ஞாயிறு, 28 ஜனவரி, 2024

ஏன் என்ற கேள்வி

கருப்பும் ,வெள்ளையும் கூட நிறங்களுக்கும் அடக்கும் தானே, அப்புறம் கருப்பு-வெள்ளை படங்கள் / வண்ணப் படங்கள் என்று பிரிப்பதேன் ......

அறிவியல் அறியாமையா

தனது ஜாதியில் மட்டும் வரன் தேடும் ஓர் அரசு ஊழியர் , லஞ்சம் வாங்கும் போது ஜாதியை மறப்பதேன் ......

பணமே பிரதானமா

கண்கண்ட தெய்வமாகிய பெற்றோரை கண்டு கொள்ளாத மகன், ரசிகனாய் நடிகனின் “Cut Out”க்கு பால் ஊற்றுவதேன் ......

திரைப்படம் மோகம் தான் காரணமா

நாள்பட்ட நோய்களுக்கு நமது பாரம்பரிய மருத்துவமே சிறந்தது என்று அறிந்தும் ,ஆங்கில மருத்துவத்தை நாடுவதேன் ......

நமக்கு தெளிவு பிறக்க வேண்டுமா


என்ன தான் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் , ஒரு மனிதன் “H” என்று மட்டுமே தும்முவதேன் ......

மற்ற எழுத்துக்களை மறந்து போவதாலா

செத்தால் தானே பிணம், பின்னர் செத்த பிணம் என்று சொல்வதேன் ......

தமிழ் தகராறா

கணிதம் என்பது எண்களைப் பற்றியது தானே, எண்கணிதம் என்று சொல்வதேன் ......

கணிதத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதாலா

எப்போதோ ஒரு முறை மட்டும் தொகுதிக்கு வரும் அரசியல்வாதிக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பதேன் ......

தனது வாக்கை விற்பதாலா

மரங்களை சாய்த்து நெடுஞ்சாலைகளை அமைப்பதேன் ......

விரைவாக சென்று விட வேண்டும் என்பதாலா 

ஆங்கிலத்திலும் தமிழும் ஒரே பொருள் தானே, அப்புறம் கிரிக்கெட்டில் “Catch”  பிடி என்று சொல்வதேன் ......

மொழிப் பிரச்சினையா

விபரீதம் ஏற்படும் போது ஐயோ என்று தானே கத்துகிறோம், அப்புறம் “குய்யோ முய்யோ” என்று கதாசிரியர்கள் வர்ணிப்பதேன் ......

கற்பனை சுதந்திரமா

வாழ்வே மாயம் என்று தெரிந்தும், மெய் என மேனியை சொல்வதேன் ......

கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லத் தானா

அரசு பள்ளிகளில் குழந்தையை சேர்க்க மறுக்கும் மனிதன், அரசு கல்லூரிகளை கண்டு தயங்குவது இல்லையே ஏன் ......

இங்கு மட்டும் தரம் கூடி விடுவதாலா

ஏன் என்று கேள்விகள் மேலும் தோன்றவில்லையே ஏன் ......

..............................

திங்கள், 15 ஜனவரி, 2024

புதுப் புது அர்த்தங்கள்

தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் - புதுப் புது அர்த்தங்கள்.

அதில் ஒரு பாடல் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 



இனிமையான இப்பாடலை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம், வரிகளை ஒலி வடிவில் கேட்ட படியே கடந்தும் சென்றிருப்போம்.

சரணத்தில்,

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி ,

நெஞ்சம் எனும் வீணை பாடுமே கோடி

என்று வரும் வரிகளை இப்படித் தான் உள்வாங்கி இருந்தேன்.

பல அற்புத பாடல்களைத் தந்த வாலி, கோடி என்றே இரண்டு வரிகளையும் முடித்திருப்பாரா அல்லது ஏதேனும் ஒரு வரி தோடி என்று முடிந்திருக்குமா என்ற வினாவிற்கு விடை தேட விழைந்தேன்.

விளைவு ........ இணைய தளத்தின் உதவியை நாடினேன்.

அவற்றில் ஒரு சில வலைத்தளங்கள், மேற்குறிப்பிட்டவற்றையே பாடல் வரிகளென கட்டியம் கூறின.

இருப்பினும் நிறைவு ஏற்படவில்லை.

பாடலை ஒலி வடிவில் ஓட விட்டு குறிப்பிட்ட இடம் வரும் போது, பலமுறை நிறுத்திக் கேட்டேன்.

செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி என்றே SPB அவர்கள் பாடியிருக்கிறார் என்பது உறுதியானது.



அது என்ன செஞ்சம் .................

யோசித்தேன் கொஞ்சம் .......

மீண்டும் இணைய தளத்தில் புகுந்தேன் தஞ்சம் ......

வீணைகளில் சரஸ்வதி வீணை, ருத்ர வீணை, சாகர வீணை மற்றும் விசித்திர வீணை என்று பல வகைகள் உண்டு.


அவற்றுள் ஒன்று தான் செஞ்சம் எனும் ஒரு வகை.

இது  சோக கீதங்களை எழுப்புவதற்கென்றே செய்யப்பட்ட இசைக் கருவி.

சோகமான தோடி ராகத்தை கூட நாம் இவ்வீணையில் வாசித்தால், அது மகிழ்ச்சியான ஒலியையே எழுப்பும்.

செஞ்சம் என்று சோகமே உருவான கணவனுக்கு அருகில், தோடி என்ற மனைவி இருந்தால் அது மகிழ்ச்சியையே வெளிப்படுத்தும் என சொல்லும் கவிஞரின் உவமையை , கற்பனையின் உச்சம் என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அதே நேரம், எனக்கோர் ஐயம்.

(கதையின் படி) தனக்கே உடையவன் என்று கருதும் மனைவிநிறைய தொல்லைகள் அளித்தாலும் நாயகன் தான் ஒரு நல்ல பாடகன் என்று நிருபிப்பேன் என்று சொல்ல வருகிறாரா.......