சனி, 17 ஜூன், 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும்


அமெரிக்காவின் ஒருங்கிணைந்த மாகாணங்கள் – அது தாங்க நண்பர்களே United States of America- வை தமிழாக்கம் செய்து விட்டேன்.

உலகின் மூன்றாம் பெரிய இந்த நாட்டின் பெயரை கேட்டால் (குறிப்பாக 1990-களின் ஆரம்பத்திலிருந்து இருந்து) இன்றைய மற்றும் நேற்றைய இளைஞர்களுக்கு என்றுமே ஒரு கிளர்ச்சி எழும். ஆம் நண்பர்களே, பரந்து விரிந்த சாலைகள் , எங்கு நோக்கினும் பசுமை ,  மாசற்ற காற்று /ஒலி, இவை மட்டுமல்ல, இயற்கையின் கொடையாம்  நயாகரா மற்றும் எல்லோ ஸ்டோன் பூங்கா , மனிதனின் கற்பனையாம் டிஸ்னி லேன்ட்,யுனிவேர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் விண்ணை தொடும் கட்டிடங்கள் என நாம் கண்டு களிக்க எத்தனையோ உண்டு.

ஊழலும் , கையூட்டும் சாதாரண மனிதனின் வாழ்வில் அவனை பாதிப்பதில்லை. கூவாத்தூர் கூத்துக்கள் இல்லை, சட்டசபை அடிதடிகள் இல்லை. சட்டம் மிக கடுமை அங்கே. வெள்ளை மாளிகையில் கூட்டிப் பெருக்கும் ஒரு பணியாளர் , அந்த நாட்டு அதிபரை பார்த்து வணக்கம் தெரிவித்தால், அதிபர் பதில் மரியாதை செய்ய வேண்டுமென சட்டம் சொல்கிறது.அதிபரும் அவ்வாறே செய்வார், பதில் மரியாதை.

நீங்கள் சாலை விதியை மீறுகையில், காவலர் உங்களை நிறுத்தினால் முதலில் காவலர் உங்களிடம் மன்னிப்பு கேட்பார் உங்களை நிறுத்தியமைக்காக. அதன் பின்னரே நீங்கள் செய்த தவறை சுட்டிக் காட்டி பின்னர் உங்கள் வாகன ஆவணங்களையும் கேட்பார். அந்த அளவிற்கு மனித உரிமை சட்டம் உள்ளது.



இரவு 1 மணி ஆனாலும் , யாருமற்ற சாலை ஆனாலும் , சமிக்ஞை விளக்கை பொறுத்தே சாலையில் வாகனங்கள் நகரும். சட்ட மீறல்கள் உண்டு, ஆனால் மிக குறைவு.  இவை மட்டுமா நண்பர்களே , நீண்ட வரிசையில் நீங்கள் ஒரு மணி நேரம் நிற்க நேரிட்டாலும் பின்னால் வருபவர் உங்களை முந்த மாட்டார். சாரளத்தில் நிற்பவர் உங்களிடம் “என்னா வேணும்” என கேளார். பணிவாக முதலில் உங்களை நலம் விசாரித்து பின்னர் அவர் உங்களுக்கு எவ்வாறு உதவ இயலும் என்றே கேட்பார். மீதம் சில்லறை ஒரு பைசா ஆனாலும் உங்களிடம் கொடுத்து விடுவார்.



மிக சொகுசான வாழ்க்கை என்பதால் அங்கு சென்ற யாரும் அங்கேயே குடிஉரிமை பெற்று வாழ்க்கையை அமைத்த்துக் கொள்ள விரும்புவர். வெகு சிலரே தாய்நாடு திருப்புவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.  முனைவர் பட்டம் இருந்தால் உங்களுக்கு ஒரு சில மாதங்களிலே குடியுரிமை வந்துவிடும். முதுகலை பட்டம் இருந்தால்  2 – 3 வருடங்களிலும் மற்ற பட்டங்களுக்கு இது 3 ஆண்டுகளுக்கு மேலும் ஆகும், சராசரியாக.

ஆனால் அங்கு செல்வதென்பது அவ்வளவு எளிது அல்ல.

H1B என்ற விசா (VISA – Valid Immigrant Status Authority) என்பது அமெரிக்கா பிற நாட்டு மக்களுக்கு குறிப்பாக கணிப்பொறி துறையில் உள்ளவர்களுக்கு வழங்கும் ஒரு விசா. முதலில் 3 வருடங்கள் இது கிடைக்கும், அங்கு சென்ற பின்னர் நாம் மேலும் 3 ஆண்டுகள் புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் H1B கிடைப்பது எளிது அல்ல. ஆண்டு தோறும் கணிப்பொறி நிறுவனங்கள் சுமார் இரண்டு லட்சம் விண்ணப்பங்களை அமெரிக்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும். அரசாங்கமோ ஆண்டு தோறும் 65000 நபர்களுக்கே மட்டுமே H1B வழங்கும், அதுவும் குலுக்கல் முறையில்.

இரண்டு லட்சம் என்பது 65000ஆக குறைந்து அதில் ஒருவராக நீங்கள் வருவதற்கு நிச்சயம் நல்லூழ் செய்திருக்க வேண்டும் தான். அத்தகைய பேறு பெற்றவனாய் ஆனேன் நான் 2015-இல்.

சென்னையில் உள்ள அமெரிக்க தூரகத்தில் நியமனம் பெற்று, உயிரி அளவுகள் (Bio Metrics-ன் தமிழாக்கம் என்று நினைக்கிறேன்) பதிவு செய்து மறு நாள் தூதரகம் சென்று விசா வாங்கினோம்.

பணி நிமித்தமாக நான் அமெரிக்க செல்வது இது முதல் முறை அல்ல. ஆயினும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வது இதுவே முதல் முறை.  

இவ்வளவு நேரம் உங்களிடம் அமெரிக்காவின் பெருமையை பற்றியே பேசி வந்த நான், இன்னும் மேலும் சொல்லிக்கொண்டே போகலாம், ஆனால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

வாருங்கள் நண்பர்களே , எனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் அடுத்த வாரம்.

பி.கு: இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை நான் படித்தவைகளும் , எனது மற்றும் எனது நண்பர்களின்னு அனுபவங்களும் மட்டுமே.

8 கருத்துகள்:

  1. உங்கள் அ.அ.அறிய ஆவலுடன் தொடர்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக வேகமாய் உங்கள் கருத்தை பதிவு செய்து ஆச்சரியத்தை அளித்து விட்டீர்கள் நண்பரே.

      நீக்கு
  2. ஆகா.தங்களின் அனுபவங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. உன் மனதில் இருப்பதை கொட்டி விடு குமாரா!

    பதிலளிநீக்கு