சனி, 2 பிப்ரவரி, 2019

மருந்தில்லா மருத்துவம்

மு.கு : கம்பம் கல்வி குழுமத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என்றும் எனது நன்றி.

மனிதன் மனதிலும் அவன் உண்ணும் உணவிலும் கலப்படமே பிரதானம் என்று ஆகிப்போன இன்றைய கால கட்டத்தில் நோய் நொடிகள் இல்லாத மனிதனை காண்பது உலகின் எட்டாம் அதிசயம் மட்டுமல்ல , எளிதில் எட்டாத ஓர் அதிசயமும் தான்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறைத்தோ அல்லது அழித்தோ  நவீன மருத்துவம் நம்மை பெரிதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றால் அது மிகை இல்லை. (ஒரு சில நல்ல மருத்துவர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை).

மருந்தே உணவு என்று மா(நா)றிக் கொண்டிருக்கும் நேரத்தில் ,மருந்தும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ,
மனிதர்களை விரலால் தொட்டே நாட்பட்ட நோய்களை  
குணமாக்கும் அக்குபங்சர் என்ற அற்புத மருத்துவ கலையினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அறப்பணியாக தனி நபராக இருந்து ஒருவர் தொடங்கினார்.

அது மட்டுமல்ல நண்பர்களே, இந்த கலையை முறையான கல்வி நிறுவனத்தின் மூலம் பலருக்கும் இவர் பயிற்றுவிக்கிறார் என்பது சிறப்பு.

அவர் பெயர் திரு. போஸ் முகம்மது மீரா.

அகவை 60 என்பது ஏட்டளவில் மட்டுமே.

துள்ளும் உள்ளம் 25ஐயும், உரமேறிய உருவம் 45ஐயும் இன்னும் தாண்டவில்லை.

இவர் ஒரு பல்கலை வித்தகர்.

அக்குபங்சர் ஆசான் , கராத்தேவில் கருப்பு பட்டை நிபுணர்.

சிலம்பத்தில் வல்லவர் , ஓர் அருமையான ஆன்மீக பேச்சாளர்.

முத்தாய்ப்பாக மருத்துவ உலகின் மூலம் மனித குலத்திற்கு தொண்டாற்றும் நல் மனிதர்.

பூர்விகம் பெரியகுளம் , வசிப்பதோ கம்பம் நகரில்.

இவரை பற்றி வலைப் பூவில் எழுத வேண்டும் என்று தோன்ற ஒரு நாள் அலை பேசியில் அழைத்தேன்.

ஐயா நான் இந்த ஆண்டில் அக்குபங்சர் பட்டய படிப்பு பயிலும் உங்களின் மாணவன் என்று அறிமுகம் செய்து கொண்டு , அவரை பற்றி வலைப் பூவில் எழுத வேண்டும் என்ற எனது அவாவை தெரிவித்தேன்.

என்ன எழுத போகிறீர்கள்..?

நான் சந்திக்கும் பிரபலங்களை, மற்றும் நான் படிக்கும் அரிய செய்திகளை.

தொடு சிகிச்சை பற்றியும் அதை பயிற்றுவிக்கும் கம்பம் கல்வி குழுமம் மேலும், அதை வழி நடத்தும் உங்களை / உங்கள் மருமகனான உமர் பாருக் அவர்களை பற்றியும் எழுத வேண்டும்.

சொன்னதோடு மட்டுமல்லாமல் எனது ஒரு சில படைப்புகளின் இணைப்புகளையும் "தந்தியில்" (டெலிக்ராமில்??) அவருக்கு அனுப்பினேன்.

அதை படிக்கும் முன்னரே ஜனவரி மாத இறுதியில் சந்திக்கலாம் என்றார்.

(என் கட்டுரைகளை பற்றி அவர் கூறிய கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சி என்பதை விட மன நிறைவை தந்தது)

தொடுசிகிச்சை முதல் புல்லாங்குழல் வரை இவர் ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும் காலத்திலும்,

எனக்கும் என் நண்பர் ராஜேஷ் பிரபாகரனுக்கும் சுமார் 4 மணி நேரங்கள்  எனது இல்லத்தில் இவருடன் செலவிடும் நல்வாய்ப்பு கிடைத்தது,
அவர் சொன்னது போலவே ஜனவரி இறுதியில்.

உடன் இவரது துணைவியாரும் எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியே.

கலந்துரையாடலை துவங்கினோம்.

ஆசான் திரு.போஸ் அவர்களுடன் நானும் , ராஜேஷும்

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தம் குடும்பத்தினர் ஒருவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக இவர்  நவீன மருத்துவத்தை நாட வேண்டியதாயிற்று.

அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்பே அகற்றப் பட இருந்த நேரத்தில் இறை அருளால் அக்குபங்சர் மருத்துவர் மூலம் அனைத்தும் இனிதே நடந்தேற , சீன பாரம்பரிய மருத்துவத்தின் பால் பெரிதும் ஈர்க்கப் பட்டார்.

(இன்றும் அந்த குடும்ப உறுப்பினர் உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதும், அவரும் தொடு சிகிச்சை நிபுணர் என்பதும் பெட்டி செய்தி.)

2000 ஆண்டு இம்மருத்துவ முறையை முழுமையாக திரு. போஸ் முகம்மது மீரா அவர்கள் கற்று தேர்ந்தார்.


2001 முதல் இந்த மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல, எதிர் கொண்ட சவால்களும்  தான்.

மனித உடல் என்பது பஞ்ச பூத அடிப்படையிலேயே படைக்க பட்டது.

எங்கு இதன் சம நிலை சீராக இல்லையோ அங்கு நோய் உண்டாகும் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப் படும்.

இங்கு சிகிச்சை நேரம் என்பது சுமார் ஒரு நிமிடத்திற்கும் குறைவே. அதாவது நோயறிதல் மற்றும் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது உட்பட.

முதலில் தெரிந்தவர்களுக்கு இலவச சிகிச்சை.

பின்னர் தெரிந்தவர்களின் இல்லம் தேடி, இவராகவே சிகிச்சை அளிக்க செல்லும் போது அங்கு கிடைத்த மறுமொழிகள் இவருக்கு தூண்டுகோலாகவே அமைந்தன.

ஐயா சாப்பிட்டு கொண்டிருக்கிறார் ….
இவர் காத்திருந்தார்.

ஐயா இப்போ TV பார்க்கிறாரே …!
இவர் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

இப்போ போயிட்டு அப்புறம் வர்றீங்களா ..?
இப்புறமும் வந்தார் , அப்புறமும் வந்தார்.

மருந்து மாத்திரை இல்லாமல் குணமாக்குறீங்களா , என்ன காதுல பூ சுத்துறீங்களா. …?
விரலால் குணமாக்கினார் , அதாவது காதில் பூ சுற்றினார்.

என்ன நோய் என்று நோயாளியே கூறும் முன்,  நாடி பார்த்தே இவர் பிறரை குணப்படுத்த , சமூகத்திற்கு இவர் மீதான நம்பிக்கை வளர துவங்கியது.

நிலைமை அப்படியே தலை கீழானது.

தொடுசிகிச்சை மருத்துவத்தின் சிறப்பு மெல்ல மெல்ல மக்களை சென்றடைய துவங்கியது, கூடவே இவரது புகழும்.

2002ல் சிகிச்சை நிலையம் துவங்கினார் கம்பம் நகரில்.

அப்போதும் தடங்கல் இல்லாமல் இல்லை.

வேறென்ன,ஒரு தற்காப்பு கலை ஆசான் உரமேறிய கரங்கள் கொண்டு தொடு சிகிச்சை அளித்தால் எலும்பு ஒடிந்து விடும் என்ற அச்சமே காரணம்.

முயற்சி திருவினையானது.

எப்படி ஒரு கருவானது ஒரு செல்லில் துவங்கி இரண்டாகி பல செல்களாக பெருகி வளர்கிறதோ, அதே போல ,

இவர் ஒருவருக்கு செய்த மருத்துவ மாயா ஜாலங்கள் இருவரை அடைய அந்த இருவரிடமிருந்து பலர் வழியாக மென்மேலும் வளர ஆரம்பித்தது.

இவரால் குணமான நபர்கள் தாமாகவே திரு. போஸ் முகம்மது மீரா அவர்களின் விளம்பர தூதுவர்களாக மாறினார்கள்.

இது வரை சுமார் 1 லட்சம் நோயாளிகளுக்கு மேல் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளார்.

குணப்படுத்திய நோய்கள் வெறும் நீரிழிவு ,புற்று நோய் ,சிறுநீரக நோய் ,ஆஸ்துமா போன்ற விரல் விட்டு எண்ணி விட கூடிய தீராத மேலும் கொடிய நோய்களை மட்டுமே

பிறந்து 4 ஆண்டுகள் ஆகியும் நடக்க இயலாதிருந்த ஒரு குழந்தையை எந்த வித ஊனமும் இல்லாமல் குணப்படுத்தியத்திய நிகழ்வை தான், நெகிழ்ச்சியுடன் என்றுமே இவர் குறிப்பிடுகிறார்.

ஏழைகளிடம் கறாராக பணம் கேட்டதில்லை, மாறாக இலவச சிகிச்சை அளிப்பார் இன்றும்.

திரு. போஸ் முகம்மது மீரா அவர்கள் அத்தோடு நின்று விடவில்லை.

இந்த அற்புத கலை மேலும் வளர வேண்டுமென்றால் இதனை முறையாக பயிற்றுவிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

2004 இல் கம்பம் கல்வி குழுமத்தை தோற்றுவித்தார் ஓர் இயக்குனராக.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பமிட்டு அக்குபங்சர் பட்டய படிப்பை துவக்கினார்.

அப்போது சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 5க்கும் கீழ்.

மனம் தளரவில்லை.  விடா முயற்சி விஸ்வரூப வெற்றியானது.

இன்றோ சேரும் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது, ஒவ்வொரு வருடமும்.

                               

வார இறுதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பட்டய வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன.


                     சமீபத்தில் பட்டயம் முடித்த மாணவர்கள்

அது மட்டுமல்லாது பயிற்சி முடித்து வெளியேறும் மாணாக்கள் பெரும்பாலான நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் அக்குபங்சர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள், மனிதன் நோயின்றி வாழ.


அக்குபங்சர் கொண்டாப்படும் வாரம் முழுவதும் இலவச சிகிச்சை

ஆசான் அவர்களை போன்ற பயிற்றுவிப்பாளரை நான் இதுவரை கண்டதில்லை.


பாடத்தை (பார்வையற்ற) மாற்று திறனாளிகளுக்கும் கூட அவர்கள் மனக்கண்ணில் நன்கு பதியும் படி நடத்துவார்.

உண்மை தான் நண்பர்களே ,எங்களுடன் அந்த நிலையில் உள்ளோர் எழுவர்  பயிலுகிறார்கள், அதை கொண்டே சொல்கிறேன்.

அக்குபங்சர் கற்பதற்கான தகுதி உள்ளத்தில் ஆர்வம் மட்டுமே.
                                         வகுப்பினிடையே

பல்கலைக்கழக விதிமுறைகளுக்காக 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது கட்டாயமாக்க பட்டிருக்கிறது.

ஒரு வருடம் பட்டய படிப்பு பயிலும் மாணாக்கள், சட்ட பூர்வமாகவே நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யலாம்.

ஆனாலும் மருத்துவனுக்கு ஒரு சில விதிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளதாக இவர் மாணாக்களுக்கு போதிப்பார்.

ஒரு மருத்துவன் என்பவன் உள்ளத்தளவில் தவ வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.

அவனது நோக்கம், மக்கள் நோயின்றி வாழ வேண்டுமென்பதே தவிர வணிகம் அல்ல.

நோயின்றி வாழ - "பசித்து புசி , பசியோடு எழு" .

நோய்வாய்ப்ப பட்டால் - "பட்டினியே சிறந்த மருந்து"

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

ஆகியவை எங்களுக்கு சொல்லப் படும் தாரக மந்திரங்கள்.

மருந்தில்லாத உலகம் , நோய் இல்லாத சமுதாயம் என்பது இவரது வாழ் நாள் இலக்கு.

இவருடன் இணைந்து இவரது மருமகன் திரு.உமர் பாருக்கும் கரம் கோர்த்து இந்த கல்வி குழுமத்தை நடத்தி வருகிறார்.

(சுவாரஸ்யம் மிகுந்த திரு. உமர் பாருக் பற்றி அடுத்த பதிவில்)

போஸ் அவர்களிடம் திரும்புவோம்.

இந்த அகவையிலும் போஸ் அவர்கள் உடற் பயிற்சியை அன்றாடம் செய்கிறார்.

பலருக்கு கராத்தே மற்றும் சிலம்பமும்  கற்று தருவதோடல்லாமல் , 
புல்லாங்குழல் வேறு கற்று வருகிறார்.

அடுத்து எந்த புல்லாங்குழல் வித்துவான் தலையில் கை வைக்க போகிறாரோ தெரியவில்லை.

திரு. போஸ் முகம்மது மீரா அவர்களின் ஆன்மீக  பேச்சு தனித்துவமானது.

உதாரணம் - மாதா , பிதா , குரு , தெய்வம் என்பவர்கள், வரிசைப் படி நாம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டியவர்கள் என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு இவர் விளக்கம் மாறுபட்டது தான்.

ஒரு தாய் என்பவள் , எப்படி தன் குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டுகிறாளோ , அதே போல குரு என்பவர் நம்முள் இருக்கும் தெய்வத்தை காட்டுவார் , என்பது தான் அது.

மரணமில்லா பெரு வாழ்வு என்பது ..?

மறுபிறவி இல்லாதது என்பதை மட்டும் குறிக்கவில்லை, வையத்துள் ஒரு மனிதன் வாழ்வாங்கு வாழ்வானாயின் அவன் மா-ரணம் இல்லாத இயற்கை  எய்துவான் என்றும் ,

இறக்கும் தருவாயில் உடல் துர்நாற்றம் வீசாமல், முறுக்கேறாமல் இயல்பாய் இருக்கும் என்று அவர் சொன்ன போது வியப்பின் உச்சிக்கே நாங்கள் சென்று விட்டோம்.

வெறும் வணிக நோக்கில் மட்டுமே செயல்படும் பல மருத்துவர்கள் மத்தியில் ,உன்னத எண்ணத்தில் மக்கள் தொண்டாற்றி வரும் இவரை போன்றோர் உயர்ந்தவர்கள் என்று சொல்வதை விட ஒப்பீடற்றவர்கள் என்பதே சாலச் சிறந்தது.

குறள் 948 :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

16 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.சற்று கால தாமதமாக வந்துள்ளது.இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி குமார் அவர்களே. இது போன்ற கட்டுரைகளை மேலும் பதிவிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வெளிப்படையான கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாலு அவர்களே.

      நீக்கு
  2. திரு.போஸ் முகம்மது அவர்களின் தொண்டுள்ளத்துக்கு எமது இராயல் சல்யூட்.

    இவரது முயற்சி இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற இறைவன் துணை செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றிகள் பல நண்பரே. நீங்கள் கூறியதை போல நிச்சயம் இறைவன் துணை உண்டு என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு தம்பி குமார் அவர்களுக்கு ஒரு அருமையானப் பதிவினை பதிவிட்டமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள தகவல்கள். மிக்க மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் பல ஆயிரம் மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டு அவதிப்படுகிறார்கள்.பலருக்கு அதற்கான செலவுகளை மேற்கொள்ள கூட நிதி வசதி இல்லை. அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் பொறுத்த உறுப்புகள் கிடைக்காத நிலை உள்ளது. அதற்கான செலவினம் பல லட்சங்களை தாண்டுகிறது. இந்நிலையில் இந்த மருத்துவர். அவர் கற்ற இந்த கலையைக் கொண்டு ஏழை மக்களை தேர்ந்தெடுத்து அவர்களை குணமாக்கினால் பெரும் புண்ணியமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் கூறியது உண்மையே.உங்கள் அக்கறையும் மிகவும் பாராட்டுக்குரியது. அப்படி இருப்போரின் விவரங்களை என மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.(kumarrajaskar@gmail.com) . நான் என ஆசானிடம் அனுப்பி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. very nice article kumar. probably we should visit some time in future.

    பதிலளிநீக்கு
  8. Thanks a lot Sundar. நிச்சயம் நான் ஏற்பாடு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நம் ஆசான் பற்றிய கட்டுரை சிறப்பு. இது பலரை சென்றடைய வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி. நண்பர் ராஜேஷும் நானும் இதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கிறோம் .

      நீக்கு
  10. அருமையான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு