வியாழன், 6 ஜூன், 2019

கத்தியின்றி ரத்தமின்றி

பல மேற்கத்திய நாடுகள் இரட்டை குடியுரிமையை எளிதாக வழங்குகின்றன.

நம் தேசமோ அவ்வாறு இல்லை.

ஒரே குடியுரிமை தான் தருகிறது.

ஆனால் போர் தந்திரம் , வாட்போர் , உயிரிழப்பு என எதுவுமின்றி ,

ஐரோப்பா கண்டத்தில் ஒரு தீவு 6 மாதங்களுக்கு ஒரு முறை தனது தேசத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது.

கடந்த 350 ஆண்டுகளில் , சுமார் 700 முறைகளுக்கும் மேலாக இத்தீவு தனது தேசத்தை மாற்றியுள்ளது என்பது சற்றே வியப்புக்குரிய விடயம் தான்.

கி.பி 1630களில் துவங்கி சுமார் 25  ஆண்டுகளுக்கும் மேலாக பிரான்சு மற்றும்  ஸ்பெயின் நாடுகளுக்கிடையே நீடித்த போர்  ஒரு முடிவிற்கு வந்தது.

பிரான்ஸ் அரசர் 14ம் லூயிஸ்க்கும் , ஸ்பெயின் அரசர் 4ம் பிலிப்புக்கும் இடையே ,

கி.பி 7, நவம்பர் 1659ல் , பைரனீஸ் எனும் ஒரு மாறுபட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

                                         அரசர்களின் சந்திப்பு

அந்த ஒப்பந்தம் போரை நிறுத்துவதற்கும் மட்டுமல்ல , கூட்டாட்சி செய்வதற்காகவும் தான்.

இதன் படி ,

தீவின் நிர்வாகம் பிப்ரவரி மாதம் முதல் ஜூலை வரை  ஸ்பெயின் நாட்டிடமும் ,

ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை  பிரான்ஸ் நாட்டிடமும் என மாறி மாறி இருக்கும்.

               தீவு - ஸ்பெயின் ஆற்றங்கரையிலிருந்து

32000 சதுர அடிகளை மட்டுமே கொண்ட ஃபெசன்ட். எனும் இத்தீவு , இரு

நாடுகளுக்கிடையே ஓடும் பிடாஸோ என்ற ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது.


இந்த வரலாற்று புகழ் பெற்ற தீவிலே தான் போர் கைதிகள் பரிமாற்ற நிகழ்வு மட்டுமல்ல , அரச திருமணங்களும் நடந்தேறியுள்ளன.

பார்வையாளர்களுக்கு வருடத்தின் ஒரு சில  நாட்களிலே மட்டும் தான் தற்போது அனுமதி உண்டு.

ஒரு பிராந்தியத்தை கூட்டாக ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆட்சி செய்வது புதிது அல்ல. 

இருப்பினும் இத்தனை வருடங்களுக்கு கடந்தும் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள ஒரே கூட்டாட்சி என்பது இங்கு தான்.

கூட்டாட்சிக்கு அண்டார்டிகா கண்டம் மற்றொரு உதாரணம் , ஆனால் மனிதன் வாழ்வதில்லை என்பதே வேறுபாடு.

தேசத்திற்கு பெருமை சேர்த்த மா மன்னர்களை காட்டிலும், தம்மை கொள்ளை அடித்தவனையும், கொடுங்கோல் ஆட்சி புரிந்தவனை பற்றியும் அதிகம் மாணாக்களுக்கு பயிற்றுவிக்கும் ஓர் அரசாங்கத்தை விட , 

எப்பொழுதோ புனையப்பட்ட ஒப்பந்தத்திற்கு உரிய மரியாதை அளித்து அதனை இன்றும் நடைமுறை படுத்தும் இரு தேசங்களின் செயலானது நிச்சயம் போற்றுதலுக்குரியது.

புதன், 27 மார்ச், 2019

பழமொழியை பொய்யாக்கியவர்

இந்த பதிவின் முதற்பகுதியை இந்த இணைப்பில் காணலாம்.


“Jack of all , master of none” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

தமிழில் இதற்கு தொடர்புடைய ஒரு பழமொழி உண்டென்றால்
"அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்" என்பதே.

அனைத்து விஷயங்களிலும் அரை குறையாய் கற்று சொதப்புவதை விட
ஒரே விஷயத்தை முழுமையாக கற்று தேற வேண்டும் என்ற பழமொழியை
பொய்யாக்கி அகலவும் உழுதிருக்கிறார் ஆழவும் உழுதிருக்கிறார் ஒருவர்.

இவரை சந்திக்க நானும் நண்பர் ராஜேஷும் நேரம் கேட்டது டிசம்பரில்
நேரம் கிடைத்தது பிப்ரவரியில் இறுதியில்.                                

                                             நானும் உமர் அவர்களும் 


                                        நண்பர் ராஜேஷுடன்

அந்த அளவிற்கு மனித இதயம் ஓய்வின்றி துடிப்பதை போல, பல்வேறு பணிகளில் சுழன்று கொண்டிருக்கிறார்.

ரத்தவியல் தொடர்பான படிப்பை முடித்தவருக்கு,
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பணிபுரிய துவங்கிய பின்னர் தான்
அதிலிருக்கும் ஒரு சில விரும்பத்தகாத விஷயங்கள் பிடிபட துவங்கின.

இளைஞனுக்கே உரித்தான நேர்மையும் கோபமும் வெளிப்பட மெல்ல மெல்ல அத்துறையிலிருந்து விலகி ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.

இந்த மருத்துவத்தில் சரியான மருந்து அளவில் கொடுக்கப் பட்டால் அற்புதமாய் வேலை செய்யும் என்பதும் , 
தவறான அளவில் கொடுக்கப் பட்டால் அதீத கேடும் என்பதே அந்த மருத்துவத்தின் சிறப்பு.

அப்படியென்றால் இதையும் தாண்டி வேறேதும் சிறந்த மருத்துவம் இருக்க முடியுமா ..?

தேடினார்.

தொடு சிகிச்சை பற்றி கேள்வியுற்றார். அதை பற்றி ஆராயலானார்.

அக்குபங்சர் என்பது ஓர் உயர் நிலை மருத்துவம் என்பதை உணர்ந்த அவர் மெல்ல மெல்ல அதை நோக்கி திரும்ப தொடங்கினார்.

2002ல் திரு. போஸ் முஹம்மது மீரா அவர்கள் நடத்தி வந்த தொடு சிகிச்சை நிலையத்தில் ,

மருத்துவ அறிக்கைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும் ,

நோயாளிகளுக்கு சிகிச்சை நேரம் என்பது வெறும் 1 நிமிடமே என்பதும் அவரை வெகுவாக ஈர்த்தது.

அதனை முழுமையாக கற்று தேர்ந்தார்.  
            
இந்த அற்புத கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் , கம்பம் கல்வி குழுமத்தை நிறுவி இக்கலையை பிறருக்கு கற்பிப்பதிலும் ,

திரு .போஸ் என்ற விஜயனுக்கு வில்லாய்  இருந்தார் , இன்றும் இருக்கிறார்.

தற்போது கம்பம் கல்வி குழுமத்தின் முதல்வராக பணி புரிந்து வருகிறார் .

திரு. போஸ் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர் என்றால் , இவர் ஒரு  தகவல் பெட்டகம் என்பது மிகையே அல்ல.

இவர் வகுப்பெடுக்க துவங்கினால் குண்டூசி விழும் ஓசை பக்கத்து அறையிலிருந்தும் கேட்கும்.

அக்குபங்சரின் வரலாறு ஆகட்டும் , அதன் தத்துவங்கள் அல்லது கிருமிகள் பற்றிய பாடம் ஆகட்டும் ,   

இவர் அழகான பேச்சு ஆர்வமற்றோரையும் தம்பால் ஈர்க்கும்  ஈர்க்கும்.

அருமையான எழுத்தாளர்.

உடல் , மனம் , மருத்துவம் தொடர்புடைய பல நூல்களின் ஆசிரியர் இவர்.

தொடு சிகிச்சை துறைக்கு வரும்முன்னே ஒரு சில கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

டாக்டர் விகடன் , குங்குமம் போன்ற போன்ற சஞ்சிகைகளிலும் தொடர்கள் எழுதியுள்ளார்.

இவரது முதல் நூலானஉடலின் மொழி” வெறும் 5 நாட்களில் எழுதப்பட்டது.
உண்ணும் உணவுகளை பற்றிய விழிப்புணர்வு வேண்டுமா .

இவரது “Kitchen to clinic படியுங்கள்.

“Sodium Lauryl sulfate “ என்ற வேதி பொருள் 2  / 4 சக்கர ஊர்திகளை பழுது பார்க்கும் இடங்களில்,

தரையில் உண்டாகும் கருமை நிற கறையை போக்கும் ஒரு வேதி பொருளே என்பதும்,

நமது பற்பசைகளில் அது பயன்படுத்தப் படுகிறது என்ற செய்தியையும்
Kitchen to clinic” நூலில் படித்தால் நாம் பற்துலக்கவே 100 முறை யோசிப்போம்.

கவலை வேண்டாம் , அதற்கான தீர்வையும் அவர் சொல்கிறார்.

நோயில்லாமல் வாழ வேண்டுமா - "நோய்களிலிருந்து விடுதலை"

தடுப்பூசி தேவையா ஒன்றா - "தடுப்பூசி - வெளிப்படும் உண்மைகள்"

தற்போது பிரபலமாகி வரும் பேலியோ உணவு முறை பற்றி தமது அடுத்த நூலில் எழுதவிருக்கிறார்.

பழங்கால பிராமி  தமிழெழுத்துக்களை கற்க வேண்டுமா ..?

இவர் கற்றுக்கொண்டதோடு முறையாய் அதற்கான ஏற்பாடும் செய்கிறார்.

                                     அகழ்வாராய்ச்சி பணியில் 

பல ஊர்களுக்கு சென்று கேட்பாரற்று கிடைக்கும் கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்து சட்ட ரீதியாக தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் உண்மையை வெளிக்கொணர.

பிராமி எழுத்துக்களை பயின்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில்

கஜா புயலா - அங்கு பறக்கிறார் தமது குழுவினருடன்.

கேரளாவில் வெள்ளமா - நேரில் சென்று உதவி கரம் நீட்டுகிறார்.

திரு . போஸ் அவர்கள் இறைவனை தேடுவது ஒரு தனி மார்க்கம் என்றால் , இவர் மனித தொண்டாற்றுவதில் இறைவனை காண்கிறார்.

அது மட்டுமல்ல நண்பர்களே.

எழுத்தாளர்களை இவர் ஊக்குவிக்கும் முறை முற்றிலும் வேறு பட்டது.

தம்முடைய மாணவர்களை ஒரு குழுவாக இணைத்து எழுத்தாளர்களின் நூல்களை படிக்கச் செய்கிறார்.

பின்னர் மாணவர்களின் கருத்துக்களை / விமர்சனங்களை கை அடக்க புத்தகமாக அச்சடித்து அதனை நூலாசிரியர்களுக்கு பரிசளித்து விடுகிறார்.
இதன் மூலம் சுமார் 250 - 300 நூல்கள் ஒரே நேரத்தில் விற்பனையாவது மட்டுமல்ல,

வெளிப்படையான கருத்துக்கள் / விமர்சனங்கள் எழுத்தாளர்களுக்கு தூண்டு கோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.


                                     எழுத்தாளர்களுடன்

நவீன மருத்துவத்தில் புதிதாக ஏதேனும் வெளியிடப்படுகிறதா .

அதை பற்றி அறிந்து கொள்வதோடு அதன் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.

கீழடி பழமையானதா, சிந்து சமவெளி பழமையானதா ?

இவர் ஆதாரத்துடன் வாதிடுகிறார்.

தஞ்சையில் எத்தனை தங்கும் விடுதிகள் உள்ளன ..?

இந்த மருத்துவம் சம்பந்தப்பட்ட அரசாணை எந்த நாட்டில், எப்போது வெளியிடப்பட்டது.

16  ம் நூற்றாண்டில் எந்த நாடு செல்வ செழிப்புடன் இருந்தது.

தற்போதைய இந்திய மருத்துவ குழுவின் தலைவர் யார் , இப்பதவிக்கு வரும் முன் என்ன செய்துகொண்டிருந்தார்.

30  வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா கண்டத்தில் வந்த நோய் என்ன , அது எத்தனை நாட்களில் சரி செய்யப்பட்டது .

இந்த நூற்றாண்டில் இந்த நாட்டில் ஆலயம் கட்டப்பட்ட போது என்னென்ன நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

இணையத்தில் தேட வேண்டாம்.

இவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே போதும்.

நமக்கு வேண்டிய விவரங்களும் கிடைக்கும், சற்று அதிகமாகவும் கிடைக்கும்.

தீராத அறிவு வேட்கையே இவரின் வெற்றிக்கு காரணம்.

2010ல் இவர் எழுதியவீட்டுக்கொரு மருத்துவர்” நூலை வெளியிட்டது
நம்மாழ்வார் ஐயா அவர்கள் தான்.


தமது நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை அடிக்கடி சந்தித்து பேசினாலும்,
ஒரு முறை கூட அவரின் புகழ் பெற்ற கதா பாத்திரங்களான பரத் மற்றும் சுசீலா பற்றி இவர் பேசியதில்லை என்பது வியப்பை தரும் விஷயம் தான்.

சுமார் 5 ஆண்டுகள்  திரு. போஸ் அவர்களுடனே இருந்து, நண்பராக பெருமதிப்பை பெற்ற இவர்,
அவரது உறவினராகவும் ஆனார், மருமகன் என்ற முறையில்.

இந்திய ஆட்சி பணி அதிகாரி ஆவதற்குரிய அனைத்து திறமைகளும் இருந்தும் இவர் ஏன் அந்த பதவிக்கு முயலவில்லை என்ற வினாவிற்கு ,

ஒரு மருத்துவனாய் நோயற்ற சமுதாயம் உருவாக்குவதே முதற்கடமை என்று அதற்குரிய விடை வருகிறது.

இப்படி தாம் தொட்ட துறையில் எல்லாம் ஒளிரும் மனிதர் கணீர் குரலில் பேசி கவர்பவர் இப் பதிவின் நாயகர்,

மரியாதைக்குரிய எங்கள் அக்குபங்சர் ஆசான் திரு.உமர் பாரூக் அவர்கள்.

சனி, 2 பிப்ரவரி, 2019

மருந்தில்லா மருத்துவம்

மு.கு : கம்பம் கல்வி குழுமத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என்றும் எனது நன்றி.

மனிதன் மனதிலும் அவன் உண்ணும் உணவிலும் கலப்படமே பிரதானம் என்று ஆகிப்போன இன்றைய கால கட்டத்தில் நோய் நொடிகள் இல்லாத மனிதனை காண்பது உலகின் எட்டாம் அதிசயம் மட்டுமல்ல , எளிதில் எட்டாத ஓர் அதிசயமும் தான்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறைத்தோ அல்லது அழித்தோ  நவீன மருத்துவம் நம்மை பெரிதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றால் அது மிகை இல்லை. (ஒரு சில நல்ல மருத்துவர்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை).

மருந்தே உணவு என்று மா(நா)றிக் கொண்டிருக்கும் நேரத்தில் ,மருந்தும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று ,
மனிதர்களை விரலால் தொட்டே நாட்பட்ட நோய்களை  
குணமாக்கும் அக்குபங்சர் என்ற அற்புத மருத்துவ கலையினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அறப்பணியாக தனி நபராக இருந்து ஒருவர் தொடங்கினார்.

அது மட்டுமல்ல நண்பர்களே, இந்த கலையை முறையான கல்வி நிறுவனத்தின் மூலம் பலருக்கும் இவர் பயிற்றுவிக்கிறார் என்பது சிறப்பு.

அவர் பெயர் திரு. போஸ் முகம்மது மீரா.

அகவை 60 என்பது ஏட்டளவில் மட்டுமே.

துள்ளும் உள்ளம் 25ஐயும், உரமேறிய உருவம் 45ஐயும் இன்னும் தாண்டவில்லை.

இவர் ஒரு பல்கலை வித்தகர்.

அக்குபங்சர் ஆசான் , கராத்தேவில் கருப்பு பட்டை நிபுணர்.

சிலம்பத்தில் வல்லவர் , ஓர் அருமையான ஆன்மீக பேச்சாளர்.

முத்தாய்ப்பாக மருத்துவ உலகின் மூலம் மனித குலத்திற்கு தொண்டாற்றும் நல் மனிதர்.

பூர்விகம் பெரியகுளம் , வசிப்பதோ கம்பம் நகரில்.

இவரை பற்றி வலைப் பூவில் எழுத வேண்டும் என்று தோன்ற ஒரு நாள் அலை பேசியில் அழைத்தேன்.

ஐயா நான் இந்த ஆண்டில் அக்குபங்சர் பட்டய படிப்பு பயிலும் உங்களின் மாணவன் என்று அறிமுகம் செய்து கொண்டு , அவரை பற்றி வலைப் பூவில் எழுத வேண்டும் என்ற எனது அவாவை தெரிவித்தேன்.

என்ன எழுத போகிறீர்கள்..?

நான் சந்திக்கும் பிரபலங்களை, மற்றும் நான் படிக்கும் அரிய செய்திகளை.

தொடு சிகிச்சை பற்றியும் அதை பயிற்றுவிக்கும் கம்பம் கல்வி குழுமம் மேலும், அதை வழி நடத்தும் உங்களை / உங்கள் மருமகனான உமர் பாருக் அவர்களை பற்றியும் எழுத வேண்டும்.

சொன்னதோடு மட்டுமல்லாமல் எனது ஒரு சில படைப்புகளின் இணைப்புகளையும் "தந்தியில்" (டெலிக்ராமில்??) அவருக்கு அனுப்பினேன்.

அதை படிக்கும் முன்னரே ஜனவரி மாத இறுதியில் சந்திக்கலாம் என்றார்.

(என் கட்டுரைகளை பற்றி அவர் கூறிய கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சி என்பதை விட மன நிறைவை தந்தது)

தொடுசிகிச்சை முதல் புல்லாங்குழல் வரை இவர் ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும் காலத்திலும்,

எனக்கும் என் நண்பர் ராஜேஷ் பிரபாகரனுக்கும் சுமார் 4 மணி நேரங்கள்  எனது இல்லத்தில் இவருடன் செலவிடும் நல்வாய்ப்பு கிடைத்தது,
அவர் சொன்னது போலவே ஜனவரி இறுதியில்.

உடன் இவரது துணைவியாரும் எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்தது எங்களுக்கு இன்ப அதிர்ச்சியே.

கலந்துரையாடலை துவங்கினோம்.

ஆசான் திரு.போஸ் அவர்களுடன் நானும் , ராஜேஷும்

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தம் குடும்பத்தினர் ஒருவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக இவர்  நவீன மருத்துவத்தை நாட வேண்டியதாயிற்று.

அறுவை சிகிச்சை மூலம் உடல் உறுப்பே அகற்றப் பட இருந்த நேரத்தில் இறை அருளால் அக்குபங்சர் மருத்துவர் மூலம் அனைத்தும் இனிதே நடந்தேற , சீன பாரம்பரிய மருத்துவத்தின் பால் பெரிதும் ஈர்க்கப் பட்டார்.

(இன்றும் அந்த குடும்ப உறுப்பினர் உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதும், அவரும் தொடு சிகிச்சை நிபுணர் என்பதும் பெட்டி செய்தி.)

2000 ஆண்டு இம்மருத்துவ முறையை முழுமையாக திரு. போஸ் முகம்மது மீரா அவர்கள் கற்று தேர்ந்தார்.


2001 முதல் இந்த மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல, எதிர் கொண்ட சவால்களும்  தான்.

மனித உடல் என்பது பஞ்ச பூத அடிப்படையிலேயே படைக்க பட்டது.

எங்கு இதன் சம நிலை சீராக இல்லையோ அங்கு நோய் உண்டாகும் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப் படும்.

இங்கு சிகிச்சை நேரம் என்பது சுமார் ஒரு நிமிடத்திற்கும் குறைவே. அதாவது நோயறிதல் மற்றும் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது உட்பட.

முதலில் தெரிந்தவர்களுக்கு இலவச சிகிச்சை.

பின்னர் தெரிந்தவர்களின் இல்லம் தேடி, இவராகவே சிகிச்சை அளிக்க செல்லும் போது அங்கு கிடைத்த மறுமொழிகள் இவருக்கு தூண்டுகோலாகவே அமைந்தன.

ஐயா சாப்பிட்டு கொண்டிருக்கிறார் ….
இவர் காத்திருந்தார்.

ஐயா இப்போ TV பார்க்கிறாரே …!
இவர் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

இப்போ போயிட்டு அப்புறம் வர்றீங்களா ..?
இப்புறமும் வந்தார் , அப்புறமும் வந்தார்.

மருந்து மாத்திரை இல்லாமல் குணமாக்குறீங்களா , என்ன காதுல பூ சுத்துறீங்களா. …?
விரலால் குணமாக்கினார் , அதாவது காதில் பூ சுற்றினார்.

என்ன நோய் என்று நோயாளியே கூறும் முன்,  நாடி பார்த்தே இவர் பிறரை குணப்படுத்த , சமூகத்திற்கு இவர் மீதான நம்பிக்கை வளர துவங்கியது.

நிலைமை அப்படியே தலை கீழானது.

தொடுசிகிச்சை மருத்துவத்தின் சிறப்பு மெல்ல மெல்ல மக்களை சென்றடைய துவங்கியது, கூடவே இவரது புகழும்.

2002ல் சிகிச்சை நிலையம் துவங்கினார் கம்பம் நகரில்.

அப்போதும் தடங்கல் இல்லாமல் இல்லை.

வேறென்ன,ஒரு தற்காப்பு கலை ஆசான் உரமேறிய கரங்கள் கொண்டு தொடு சிகிச்சை அளித்தால் எலும்பு ஒடிந்து விடும் என்ற அச்சமே காரணம்.

முயற்சி திருவினையானது.

எப்படி ஒரு கருவானது ஒரு செல்லில் துவங்கி இரண்டாகி பல செல்களாக பெருகி வளர்கிறதோ, அதே போல ,

இவர் ஒருவருக்கு செய்த மருத்துவ மாயா ஜாலங்கள் இருவரை அடைய அந்த இருவரிடமிருந்து பலர் வழியாக மென்மேலும் வளர ஆரம்பித்தது.

இவரால் குணமான நபர்கள் தாமாகவே திரு. போஸ் முகம்மது மீரா அவர்களின் விளம்பர தூதுவர்களாக மாறினார்கள்.

இது வரை சுமார் 1 லட்சம் நோயாளிகளுக்கு மேல் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளார்.

குணப்படுத்திய நோய்கள் வெறும் நீரிழிவு ,புற்று நோய் ,சிறுநீரக நோய் ,ஆஸ்துமா போன்ற விரல் விட்டு எண்ணி விட கூடிய தீராத மேலும் கொடிய நோய்களை மட்டுமே

பிறந்து 4 ஆண்டுகள் ஆகியும் நடக்க இயலாதிருந்த ஒரு குழந்தையை எந்த வித ஊனமும் இல்லாமல் குணப்படுத்தியத்திய நிகழ்வை தான், நெகிழ்ச்சியுடன் என்றுமே இவர் குறிப்பிடுகிறார்.

ஏழைகளிடம் கறாராக பணம் கேட்டதில்லை, மாறாக இலவச சிகிச்சை அளிப்பார் இன்றும்.

திரு. போஸ் முகம்மது மீரா அவர்கள் அத்தோடு நின்று விடவில்லை.

இந்த அற்புத கலை மேலும் வளர வேண்டுமென்றால் இதனை முறையாக பயிற்றுவிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

2004 இல் கம்பம் கல்வி குழுமத்தை தோற்றுவித்தார் ஓர் இயக்குனராக.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பமிட்டு அக்குபங்சர் பட்டய படிப்பை துவக்கினார்.

அப்போது சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 5க்கும் கீழ்.

மனம் தளரவில்லை.  விடா முயற்சி விஸ்வரூப வெற்றியானது.

இன்றோ சேரும் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது, ஒவ்வொரு வருடமும்.

                               

வார இறுதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் பட்டய வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன.


                     சமீபத்தில் பட்டயம் முடித்த மாணவர்கள்

அது மட்டுமல்லாது பயிற்சி முடித்து வெளியேறும் மாணாக்கள் பெரும்பாலான நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் அக்குபங்சர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்கள், மனிதன் நோயின்றி வாழ.


அக்குபங்சர் கொண்டாப்படும் வாரம் முழுவதும் இலவச சிகிச்சை

ஆசான் அவர்களை போன்ற பயிற்றுவிப்பாளரை நான் இதுவரை கண்டதில்லை.


பாடத்தை (பார்வையற்ற) மாற்று திறனாளிகளுக்கும் கூட அவர்கள் மனக்கண்ணில் நன்கு பதியும் படி நடத்துவார்.

உண்மை தான் நண்பர்களே ,எங்களுடன் அந்த நிலையில் உள்ளோர் எழுவர்  பயிலுகிறார்கள், அதை கொண்டே சொல்கிறேன்.

அக்குபங்சர் கற்பதற்கான தகுதி உள்ளத்தில் ஆர்வம் மட்டுமே.
                                         வகுப்பினிடையே

பல்கலைக்கழக விதிமுறைகளுக்காக 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது கட்டாயமாக்க பட்டிருக்கிறது.

ஒரு வருடம் பட்டய படிப்பு பயிலும் மாணாக்கள், சட்ட பூர்வமாகவே நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யலாம்.

ஆனாலும் மருத்துவனுக்கு ஒரு சில விதிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளதாக இவர் மாணாக்களுக்கு போதிப்பார்.

ஒரு மருத்துவன் என்பவன் உள்ளத்தளவில் தவ வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.

அவனது நோக்கம், மக்கள் நோயின்றி வாழ வேண்டுமென்பதே தவிர வணிகம் அல்ல.

நோயின்றி வாழ - "பசித்து புசி , பசியோடு எழு" .

நோய்வாய்ப்ப பட்டால் - "பட்டினியே சிறந்த மருந்து"

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

ஆகியவை எங்களுக்கு சொல்லப் படும் தாரக மந்திரங்கள்.

மருந்தில்லாத உலகம் , நோய் இல்லாத சமுதாயம் என்பது இவரது வாழ் நாள் இலக்கு.

இவருடன் இணைந்து இவரது மருமகன் திரு.உமர் பாருக்கும் கரம் கோர்த்து இந்த கல்வி குழுமத்தை நடத்தி வருகிறார்.

(சுவாரஸ்யம் மிகுந்த திரு. உமர் பாருக் பற்றி அடுத்த பதிவில்)

போஸ் அவர்களிடம் திரும்புவோம்.

இந்த அகவையிலும் போஸ் அவர்கள் உடற் பயிற்சியை அன்றாடம் செய்கிறார்.

பலருக்கு கராத்தே மற்றும் சிலம்பமும்  கற்று தருவதோடல்லாமல் , 
புல்லாங்குழல் வேறு கற்று வருகிறார்.

அடுத்து எந்த புல்லாங்குழல் வித்துவான் தலையில் கை வைக்க போகிறாரோ தெரியவில்லை.

திரு. போஸ் முகம்மது மீரா அவர்களின் ஆன்மீக  பேச்சு தனித்துவமானது.

உதாரணம் - மாதா , பிதா , குரு , தெய்வம் என்பவர்கள், வரிசைப் படி நாம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டியவர்கள் என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு இவர் விளக்கம் மாறுபட்டது தான்.

ஒரு தாய் என்பவள் , எப்படி தன் குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டுகிறாளோ , அதே போல குரு என்பவர் நம்முள் இருக்கும் தெய்வத்தை காட்டுவார் , என்பது தான் அது.

மரணமில்லா பெரு வாழ்வு என்பது ..?

மறுபிறவி இல்லாதது என்பதை மட்டும் குறிக்கவில்லை, வையத்துள் ஒரு மனிதன் வாழ்வாங்கு வாழ்வானாயின் அவன் மா-ரணம் இல்லாத இயற்கை  எய்துவான் என்றும் ,

இறக்கும் தருவாயில் உடல் துர்நாற்றம் வீசாமல், முறுக்கேறாமல் இயல்பாய் இருக்கும் என்று அவர் சொன்ன போது வியப்பின் உச்சிக்கே நாங்கள் சென்று விட்டோம்.

வெறும் வணிக நோக்கில் மட்டுமே செயல்படும் பல மருத்துவர்கள் மத்தியில் ,உன்னத எண்ணத்தில் மக்கள் தொண்டாற்றி வரும் இவரை போன்றோர் உயர்ந்தவர்கள் என்று சொல்வதை விட ஒப்பீடற்றவர்கள் என்பதே சாலச் சிறந்தது.

குறள் 948 :

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.