ஞாயிறு, 25 ஜூன், 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும் (தொடர்ச்சி)

வாருங்கள் நண்பர்களே.. , நமது பயணத்தை தொடர்வோம்.

அமெரிக்காவில் நான் முதலில் இறங்கிய இடம் நார்த் கரோலினா பிறகு உடனடியாக அங்கிருந்து விஸ்கான்சின் என்ற மாகாணத்தில் உள்ள மில்வாக்கி என்ற நகரத்திற்குப் புலம் பெயர்ந்தேன். என்னதான் அமெரிக்காவை பற்றி சென்ற வாரம், நேர்மறை செய்திகளை கூறி  இருந்தாலும், ஒரு சில நடைமுறைகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்துகின்றன.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பெரும்பாலோர், தங்களது குழந்தை அமெரிக்காவிலேயே பிறக்க வேண்டும் , அந்நாட்டு குடியுரிமை பெற வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் குழந்தை பிறந்த உடன், அமெரிக்க மருத்துவர்கள் (அனைவருமா என தெரியாது), நமக்குக் கூறும் சில அறிவுரைகள், அறிவுறுத்தல்கள், நமது உணர்வுகளுக்கும், நமது சமூகப் பழக்க வழக்கங்களுக்கும்  எதிராகவே இருக்கின்றன,

 பிறந்த ஒரு சில மாதங்களில், குழந்தையை இரவில் தனி அறையில் படுக்க வைக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் நாம் கேட்டால்  மட்டும் நமக்கு சொல்லும் அறிவுரை.

என்னதான் இரவு முழுவதும் குழந்தை அழுதாலும் பாலூட்ட வேண்டாம்.

இச்செய்கைக்கு அவர்கள் கூறும் காரணம், குழந்தையின் அழுகையை நாம் ஊக்குவிக்க கூடாது என்பதேயாகும் (குறிப்பாக இரவில் மட்டும்).

இந்தியாவில் என் மூத்த மகள், ஆறாம் / ஏழாம் வகுப்பில் பயின்ற கணிதம், இங்கு ஒன்பதாம் வகுப்பில் தான் சொல்லி கொடுக்கப் படுகிறது. இது மட்டுமல்ல மாணவர்கள் வகுப்பில் உறங்கினாலும் ஆசிரியர் எழுப்பவே கூடாது. பள்ளியில் நுழையும் மாணவர்களின் பைகளை பரிசோதித்த பின்னரே அவர்கள் அனுமதிக்க படுவர்.

தனி மனித உரிமை மிகுந்த நாடு என்பதால் , ஒருவர் விஷயத்தில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள். எனவே வயது ஆக ஆக, நம்முடன் பழக, நட்பு பாராட்ட, நமக்கு, நமது குடும்பம் மட்டுமே இருக்கும். நட்பு வட்டாரம் சற்று குறைவு தான்.



                                              நயாகரா பயணத்தின் போது

அது மட்டுமா , முதுமையில் தனிமையை அனுபவித்தே ஆகவேண்டும். வீட்டை சுத்தம்செய்வது , தள்ளாத வயதிலும் குப்பையை அதனதன் இடத்தில் கொட்டுவது, மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு செல்வது என அனைத்து வேலைகளையும் அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும், 70 வயதிலும். இவைகளை நான் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் கண்டவை. இருப்பினும் வயதான பெற்றோரை குழந்தைகள் மருத்துவமனை கூட்டி செல்வதையும் நான் கண்டுள்ளேன்.

இது மட்டுமல்ல, குளிர் பிரதேசம் என்பதால் வெயில் வருவது காலை மணி, மறைவது மணி குளிர் காலத்தில்.

மாலை மணியே இரவு 10 மணி போல இருப்பதால், வெப்ப பிரதேசத்திலிருந்து வருபவர்களுக்கு, இதைச் சமாளிப்பதே மிகவும் கடினமாகும். இதனை நான் இங்கு விவரிப்பதை விட , அனுபவித்து பார்த்தால் தான் அதன் சிரமம் புரியும்.


             

இதன் காரணமாகவே ஏப்ரல் முதல் வாரம் முதல் அக்டோபர் இறுதி வரை அரசாங்கமே ஒரு மணி நேரத்தை கூட்டி விடும். அதாவது ஏப்ரல்-இல் காலை 6 மணி என்பதை காலை 7 மணி என அரசே மாற்றி அமைத்து விடும். இதன் மூலமாக நீண்ட நேரம், அதாவது இரவு சுமார் 8.30 வரை வெயில் இருக்கும்.

மீண்டும் அக்டோபர் மாதம் அரசு அந்த ஒரு மணி நேரத்தை கழித்து விடும்.  அதாவது மாலை 7 மணி என்பது மீண்டும் 6 என நேரத்தை மாற்றி அமைத்தி விடும்,  ஒரு மணி நேர இழப்பீடை ஈடு கட்ட.

அரிசோனா போன்ற மாகாணங்கள் இதற்கு விதி விலக்கு, சற்றே வெப்ப பிரதேசம் என்பதால் நம்மை போல் நிலையாய் ஒரே நேரம் தான். அங்கு நேரம் மாற்றி அமைக்க படுவதில்லை.

இந்த நேர மாற்ற யோசனையை முதலில் கூறியது பெஞ்சமின் பிராங்க்ளின் என்றாலும் இதனை நடைமுறை படுத்தியது ஜெர்மனியும் , ஆஸ்திரியாவும் தான், 1916ல்.

குளிர் காலத்தில் வீட்டினுள்ளே முடங்கி இருக்கும் இந்த சிரமத்தை , என் மூத்த மகள் எப்படியோ சமாளித்துக் கொண்டாள், எனினும் என் இரண்டாவது மகள் எங்கும் வெளியில் செல்லாமல், வீட்டிலேயே முடங்கி கிடந்தாள். அவளுக்கு பிடிவாதமும், மூர்க்கத் தனமும் அதிகரிக்கத் தொடங்கின மெல்ல மெல்ல.


                                       நான் குடியிருந்த அடுக்கு மாடி இல்லம்

இதனால், தாய் நாடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம், எனக்குள் மெதுவாக துளிர் விடத் தொடங்கியது.

இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் எனது குடும்பத்துடன் இந்திய மளிகை கடைக்குச் சென்றேன். இரவு சுமார் 7 மணி அளவில் இல்லம் திரும்பும் போது வழி தவறி விட்டேன். மிகவும் இருட்டு மட்டுமல்ல , ஆள் அரவமற்ற பகுதியும் கூட. எனவே ஒரு பகுதியில் நின்றுவிட்டேன்.

கூகிள் MAPஇல் வழி தேட ஆரம்பித்தேன்.

அப்போது எனது வாகனத்தை யாரோ தட்ட நாங்கள் நால்வரும் திரும்பி பார்த்தோம்.

வழக்கமாய் விரல் மடக்கி தட்டினால் டொக் டொக் என்று சத்தம் வர வேண்டும், ஆனால் டிக் டிக் என்று ஒலி வந்தது, காரணம், வந்த இருவரும் என் வாகனத்தை, இரு புறமும் தட்டி கொண்டிருந்து துப்பாக்கியால்.

தொடரும்

8 கருத்துகள்:

  1. அமெரிக்கா பற்றிய அறியாச் செய்திகளை வாரி வழங்குகிறீர்கள் நண்பரே.
    வாகனத்தைத் துப்பாக்கியால் தட்டிய இருவரைப் பற்றியும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. தகவல்கள் ஆச்சர்யமூட்டுகின்றது நண்பரே
    துப்பாக்கியோடு வந்தவர்கள் போலீஸாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன் நானும் ஆவலுடன்.....

    பதிலளிநீக்கு
  3. நீங்களும் ,தோழர் கில்ல்ர்ஜியும் மிக விரைவாய் எனது பதிவை படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறீள்கள் தோழர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பினும் நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் முந்தி விட்டாரே..

      நீக்கு
  4. பள்ளி்க்கூடத்தில் தூங்கினால் ஆசிரியர் எழுப்பக்கூடாதா
    படிக்கதானே போகிறார்கள்.

    பதிலளிநீக்கு