வியாழன், 11 அக்டோபர், 2018

இயற்கையின் திருவிளையாடல்

ஒரு சில வாரங்களுக்கு முன் தான் உச்ச நீதி மன்றம் ஓர் இன சேர்க்கை பற்றி தீர்ப்பு அளித்திருந்தது.
ஆனால் இதை முன்பே அறிந்தது போல டென்மார்க் நாட்டின் விலங்கியல் பூங்காவில் இரு ஆண் பென்குயின்கள் ஒன்றாய் வாழ்ந்து வருகின்றன .
அங்கு நடந்த ஆர்வம் கூட்டும் ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
மனித இனத்தில் மட்டுமல்ல , மற்ற இனத்திலும் கலப்பினம் உண்டு என்பதை பென்குயின்கள் நிரூபித்து உள்ளன.
ஓடென்ஸ் என்று ஒரு விலங்கியல் பூங்கா டென்மார்க் நாட்டில் உள்ளது, நகரத்தின் பெயரே தான் பூங்காவிற்கும்.
அனைத்து விலங்கினகளுக்கும் உள்ளது போல பென்குயின் இனத்திற்கும் தனி இடம் உள்ளது அப்பூங்காவில்.


கலப்படம் அங்கும் பரவி உள்ளதால் இரு ஆண் பென்குயின்கள் ஒன்றாய் சேர்ந்து குடும்பம் நடத்துகின்றன.
காலப் போக்கில் இவர்களுக்கே தெரிந்து விட்டது போலும் தம்மால் ஒரு பென்குவின் குஞ்சை ஈன்றெடுக்க இயலாது என்று.
பென்குவின் குஞ்சுக்காக ஏங்கவும் துவங்கின.
கடந்த செப்டம்பர் மாதம் 26  ம் தேதி . தாய் , தந்தையர் சகிதமாக பென்குவின் குஞ்சு ஒன்று உலா வருவதை கண்டன.
இவைகளுக்கு நல்ல நேரமோ என்னவோ தாய் கரையில் தன்னுடைய கணவனையும் குஞ்சினையும் கரையிலேயே விட்டு நீந்த சென்று விட்டது.
தந்தையோ பொறுப்பின்றி வீதி உலா வர தொடங்கினார்.
தக்க சமயம் இது தான் என்று காத்திருந்த இரு ஓரின சேர்க்கையாளர்களும் பென்குவின் குஞ்சினை தூக்கி சென்று விட்டன தம் இடத்திற்கு.
பொறுப்பற்ற தந்தை விபரீதத்தை உணராதிருக்கையில் கரை திரும்பிய தாயோ தன் குழந்தையை தேட துவங்கியது.
சேண்டி என்ற பூங்கா பாதுகாப்பாளர் இந்த கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
மேற்கொண்டு நடக்கப்போவது கண்டு களிக்கும் நோக்கில் வாளா  இருந்தார், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல்.
பூங்கா பாதுகாவலர்களும் அடுத்த ஒரு நாள் வரை குஞ்சின் பெற்றோர் அதனை தேடவில்லை என்றால் அது தத்து எடுக்கப்பட்ட இடத்திலேயே விட்டு விடலாம் என்ற முடிவுக்கும் வந்தனர்.
மறுநாள் பெற்றோர் தேட துவங்கி , தங்கள் பென்குவின் குஞ்சு கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டு பிடித்தும் விட்டனர்.

                                                 சண்டையின் போது
இரு குடும்பத்தினருக்கும் இடையே சண்டை நடந்தது சிறிது நேரமே. இறுதியில் பென்குவின் குஞ்சு உண்மையான பெற்றோரிடம் பூங்கா பாதுகாவலர்களால் ஒப்படைக்கப்பட இந்த விவகாரம் முடிவிற்கு வந்தது.
பாதுகாவலர்கள் அத்துடன் நிற்கவில்லை
வேறு ஒரு பென்குயினிடமிருந்து ஒரு முட்டையை எடுத்து இந்த ஆண் இணைக்கு கொடுக்க அவை இரண்டும் தற்போது அடை காத்து , குஞ்சு பொறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இயற்கையின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றன்றி வேறென்ன .

புதன், 12 செப்டம்பர், 2018

ஊதியம் மனிதனுக்கு மட்டுமா என்ன

ஊதிய உயர்வு போத வில்லை, ஊக்கத் தொகை போத வில்லை என்று பல தொழிற் சங்கங்கள் போராடுவதை பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு 9 ஆண்டுகள் எந்த போராட்டமும் செய்யாமல் கொடுத்த பணியை அழகாய் செய்து வந்த ஒரு ஜீவராசி அதுவும் மனிதன் அல்ல எனும் போது ஆச்சரியம் மேலிடத்தான் செய்கிறது.

இது 19 ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு.

மனிதனுக்கும் வானர வகை சேர்ந்த பபூன் ஆகிய இருவருக்கும் நடந்த ஓர் அபூர்வ நிகழ்வு.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் நகரில் உள்ள ஒரு தொடர் வண்டி நிலையத்தின் பெயர் உய்டன்ஹேஜ். இங்கு ஜேம்ஸ் என்பவர் பாதுகாவலராக பணி புரிந்து வந்தார்.

ஓடிக்கொண்டிருக்கும் தொடர் வண்டியிலிருந்து அனாயாசமாக குதித்து அருஞ்செயல் செய்பவர் ஆகையால் ஜம்ப்பர் என்ற புனை பெயரும் உண்டு இவருக்கு.

இதில் இணையாய் ஓடிக்கொண்டிருக்கும் இரு தொடர் வண்டிகளுக்கிடையே தாவுவதும் அடக்கம்.

பல முறை இரு வண்டிகளுக்கிடையே தாவுவது இவருக்கு வாடிக்கையாகி போனது என்றாலும், இந்த செயலே ஒரு நாள் இவருக்கு எமனாய் மாறியது.

ஒரு முறை தாவும் போது கால் சறுக்கி விழுந்து இரு கால்களையும் பறி கொடுத்தார்.

இழந்தது கால்களை மட்டுமே , நம்பிக்கையை அல்ல.

ஒரு சில மாத ஓய்விற்கு பின்னர் செயற்கை கால்களை பொருத்திக் கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பிய இவரிடமே நிர்வாகம் பணியை திரும்ப ஒப்படைத்தது நன்கு பணி செய்பவர் என்பதாலும், கருணையின் அடிப்படையிலும்.இவர் இல்லம் தொடர் வண்டி நிலையத்திலிருந்து சுமார் ½ கி.மீ தொலைவே என்பதால் பணிக்கு சென்று வர தண்டவாளங்களின் மேல் கையால் தள்ளப்படும் வண்டி போன்ற சக்கர நாற்காலியை பயன் படுத்தி வந்தார்.

தற்போது அவருக்கு வழங்கப்பட்டது நிலைய பாதுகாப்பு மற்றும் உய்டன்ஹேஜ் நிலையத்தில் சமிக்ஞை விளக்குகளை இயக்குவது போன்று பணிகள்.

மேலும் இவர் தாமாகவே முன் வந்து நிலைய பூங்காவினை பராமரிக்கவும் செய்தார்.

இவ்விதமான பணிகளை தொடர்ந்து செய்து வந்த இவருக்கு ஒரு நாள் அருகிலிருந்த சந்தைக்கு செல்ல நேரிட்டது.  

அங்கு ஓர் அதிசய நிகழ்ச்சியை கண்டார்.

பபூன் ஒன்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மனிதரை தள்ளிக்கொண்டு வருவதை கண்டார்.

அமர்ந்திருந்த மனிதரே அதன் உரிமையாளர் என அறிந்து கொண்டு அந்த பபூனை விலைக்கும் வாங்கி விட்டார்.

பபூனுக்கு ஜாக் என பெயரிட்டு இல்லத்திலிருந்து பணிக்கு சென்று வர தாம் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை தள்ளுவதற்கு ஜாக்கை வைத்துக் கொண்டார்.

அமர்ந்தபடியே வேலை செய்யும் போது ஜேம்ஸ் இன் உத்தரவு படி ஜாக் சக்கர நாற்காலியை தள்ளி வந்த கதை நடந்து (நிகழ்ந்து) வந்துள்ளது.

மெல்ல மெல்ல ஜாக் தம் எஜமானர் செய்யும் வேலைகளை உள்வாங்க துவங்கியது. 

அதாவது சமிக்ஞை விளக்கு பணிகள் மற்றும் தொடர்வண்டி தடத்தை மாற்றுவது ஆகியவை.

தாம் செய்யும் வேலைகளை ஜாக் கூர்ந்து கவனிப்பதை கண்ட ஜேம்ஸ் அதனை மெல்ல பழக்க துவங்கினார். முதலில் அதன் கரம் பிடித்து தொடர்வண்டி தடத்தை மாற்றுவது மற்றும், சமிக்ஞைகளை மாற்றுவது(விலங்குகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை மட்டுமே தெரியும் என்றாலும் ஜாக் எப்படி பச்சை , சிவப்பு போன்ற நிறங்களை இனம் பிரித்தது என தெரியவில்லை) போன்ற வேலைகளை ஜேம்ஸ் பயிற்றுவித்தார்.


இதில் ரசிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் ஜேம்ஸ் கட்டளையிட்டால் மட்டுமே ஜாக் இந்த பணிகளை செய்யும் அளவிற்கு முன்னேறியிருந்தது தான்.

இந்த இருவருக்கும் இருந்த நெருக்கம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, ஒரு பெண்மணிக்கு அதிர்ச்சியையும் உண்டாக்கியது. ஆகையினால் தம் கடமை செவ்வனே செய்ய எண்ணி தொடர்வண்டி நிலைய உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து விட்டார்.

முதலில் நம்பாத அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வந்த தகவலை கொண்டு உய்டன்ஹேஜ்  தொடர்வண்டி நிலையத்திற்கே நேரில் வந்தது சோதனை செய்தனர்.

அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள் உடனடியாக இருவரையும் உய்டன்ஹேஜ் நிலையம் விட்டு வெளியேற உத்தரவிட்டார்கள் .

அதனை ஏற்க மறுத்த ஜேம்ஸ் இப்பணிகளை தாமே செய்வதாகவும் பபூன் ஜாக் தமக்கு உதவியாளர் என்ற அளவில் உள்ளதாகவும் கூறி வாதிட்டார்.

அதற்கு சாட்சியாக இது வரை எந்த ஒரு அசம்பாவிதமும் இந்த பகுதியில் நடக்கவில்லை என்று அவர் பல முறை வாதிட , வேண்டுகோள் அதிகாரிகளால் ஏற்கப்பட்டு ஜாக்கிற்கு சோதனை வைக்கப்பட்டது.

மீண்டும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள் அவ்வதிகாரிகள், பல விதமான சோதனைகளிலும் ஜாக் திறம்படவும் , பிழையின்றி செய்வதையும் கண்டு.

இந்த அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாக மாற , அதிகாரிகள் பபூன் ஜாக்கிற்கு சமிக்ஞையாளர் பதவியும் வழங்கினர் , உடன் ஊதியமும்.

உலக வரலாற்றிலேயே இது வரை ஒரு விலங்கு தொடர்வண்டி நிலையத்தில் பணியாற்றியது உண்டென்றால் அது நம் பதிவின் நாயகர் ஜாக் தான்.

சுமார் 9 ஆண்டுகள் பணி புரிந்த ஜாக் இறந்து போனது காச நோயால் 1890ல்.

இவ்வளவு பேசினோமே , நம் நாயகருக்கு எவ்வளவு ஊதியம் என்று பேசவே இல்லையே.

பணி புரிந்த 9 ஆண்டுகளில் ஒரு முறை கூட தவறே செய்யாத ஜாக்கிற்கு ஒரு நாளைக்கு .20 ராண்டுகளும் (தென் ஆப்பிரிக்க நாணயம்) மற்றும் வாரம் ஒரு முறை அரை குடுவை சோம பானமும்.

நன்றி : விகடன்

வெள்ளி, 15 ஜூன், 2018

மாற்று(ம்) திறனாளி


குழந்தை பிறந்தவுடன் வாரிசு வந்த மகிழ்வில் குடும்பமே திளைத்திருக்க வேண்டிய தருணம் அது.

பாட்டியார் மட்டும் பிறந்த குழந்தையை , இந்த பதிவின் நாயகரை ஏறெடுத்தும் பாராமல் மருத்துவமனையை விட்டு சென்று விட்டார்.

அப்படி என்ன நடந்து விட்டது.

வாருங்களேன் பார்ப்போம்.

1982 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி, ஆஸ்திரேலியாவில் நிக் வுஜிசிக் பிறந்த போது இவருக்கு இரு கரங்கள் மட்டுமல்ல, கால்களும் இல்லை.ஓர் அங்குலம் அளவுள்ள கால்கள் கொண்ட இவருக்கு ஒரு கால் அந்த சிறிய அளவிலும் கூட கோணலாகவே இருந்தது.

மற்றபடி இவர் முழு உடல் நலன் உள்ளவர் தான்.

ஒரு மாற்றுத் திறனாளி சிறுவனைப் போல் இவர் இல்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் பயிலாமல் இவர் மற்ற ஆரோக்கியமான மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே சேர்ந்தார், அரும்பாடுபட்டு.

தம் மீது விழுந்த கேலியான விமர்சனங்களை தாங்க இயலாமல் 8ம் அகவையிலேயே தற்கொலைக்கு முயன்றவர் , பின்னர் அவைகளை மெல்ல மெல்ல வெற்றி படிகளாக்கிக் கொண்டார்.

இவரின் தாயார் மாற்று திறனாளிகளை பற்றி ஒரு நீண்ட நேரம் இவரிடம் பேசியதே இவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது

இரு கரங்களும், கால்களும் இல்லை , கூடவே கவலையும் இல்லை என்பதே இவரது தாரக மந்திரம்.உயரம் .99 மீட்டர்களே உள்ள இவரது திறமைகளை பட்டியலிடுவது சிரமம் தான்.

தூரிகையை வாயால் கவ்விய படியே ஓவியம் வரைவதில் வல்லவர்.

ஓர் அங்குல கால்களை கொண்டே கால் பந்து அழகாய் விளையாடுவார்.கணிப்பொறியில் நிமிடத்திற்கு 45 சொற்களை இவர் அடிக்கவும் செய்பவர் என்பது மட்டுமல்ல, இவர் இசை கருவிகளும் வாசிக்கும் திறன் உடையவர்..

தமக்கென தனியாக வடிவமைக்கப்பட்ட மகிழ்வுந்தை செலுத்துவதில் வல்லவர்.


Skydiving செய்வதிலும் அஞ்சாதவர்..இவ்வளவு ஏன், இவர் நீந்தவும் செய்வார் என்றால் நம்ப முடிகிறதா.
முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர் ஓர் ஊக்கமூட்டும் மேடை பேச்சாளர்.2006 ல் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த இவர் 2012 ல் கனே மியாஹார என்ற பெண்மணியை கரம் பிடித்தார்.மேடை பேச்சிற்காக இது வரை சுமார் 57 நாடுகள் பயணித்துள்ளார்.3000 மேடைகள் ஏறியுள்ளார், ஒரு சில இடங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 110,000 மேலே.

“Life without limits” , “Limitless” , “Unstoppable “, “Attitude is everything”  போன்ற ஆங்கில புத்தகங்களை எழுதியுள்ளார்.


"The Butterfly Circus என்ற குறும்படத்தில் நடித்தமைக்காக விருதும் பெற்றார்..


பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

(பொருள்: உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை)

மேற்கூறிய திருக்குறளுக்கு ஏற்ப சிறந்த உதாரணமாய் வாழ்ந்து வரும் இவரை போன்ற திறமைசாலிகள் இவ்வுலகிற்கு மென்மேலும் கிடைக்க பெறுவார்களானால், மாற்று திறனாளிகள் என்ற சொல் அகராதியிலிருந்து மறைந்து, உலகை மாற்றும் திறனாளிகள் என்ற சொல்லே நிச்சயம் இடம் பெறும்.