வியாழன், 15 ஏப்ரல், 2021

ஈன்ற பொழுதின்

நாம் இருவருமே ஒரே ஊரில் பிறந்தோம் , ஒன்றாய் படித்தோம் பள்ளி இறுதி வரை.

நுழைவு தேர்வில் உனக்கு கிடைத்தது இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (IIT) பொறியியல் படிப்பு.

எனது ஆர்வத்தினால் நான் தேர்ந்தெடுத்தது இந்திய ராணுவம்.

நீ பொறியியல் படிப்பை தொடர்ந்தாய்

நான் மிக கடினமான பயிற்சியை மேற்கொண்டேன்

உனக்கு வரையறுக்கப் பட்ட பணி நேரம்

எனக்கோ காலை 4 மணிக்கு துவங்கி மாலை 9 வரை , சில நேரங்களில் பணி நேரம் நீளவும் செய்யும்.

படிப்பை முடித்த உனக்கு பட்டமளிப்பு விழா.

பயிற்சிக்கு பின் பணியை மேற்கொண்ட எனக்கு வீர தழும்புகள்.

மிக பெரிய நிறுவனத்தில் வேலை உனக்கு.

எனக்கு மனம் நிறைவான நாட்டுப் பணி.

ஒவ்வொரு பண்டிகைக்கும் / நிகழ்சிக்கும் உனக்கு பெற்றோரை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

எனக்கோ தேசத்தை காக்கும் ஒவ்வொரு நாளும் தீபாவளி

பண்டிகைகளை நீ விளக்கேற்றியும், பொம்மை துப்பாக்கி வெடித்தும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தாய்.

நானோ பதுங்கு குழியில் இருந்தபடி நிஜ துப்பாக்கியுடன் தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன்.

ஒவ்வொரு மாலையும் உன்னை வரவேற்க உனது மனைவி காத்திருந்தார்.

எனது மனைவியோ , ஒவ்வொரு நாளும் நான் உயிரோடு இருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

பணி நிமித்தமாக நீ ஆல்ப்ஸ் மலை மீது பல முறை பறந்தாய் விமானத்தில்.

நானோ பயிற்சியின் ஒரு பகுதியாக மலையேற்றம் பழகிக் கொண்டிருந்தேன்.

நீ இல்லம் திரும்பிய போது , உன் மனைவியால் ஆனந்த கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை.

உன்னை கட்டி அணைத்துக் கொண்டார், நீயும் ஆறுதல் கூறினாய்.

உனக்கு உறவினரின் மலர் மாலைகள்.

நான் இல்லம் திரும்பிய போது எனது மனைவியாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை.

ஆனால் என் மனைவியால் ஆலிங்கனம் செய்ய இயலவில்லை.

எனக்கு மலர் வளையங்கள்.

காரணம் , நான் இருந்தது சவப் பெட்டியில் மார்பில் பாய்ந்த குண்டுகள் மட்டுமல்ல, உடன் வீர பதக்கங்களும்.

இந்த நீயும் நானும் இரு வேறு நபர்கள் அல்ல ,

1996 ம் பிறந்த கேப்டன் அஷுதோஷ் தனக்கு கிடைத்த பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்காமல்,

நமது ராணுவத்தில் சேர்ந்தார் தேசப்பற்றின் காரணமாக.



சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிர் துறந்தார், 24ம் அகவையிலேயே.

இந்த புண்ணிய தேசத்தில், பஞ்சமும் பட்டினியும் வராமல் இருப்பது பல நல்ல தொண்டு உள்ளங்களால், பிரார்த்தனைகள் / யாகங்களால் மட்டுமல்ல.

உன்னை போன்ற நல்ல ஆத்மாக்களும் முக்கிய காரணம்.

சென்று வா வீரனே. நீ என்றும் எங்கள் நினைவில் வீற்றிருப்பாய்.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ,

தன் மகனை (தேசத்திற்காக) மாண்டான் என கேட்ட தாய்.

நன்றி – இந்திய ராணுவம்.

சனி, 10 ஏப்ரல், 2021

சொர்க்கமே என்றாலும்

பல வருடங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு தீபாவளியின் போது எனது சொந்த ஊரான தஞ்சையில் சுமார் ஒன்றரை மாதம் தங்கும் வாய்ப்பு கிட்டியது.

கரோனாவுக்கு நன்றி (கூறும் முதல் நானாக தான் இருப்பேனோ என்னவோ)

அவ்வப்போது நண்பர்கள் திரு.ஜெயகுமார் அவர்களையும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சரவணன் அவர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதுண்டு.

ஒரு நாள் இருவரிடமும் பேசிவிட்டு இல்லம் திரும்பும் போது தான் மனதில் அசை போட துவங்கினேன்.

என்ன தான் பிழைப்பு தேடி என்னை போன்ற நண்பர்கள் தேசங்கள் பல விஜயம் செய்திருக்கிறோம் என்று பெருமை பீற்றி கொண்டாலும் சரி ,

டாலரிலோ அல்லது பவுண்டிலோ ஊதியம் பெற்றாலும் சரி ,

IIT, IISC போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் பயின்று அந்நிய தேசத்தில் நிரந்தரமாக குடி புகுந்தவர்களானாலும் சரி ,

அவர்கள் மன நிறைவு அடைந்து விட்டார்களா அல்லது மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்களா

(ஒரு சிலரை குறை சொல்ல இயலாது, இங்கிருக்கும் சாதி வெறியும் புரையோடிப்போன ஊழலுமே ஒரு சில காரணங்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்)

பணவாசம் சரிமனவாசம் இருக்குமா ..?

கூப்பிட்ட குரலுக்கு இங்கு உடனே வர இயலுமா ..?

நினைத்த மாத்திரத்தில் பள்ளி நண்பர்களுடன் ஒன்றாய் கூடி பழங்கதை பேசி மகிழ இயலுமா ..?

திருவிழாக்களிலும் , திருமணங்களிலும் சொந்த பந்தங்களை சந்தித்து மகிழ முடியுமா ..?

ஒன்று அல்லது இரண்டாண்டிற்கு ஒரு முறை சுமார் 15 நாட்கள் விடுப்பில் வரும் அவர்கள் எத்தனை பேரை சந்தித்து மகிழ இயலும் ..

(அதே சமயம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க குடியுரிமையை, தந்தையரின் உடல் நலம் கருதி உதறி தள்ளிய நண்பன் சீனிவாசனையும், அமெரிக்க குடியுரிமை பெற்ற பின்பும்10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருக்காக தாயகம் திரும்பி விட்ட நண்பன் இளங்கோவையும் இங்கு  நினைவு கூற விரும்புகிறேன்)

இவர்களை விட , பிறந்த ஊரில் தாம் படித்த பள்ளியிலேயே ஆசிரியப் பணி செய்து பல மாணவர்களின் இதயங்களில் என்றும் குடியிருக்கும் நண்பர்கள் ஜெயகுமார் மற்றும் சரவணன் போன்றோர்க்கு கிட்டிய பேறு சிறிதன்று.




கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கலாம்

வயதான பெற்றோருக்கு வேண்டிய நேரத்தில் பணிவிடை

தானா சேர்ந்த (மாணவர்) கூட்டம்

நிறைவான ஊதியம் , புண்ணிய தொழில் மற்றும் மகிழ்வான வாழ்க்கை

இதுக்குமேல வேறென்னங்க வேணும் ...................

ஊரு விட்டு ஊரு வந்து,

ராமராஜன் சும்மாவா பாடி இருக்கார்

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா "

சனி, 24 அக்டோபர், 2020

என்னை கவர்ந்தவை

சிறுவயது முதல் பஞ்சதந்திரம், பரமார்த்த குரு கதைகள் என சிறுவர் புதினங்களை படித்து  வளர்ந்திருந்தாலும் , காலப் போக்கில் நானும் உங்களை போல் எழுத்தாளர்களை மாற்ற துவங்கினேன்.

எனது முதல் புதினம் , என் பள்ளி நண்பனும் கமலின் தீவிர வெறியனுமான சரவணகுமார் பரிந்துரைத்த சாண்டில்யன் அவர்களின் “மஞ்சள் ஆறு” .


                               நண்பன் சரவணகுமார்

அதன் பின் யவன ராணி , கடல் புறா என அவரை தீவிரமாக பின்பற்றி வருகிறேன்.

இடையே பிகேபி , சுஜாதா மற்றும் தேவன் போன்ற நல்ல எழுத்தாளர்கள் என்னை(யும்) தங்கள் எழுத்துக்களில் இளமை மாறாமல் என்றுமே ஈர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி பல புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் நம்மை கவர்ந்தாலும் எழுத்துலகில் அவ்வளவாக பெயர் பெற்றிராத ஆயினும் என் நினைவில் என்றும் பதிந்திருக்கும் இரு நூல்களை பரிந்துரைக்க விரும்புகிறேன்.

தனிக்குடித்தனம் , ஊர் வம்பு போன்ற நாடங்கள் மூலமாக நமக்கு அறிமுகமான எழுத்தாளர் மெரினா அவர்கள் தம் சிறு வயது குறும்புகள் பற்றி எழுதியிருக்கும் , இல்லை இல்லை எழுத்திலேயே வாழ்ந்திருக்கும் நூல் தான் " சின்ன வயதினிலே ".





பட்டம் விடுதல் , பளிங்கி மேலும் பம்பரம் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தவராக இவர் தாம் செய்த லூட்டிகளை வருணிக்கும் விதம் , அக்காலத்திற்கு இட்டுச் செல்லுவது மட்டுமல்ல நமக்கு ஏக்கத்தையும் வரவழைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.




தந்தையின் பராக்கிரமங்களை விவரித்து ஈர்த்த இவர், அவரின் மரணத்தை பற்றியும் எழுதி வாசிப்போரை கண்ணீர் சிந்தவும் வைக்கிறார்.

எப்படி "பொன்னியின் செல்வன்" புதினத்தை என்ன தான் முயற்சி செய்து எடுத்தாலும் நம் கற்பனைக்கு ஈடாய் , அந்த செல்லுலாய்டினால் எதுவும் தர இயலாதோ அப்படி தான் , எத்தனை “Autograph” கள் வந்தாலும் இந்த நூலிற்கு ஈடாகாது என்பது என் ஆணித்தரமான கருத்து.

அப்புறம் , வாங்க சினிமா பத்தி பேசலாம்.

நான் இல்லை , பாக்யராஜ் தாங்க அப்படி அழைக்கிறார்.



(இந்த நூலை 90களில் எனக்கு அறிமுகம் செய்து வைத்த பள்ளி நண்பன் பாலுவிற்கு நன்றி)

திரைக்கதை மேதை என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு பாக்யா வார இதழின் கேள்வி பதில் பகுதி இவர் எழுத்தாளர் என்பதையும் காட்டியது.

ஆனால் இந்நூல் இவரது திறமையை நன்கு வெளிக்கொணர தான் செய்கிறது. 

ஆசிரியர் அழகாக அலசியிருப்பது ஒன்றோ இரண்டோ அல்ல, கிட்ட தட்ட தமது அனைத்து படங்களின் கதை, மற்றும் அதன் திரைக்கதை உருவான விதம் பற்றியும் தான்.


எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்தாலும் தாவணி கனவுகள், சின்ன வீடு , ஆராரோ ஆரிரரோ என ஒரு சில படங்கள் எப்படி தோல்வியை தழுவின என்று இவர் ஆராயும் விதம் நிச்சயம் வருங்கால இயக்குனர்களுக்கு ஒரு பாடமே.

எல்லாம் சரி , இவரது  தூறல் நின்னு போச்சு , அந்த 7 நாட்கள் , மௌன கீதங்கள் போன்ற படங்களில் யாருங்க எதிர்மறை நாயகன்.

அது வேறு யாரும் இல்லை , சூழ்நிலையே தான் என்று இவர் அலசும் விதம் ரசிக்கத் தக்கதே .

வாய்ப்பு கிடைத்தால் போங்க, நூல்களை அலசி பாருங்க.

சனி, 18 ஜூலை, 2020

மானிடராய் பிறத்தல் அரிது , அதிலும் .......

ஸ்ரீகாந்த் –ஊக்கத்திற்கு மறு பெயர் என்றே இவரை நாம் கருதலாம்.

1991 ம் ஆண்டு மச்சிலிபட்டினம், ஆந்திராவில் பிறந்தவர்.

பள்ளி படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு அங்கு கிடைத்த வரவேற்பு மாறுபட்டது.

கடைசி இருக்கையில் அமர்த்தப்பட்டார்.

சக மாணவர்களுடன் விளையாட்டு நேரங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

கரோனா காலத்திற்கு முன்பே இவர் தனிமை படுத்தப்பட்டார்.

இருப்பினும் தடைகளை தகர்த்தெறிந்து 10 ம் வகுப்பில் 90% பெற்றார்.

11ம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்காக விண்ணப்பித்திருந்த இவருக்கு இளங்கலை பாடத்தை மட்டுமே தேர்வு செய்ய இயலும் என்ற செய்தி இடியாய் இறங்கியது.

நீதிமன்ற உதவியை நாடினார்.

6 மாதங்களுக்கு பின் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

ஆயினும் ஒரு சில நடை முறை சிக்கல்களை கருத்திற் கொண்டு, படிப்பின் முழு பொறுப்பும் மாணவரை சார்ந்தது என்ற நிபந்தனையும் இடப்பட்டது.

ஏற்றார். 12 ம் வகுப்பில் இவர் பெற்றது 98%.

நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த இவருக்கு கல்லூரிகள் தந்த செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை ....

10ம் வகுப்பில் பெற்றிருந்த பட்டறிவே காரணம்.

தகுதியுள்ள மாணவர் உதாசீனப்படுத்தப் பட்டார்.

கல்லூரிகள் இவரை நுழைவு தேர்வை கூட எழுத அனுமதிக்கவில்லை.

மதியாதார் வாசலை மிதியாதே என்ற எண்ணத்தில் இவர் நம் நாட்டில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நேரடியாக அமெரிக்காவில் விண்ணப்பித்தார்.

MIT (Massachusetts Institute of Technology) , Stanford , Berkeley மற்றும் Carnegie Mellon ஆகியவற்றில் இடம் கிடைத்தது.

உலகப் புகழ் பெற்ற MIT யில் பட்டம் பெற்றார்.

அமெரிக்க டாலரை விரும்பாமல் நம் மக்கள் மீது பாசம் கொண்டு பாரதம் திரும்பினார் ,

தம்மை போல இன்னலுறும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உறுதி கொண்டார்.

2012 பொல்லன்ட் என்ற நிறுவனம் துவங்கப் பட்டது.

சுற்று சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் பொருட்களான மண் குடுவைகள் , கோப்பைகள் போன்ற பொருட்களை தயாரிக்கிறது இந்நிறுவனம்.

தென்னிந்தியா முழுவதும் 5 உற்பத்தி அலகுகளை கொண்டிருக்கும் பொல்லன்டில் சுமார் 600 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள்.

ஆண்டு வருமானம் 50 கோடி.

போதாதென்று 3000 மாணவர்களின் கல்விக்கு உதவுகிறார்.

அது சரி , இது போன்று பலர் நம் நாட்டில் உதவுகிறார்களே , படிப்பில் மிளிர்கிரார்களே ,

இவரிடம் என்ன அதிசயம் ..., இவர் எவ்வாறு வேறுபடுகிறார் என்ற கேள்வி நம்மில் நிச்சயம் எழும்.

ஆம் நண்பர்களே. இவர் வேறுபடத்தான் செய்கிறார்.

பெயரில் காந்தம் கொண்ட இவருக்கு இறைவன் கண்களில் காந்தத்தை அளிக்கவில்லை.


MITயின் முதல் (பார்வையற்ற) மாற்று திறனாளி என்று பெருமையை தாங்கி நிற்பவர்.



ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – Blessing in disguiseஎன்று.

"கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்" என்பது பொருள்.

பார்வையற்ற மனிதராய் பிறந்த நேரமோ என்னவோ , இன்று உலகமே வியந்து பார்க்கும் மா மனிதராய் இவர் உயர்ந்து நிற்கிறார்.


" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "