ஞாயிறு, 17 மார்ச், 2024

எட்டாவது அதிசயமும் , எட்டாக் கனியும்

நண்பர் திரு. பி.வி வைத்தியலிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் மாத இறுதியில் தான் எழுதிய “சீறிப் பாயும் என் கவிச்சிந்தனைகள்” என்ற நூலை நுங்கம்பாக்கத்தில் ஸ்டெர்லிங் ரோட்டில் இருக்கும் ரயில்வே கிளப் அரங்கத்தில் வெளியிட்டார்.

பெரும் பதவியில் இருந்த அரசு அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் ரயில்வேத் துறை அமைச்சர் திரு.R வேலு IAS அவர்கள்.

அவரை இல்லத்திலிருந்து விழாவிற்கு அழைத்து வரும் பொறுப்பினை திரு.வைத்தியலிங்கம் ஐயா எனக்கு கொடுத்திருந்தார்.

அதனை மகிழ்வுடன் ஏற்று , ஆழ்வார்பேட்டை கிளம்பினேன்.

ஆயத்தமாக இருந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் காலம் தாழ்த்தாமல் மகிழ்வுந்தில் ஏறிக்கொண்டார்.

எவ்வித பகட்டுமின்றி, என்னிடம் மிகுந்த பரிவுடன் சராசரி மனிதன் போல் உரையாடத் துவங்கினார். 

திரு பி.வி வைத்தியலிங்கம் அவர்களைப் பற்றியும் ரயில்வே துறையைப் பற்றியும் பேசியபடி வந்தோம்.

தத்தம் அமெரிக்க அனுபவங்களையும் பரிமாறிக் கொண்டோம்.

சமீபத்தில் தான் அவர் அமெரிக்காவிலிருந்து பாரதம் திரும்பியிருந்தார். 

கிரீன் கார்டு வைத்திருக்கும் அவர்,  அடிக்கடி தமது மகள் இல்லம் சென்று வருவது வழக்கம். 

அவரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி பேச்சு திரும்பியது.

இக்கால அரசியல்வாதிகளின் நேர்மையற்ற தன்மையைப் பற்றி  இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டே கல்லெறிகிறாரோ என்ற எண்ணம் எனக்கு தோன்றவே செய்தது.

சார்........... என்றபடி இழுத்தேன்.

உண்மை தான் குமார். 2004 ம் ஆண்டு  முதன் முறையாக நான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானேன். 

நல்ல பல திட்டங்களை திரு.வைத்தியலிங்கம்  போன்ற திறைமையான அதிகாரிகள் மூலம் வகுத்து, ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை சேமித்துக் கொடுத்தேன் என்று சொன்ன மனிதர் மீது மதிப்பு கூடியது.

நேர்மையான அதிகாரியாக லஞ்சம் வாங்கியும் பழக்கம் இல்லை, அரசியல்வாதியாக வாக்கிற்கு பணம் கொடுத்ததும் பழக்கமில்லை என்ற சொற்கள் செவியில் விழுந்த போது,

நனவு தான் என உறுதிப்படுத்த என்னை நானே கிள்ளிப் பார்க்க வேண்டியதாயிற்று. 

முதன் முறை அதிர்ஷடவசமாக ஜெயித்தாலும், நான் இரண்டாம் முறை வெல்லவில்லை, 

ஆகையால், மூன்றாம் முறை எனக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொன்ன மனிதரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

உண்மை தான். நண்பர் திரு. பி.வி வைத்தியலிங்கம் அவர்கள் பல அமைச்சர்களுடன் நேரடியாக பணி புரிந்திருந்தாலும்,  ஊழல்வாதிகளுடன் நட்பு பாராட்டுவதை என்றும் விரும்பியதில்லை.


 மேடையில் திரு. வைத்தியலிங்கம் அவர்கள்

நண்பர் உமாகாந்தனுடன்


ஓய்வு பெற்ற பின்னரும், இன்று வரை திரு. பி.வி வைத்தியலிங்கம் அவர்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பது இவர் அவர்கள் மீது தான்.

இப்படிப்பட்ட அரிதான அரசியல்வாதிகள் பொக்கிஷங்கள் மட்டுமல்ல, உலகின் எட்டாவது அதிசயம் தான்.

நம் நாட்டிற்கோ எட்டாத அதிசயம் தான்.

4 கருத்துகள்:

  1. எல்லா இடங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்...அந்த நல்லவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் நாட்டிற்க்கு நல்லது.... அருமை

    பதிலளிநீக்கு
  2. நல்ல அரசியல்வாதிகளை மக்கள் அங்கீகரிப்பதில்லை என்பது நம் நாட்டில் எழுதாத சட்டம் நண்பரே...

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான் நண்பரே. வேதனையாக தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு