுதல் , பளிங்கி மேலும் பம்பரம் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தவராக இவர் தாம் செய்த லூட்டிகளை வருணிக்கும் விதம் , அக்காலத்திற்கு இட்டுச் செல்லுவது மட்டுமல்ல நமக்கு ஏக்கத்தையும் வரவழைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.




தந்தையின் பராக்கிரமங்களை விவரித்து ஈர்த்த இவர், அவரின் மரணத்தை பற்றியும் எழுதி வாசிப்போரை கண்ணீர் சிந்தவும் வைக்கிறார்.

எப்படி "பொன்னியின் செல்வன்" புதினத்தை என்ன தான் முயற்சி செய்து எடுத்தாலும் நம் கற்பனைக்கு ஈடாய் , அந்த செல்லுலாய்டினால் எதுவும் தர இயலாதோ அப்படி தான் , எத்தனை “Autograph” கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஈடாகாது என்பது என் ஆணித்தரமான கருத்து.

அப்புறம் , வாங்க சினிமா பத்தி பேசலாம்.

நான் இல்லை , பாக்யராஜ் தாங்க அப்படி அழைக்கிறார்.



(இந்த நூலை 90களில் எனக்கு அறிமுகம் செய்து வைத்த பள்ளி நண்பன் பாலுவிற்கு நன்றி)

திரைக்கதை மேதை என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு பாக்யா வார இதழின் கேள்வி பதில் பகுதி இவர் எழுத்தாளர் என்பதையும் காட்டியது.

ஆனால் இந்நூல் இவரது திறமையை நன்கு வெளிக்கொணர தான் செய்கிறது. 

ஆசிரியர் அழகாக அலசியிருப்பது ஒன்றோ இரண்டோ அல்ல, கிட்ட தட்ட தமது அனைத்து படங்களின் கதை, மற்றும் அதன் திரைக்கதை உருவான விதம் பற்றியும் தான்.


எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்தாலும் தாவணி கனவுகள், சின்ன வீடு , ஆராரோ ஆரிரரோ என ஒரு சில படங்கள் எப்படி தோல்வியை தழுவின என்று இவர் ஆராயும் விதம் நிச்சயம் வருங்கால இயக்குனர்களுக்கு ஒரு பாடமே.

எல்லாம் சரி , இவரது  தூறல் நின்னு போச்சு , அந்த 7 நாட்கள் , மௌன கீதங்கள் போன்ற படங்களில் யாருங்க எதிர்மறை நாயகன்.

அது வேறு யாரும் இல்லை , சூழ்நிலையே தான் என்று இவர் அலசும் விதம் ரசிக்கத் தக்கதே .

வாய்ப்பு கிடைத்தால் போங்க, நூல்களை அலசி பாருங்க.

சனி, 18 ஜூலை, 2020

மானிடராய் பிறத்தல் அரிது , அதிலும் .......

ஸ்ரீகாந்த் –ஊக்கத்திற்கு மறு பெயர் என்றே இவரை நாம் கருதலாம்.

1991 ம் ஆண்டு மச்சிலிபட்டினம், ஆந்திராவில் பிறந்தவர்.

பள்ளி படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு அங்கு கிடைத்த வரவேற்பு மாறுபட்டது.

கடைசி இருக்கையில் அமர்த்தப்பட்டார்.

சக மாணவர்களுடன் விளையாட்டு நேரங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

கரோனா காலத்திற்கு முன்பே இவர் தனிமை படுத்தப்பட்டார்.

இருப்பினும் தடைகளை தகர்த்தெறிந்து 10 ம் வகுப்பில் 90% பெற்றார்.

11ம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்காக விண்ணப்பித்திருந்த இவருக்கு இளங்கலை பாடத்தை மட்டுமே தேர்வு செய்ய இயலும் என்ற செய்தி இடியாய் இறங்கியது.

நீதிமன்ற உதவியை நாடினார்.

6 மாதங்களுக்கு பின் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

ஆயினும் ஒரு சில நடை முறை சிக்கல்களை கருத்திற் கொண்டு, படிப்பின் முழு பொறுப்பும் மாணவரை சார்ந்தது என்ற நிபந்தனையும் இடப்பட்டது.

ஏற்றார். 12 ம் வகுப்பில் இவர் பெற்றது 98%.

நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த இவருக்கு கல்லூரிகள் தந்த செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை ....

10ம் வகுப்பில் பெற்றிருந்த பட்டறிவே காரணம்.

தகுதியுள்ள மாணவர் உதாசீனப்படுத்தப் பட்டார்.

கல்லூரிகள் இவரை நுழைவு தேர்வை கூட எழுத அனுமதிக்கவில்லை.

மதியாதார் வாசலை மிதியாதே என்ற எண்ணத்தில் இவர் நம் நாட்டில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நேரடியாக அமெரிக்காவில் விண்ணப்பித்தார்.

MIT (Massachusetts Institute of Technology) , Stanford , Berkeley மற்றும் Carnegie Mellon ஆகியவற்றில் இடம் கிடைத்தது.

உலகப் புகழ் பெற்ற MIT யில் பட்டம் பெற்றார்.

அமெரிக்க டாலரை விரும்பாமல் நம் மக்கள் மீது பாசம் கொண்டு பாரதம் திரும்பினார் ,

தம்மை போல இன்னலுறும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உறுதி கொண்டார்.

2012 பொல்லன்ட் என்ற நிறுவனம் துவங்கப் பட்டது.

சுற்று சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் பொருட்களான மண் குடுவைகள் , கோப்பைகள் போன்ற பொருட்களை தயாரிக்கிறது இந்நிறுவனம்.

தென்னிந்தியா முழுவதும் 5 உற்பத்தி அலகுகளை கொண்டிருக்கும் பொல்லன்டில் சுமார் 600 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள்.

ஆண்டு வருமானம் 50 கோடி.

போதாதென்று 3000 மாணவர்களின் கல்விக்கு உதவுகிறார்.

அது சரி , இது போன்று பலர் நம் நாட்டில் உதவுகிறார்களே , படிப்பில் மிளிர்கிரார்களே ,

இவரிடம் என்ன அதிசயம் ..., இவர் எவ்வாறு வேறுபடுகிறார் என்ற கேள்வி நம்மில் நிச்சயம் எழும்.

ஆம் நண்பர்களே. இவர் வேறுபடத்தான் செய்கிறார்.

பெயரில் காந்தம் கொண்ட இவருக்கு இறைவன் கண்களில் காந்தத்தை அளிக்கவில்லை.


MITயின் முதல் (பார்வையற்ற) மாற்று திறனாளி என்று பெருமையை தாங்கி நிற்பவர்.



ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – Blessing in disguiseஎன்று.

"கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்" என்பது பொருள்.

பார்வையற்ற மனிதராய் பிறந்த நேரமோ என்னவோ , இன்று உலகமே வியந்து பார்க்கும் மா மனிதராய் இவர் உயர்ந்து நிற்கிறார்.


" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "



சனி, 4 ஜூலை, 2020

தமிழ் வேந்தர்களின் சாட்சி


சுமார் 17 அகவையே நிரம்பிய ஒரு மாணவருக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் கவி ஒருவரும் , புகழ் பெற்றபெரும் தமிழ் அறிஞரும் நீதி மன்ற படியேறி சாட்சி சொன்னார்கள் என்றால் அது சாதாரண செய்தியா என்ன.

1958 – சுதந்திரத்தின் மறு பெயர் கொண்ட அன்றைய நாளிதழின் ஜனவரி மாத பதிப்பில் ஒரு மாணவர் இளந்தமிழா புறப்படு போருக்குஎன்ற பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

பாரதத்தின் வேறு பகுதியிலிருந்து தமிழகம் குடி பெயர்ந்தவர்கள், அன்று நடத்தி வந்த அங்காடிகளையும் இன்ன பிற வணிகங்களையும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க ஓர் இயக்கத்தின் தலைவர் விடுத்திருந்த அழைப்பை வலியுறுத்தி அக்கட்டுரை வரையப் பட்டிருந்தது.

“கூலியாட்களாக நாம் நம்முடைய தாயகத்திலே அல்லல் படுகின்றோம் , ஆனால் பிழைப்பை நாடி வந்த கூட்டமோ இன்றைக்கு கும்மாளம் அடித்து கொண்டிருகிறது” என்று துவங்கியிருந்தார்.

இந்த பனியா ஆதிக்கத்தை ஒழிக்க தமிழர் திரண்டு வர வேண்டாமா 
– கூடவே ஓர் அரை கூவலும் கட்டுரையில் சேர்க்கப் பட்டிருந்தது.

பாரதிதாசன் பாடலும் , மு.வ அவர்களின் கருத்தும் மேற்கோளாய் அமைய பெற்றிருந்தன.

செய்தி அரசின் பார்வைக்கு செல்லாமல் இருக்குமா.

சென்றது.

குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினருக்கு எதிரானது என்று முடிவு செய்த காவல் துறை நாளிதழின் ஆசிரியர் மூலம் இக்கட்டுரை எழுதிய இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

உடன் அதன் ஆசிரியரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இந்திய தண்டனை சட்டம் 153அ பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 1958ல் வழக்கு விசாரணைக்கு வந்தது சென்னையில்.

முதலில் சாட்சி சொன்னவர் புகழ் பெற்ற பெருங்கவி.

"இம்மாதிரி பாடல்கள் விரோத மனப்பான்மையுடன் எழுதப்படவில்லை என்றும் அமைதியை வளர்ப்பதே நோக்கம்"
என்றும் அவர் அந்த மாணவருக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் தமது கருத்தை கூறினார்.

அடுத்து சாட்சிக்கு அழைக்கப் பட்டவர் கல்லுரி பேராசிரியராக பணி புரிந்து வந்த தமிழறிஞர்.

"கட்டுரையில் எந்த ஓர் எதிர்மறை கருத்தும் வெளிப்படவில்லை
மேலும் நாம் இன்றுள்ள நிலையினையே இது பிரதிபலிக்கிறது"
என தமது கருத்தின் மூலம் அவரும் ஆதரவு தெரிவித்தார்.

ஆனால் இந்த சாட்சிகள் நீதி மன்றத்தில் எடுபடவில்லை.

ஆசிரியரும் ,கட்டுரை எழுதிய மாணவரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு நீதிமன்றம் இருவருக்கும் தலா 100  ரூபாய் அபராதம் விதித்தது.

இதனை கட்ட தவறினால் ஒரு மாத சிறை தண்டனை என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

நாளிதழின் ஆசிரியர் தாம் சார்ந்த கட்சியின் கொள்கைபடி அபராதம் கட்டாமல் சிறைவாசம் சென்றார்.

மாணவரோ அபராதம் கட்டினார்.

இவர் முனைவர் பட்டத்திற்காக பிறன் மலை கள்ளர்என்ற தலைப்பில் ஆய்வு செய்ததை அடிப்படையாக கொண்டே இயக்குனர்களில் இமயம் என்று போற்ற படுபவர்,
அண்ணன் தங்கை பாசத்தை பெரிதும் வெளிப்படுத்தும் படம் ஒன்றை எடுத்தார் 1993 ல்.

மறவாமல் இவருக்கு திரையில் நன்றி கூறியிருந்தார் இயக்குனர் என்பது பெட்டிச் செய்தி.

இரு பெரும் தமிழறிஞர்கள் நீதிமன்ற படியேறி தமக்கு ஆதரவாக சாட்சி சொன்னதை பற்றி அந்த மாணவர் என்றும் பெருமிதம் கொண்டிருந்ததில்லை.

தன்னடக்கமே காரணம்.

ஆயினும் இவர் என்தந்தையின் மிக நெருங்கிய நண்பர் என்பதில் எனக்கு மிகவும் பெருமையே.

மாணவர் பெயர், தமிழகத்தின் பல கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி சமீபத்தில் மறைந்த திரு.சி என் நடராஜன் அவர்கள்.



சாட்சி சொன்ன 

ஒருவர் - பாவேந்தர் திரு. பாரதிதாசன் அவர்கள் 



மற்றொருவர் - தமிழறிஞர் திரு. மூ. வ அவர்கள்


இப்படி தமிழுக்காக போராடிய பெரிய மனிதர்களை மறந்து ,

தனியார் பள்ளியில் தமிழ் பேசினால் அபராதம் கட்டியும் ,

பொது  இடங்களில் தமிழ் பேசினால் அவமானம் என்றும் வாழ்கின்றோம்.

மெல்ல தமிழ் இனி என்ன ஆகும்.

தெரிந்தவர்கள் விடை பகருங்களேன் ...................................

செவ்வாய், 31 மார்ச், 2020

விளையும் பயிர்கள்

"மகள் தந்தைக்கு  ஆற்றும்  உதவி  இவள்  தந்தை
என்நோற்றான்  கொல்எனும்  சொல்"

ஆம் நண்பர்களே,வள்ளுவர் குழந்தைகளுக்கிடையே நிச்சயம் பாகுபாடு கண்டிருக்க மாட்டார் என்பதால் மேற்கூறிய குறளை என் வசதிக்கு மாற்றிக் கொண்டேன்.

இது போன்ற குறளுக்கு பொருத்தமாக ஒரு குழந்தை அல்ல, இருவர் இருந்தால் ..?

இரண்டு இலக்குமிகளை வாரிசாக பெற்ற என் நண்பர் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள அரசு அதிகாரி. 

தமது அதிகாரத்தை நல் வழியில் பயன்படுத்தி பெருமளவில் மக்கள் தொண்டு செய்து வரும் மனித நேயர்.

தந்தை 8 அடி பாய்ந்து வந்ததை பார்த்து வளர்ந்ததனாலோ என்னவோ , குழந்தைகள் இருவரும் 16 அடி பாய்ந்து விட்டார்கள் மிக இளம் வயதிலேயே.

மூத்தவள் நிவேதிதா

அகவை 3ல் -

குழந்தையின் வற்புறுத்தலின் பேரில் ,பெற்றோர் சென்னையில் புகழ் பெற்ற ஒரு பரத நாட்டிய ஆசிரியரிடம் கொண்டு சென்றனர்.

8 வயதுக்கு மேல் தான் மாணாக்களை சேர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கும் ஆசிரியர் நடனத்தில் அவளது செயல் திறன் கண்டு தன்னை மாற்றிக் கொண்டார்.

நடன வகுப்பில் சேர்த்து கொள்ளப் பட்டாள் உடனே.

5 ம் வகுப்பு - குழந்தை தாயிடம் சொல்கிறது.

அம்மா – பள்ளி சுற்றுலாவிற்கு ரூ. 1000 வேண்டும்.
கட்டணம் செலுத்தப்பட்டது.

அடுத்த வாரம் – அம்மா நாளை நான் சுற்றுலா செல்லவில்லை. நான் திட்டமிட்டே தான் செய்தேன். எனக்கு பதிலாக என்னுடன் படிக்கும்  ஏழை மாணவியை அனுப்பலாமா .

இளையவள் காவியா: ஏனம்மா எனது பழைய உடுப்புகளை கரிதுணியாக பயன் படுத்துகிறாய். ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கலாமே.

"தம்மின்  தம்மக்கள்  அறிவுடமை  மா நிலத்து
மன்னுயிர்க்கு  எல்லாம்  இனிது"

தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் என்ற பழமொழிக்கு மாறாக இளம் சிறார்கள் இருவரும் நடந்து கொண்டது வியப்பே இல்லை ,மரபணுவிலேயே தான் அது இருக்கிறதே.

சில வாரங்களுக்கு முன்பு நானும் நண்பர் ராஜேஷ் பிரபாகரன் அவர்களும் , நண்பரின் இல்லம் சென்று நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

குழந்தைகளின் தெளிவு நம்மை அசரத்தான் வைக்கிறது.

மூத்த மகள் பள்ளியில் படிக்கும் போதே தமது எதிர்காலத்தை தேர்ந்தெடுத்து விட்டார், இ.ஆ.ப தான் என்று.

அந்த உறுதியின் காரணமாக தந்தை மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரின்  அறிவுரைகளை செவிமடுக்காமல் , இளங்கலை வரலாற்றை  தேர்ந்தெடுத்தார்.

இவரின் திறமைகள் கொஞ்ச நஞ்சமல்ல பட்டியலிட.....



2 ம் வகுப்பிலேயே வானொலியில் பாடி பொருளீட்ட தொடங்கியவர்.

இளம் வயதிலேயே காரைக்குடியில் உள்ள கோடாக நல்லூர் கோவிலுக்காக தமது சகோதரியுடன் சேர்ந்து பாடிய தெய்வீக பாடல்கள் இசை தட்டாக வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும் ரமணர் மகரிஷி அவர்களின் ஆசிரமத்திற்காக இவர்  பாடல் பாடியிருக்கிறார்.

ம் வகுப்பிலிருந்தே சக மற்றும் பள்ளியின் மூத்த மாணவர்களுக்கான நடன இயக்குனராக உருவெடுத்தவர்.

தடகள வீராங்கனையாகவும் பரிமளிதிருக்கிறார்.

தாம் படித்த கல்லூரியில் 2019 – 2020 க்கான மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பங்களிப்பை செய்தவர்.


பொது புலமைக்கான கல்லூரி மற்றும் படிப்பை முடித்து வெளியேறும் சிறந்த  மாணவிக்கான கல்லூரி விருது என விருதுகளின் பட்டியல் நீளுகிறது.

வரலாற்றை அகலவும் மற்றும் ஆழவும் உழுது இன்று துறையின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தேசிய மாணவர் படையில் பணியாற்றியவர். 

தேசிய மாணவர் படையில் காட்டிய செயல் திறன் காரணமாக  குவாலியர் நகரில் நடந்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பிற்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரில் ஒருவர்.


2019 ம் ஆண்டுக்கான குடியரசு தின மாணவர் அணிவகுப்பில் பங்கேற்றவர், தலை நகர் டெல்லியில்.



இதில் சிறப்பு சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36 மாணவர்களில் ஒருவர் என்பது.

கவிதைகள் மூலம் தமது ஆசிரியரின் கவனத்தை ஈர்ப்பவர்.



அருமையான ஓவியர்.



 
                                                                                             
பரதத்தை முழுமையாக கற்று தமது சகோதரியுடன் சேர்ந்து திருமதி வீணை காயத்ரி அவர்களின் தலைமையில் நடன அரங்கேற்றத்தை நிறைவு செய்தவர்.


நிவேதிதாவின் சரித்திர பார்வை சற்றே மாறுபட்டது.

சோழர்கள் இலங்கை , கடாரம் போன்ற நாடுகள் மீது படையெடுத்ததால் , அண்டை நாடுகள் மீது படை எடுத்த தேசத்தின் பட்டியலில் நம் பரதமும் உண்டு  என்ற என் எண்ணத்தை இவர் மாற்றுகிறார்.

ஐரோப்பிய நாடுகள் மற்ற நாடுகள் மீது படையெடுத்தது ஆதிக்கம் செலுத்தவும் , செல்வத்தை அள்ளிச் செல்லவும் தான் , ஆனால் சோழர்கள் செய்தது தேச விரிவாக்கம் மட்டுமே என்று மாறு பட்ட கோணத்தில் இவர் நம்மை சிந்திக்க வைக்கிறார்.

சுதந்திர போராட்ட தலைவர்களிலேயே இன்னும் அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கபட்டிருக்க வேண்டியவர்கள் நேதாஜி அவர்களும் மற்றும் வ.வு.சி அவர்களும் என்ற இவரது குரலில் ஆதங்கம் நன்கு தெரிகிறது.

இளைய மகள் காவ்யா தந்தையை போலவே சீட்டி அடித்து பாடல் பாடுவதில் மிகவும் திறன் பெற்றவர்.

சொன்ன கணத்திலேயே எந்த ஒரு பாடலையும் சீட்டியிலேயே முழுமையாக பாடி நம்மை சொக்க வைக்கிறார்.

மிக தெளிவாக சிந்திக்கும் இவர் நீண்ட கால திட்டம் ஏதும் வைத்து கொள்ளவில்லை. 

மாறாக வாழும் ஒவ்வொரு நாளும் இயன்ற வரை தாம் பிறருக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறோம் என்பதை குறிக்கோளாக கொண்டே வாழ்கிறார்.

ஊட்டியை பூர்வீகமாக கொண்ட தந்தை, 
சாதி / மத பேதம் ஊட்டி வளர்க்கவில்லை ,

மாறாக தாம் சார்ந்த பெருமை மிகு சமூகத்தை பற்றி அணு அணுவாக சொல்லி கொடுத்திருகிறார் மகள்களுக்கு.

( இந்த பெருமை மிகு சமூகத்தை பற்றி ஒரு பதிவிட விரும்புகிறேன் பின்னர்)

இவ்வளவு சொல்லி விட்டு பெற்றோரை பற்றிய தகவலை சொல்லவில்லை என்றால் எப்படி.

தாயார் முனைவர் திருமதி ரேவதி. கல்லூரி உதவி ஆசிரியர்.

தந்தையார் எனது நீண்ட கால அருமை நண்பர் காவல் துறை உதவி ஆணையர் திரு. கிருஷ்ணமுர்த்தி.

குழந்தைகள் தாம் விரும்பிய பாதையில் வெற்றி நடை போட நண்பர்கள் , சான்றோர்கள் ஆகியோரின் ஆதரவையும் நல் வாழ்த்துகளையும் வாரி வழங்குமாய் இரு கரம் கூப்பி வேண்டி கொள்கிறேன்.