வியாழன், 13 அக்டோபர், 2022

திரைநாயகர்களும் தரை நாயகர்களும்

நட்சத்திர விடுதியின் அறையில் அமர்ந்தபடி இயக்குனர் கதை சொல்ல துவங்குகிறார்.

இரு கரங்களையும் “ப வடிவில் பாரதிராஜா போல் வைத்து இல்லாத ஒளிப்பட கருவியை இயக்கி, கதை சொல்கிறார் தயாரிப்பாளருக்கு.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரியும் திரு.வைத்தியநாதனுக்கு ஆண் மகவு பிறக்கிறது.

பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீனிவாசன் என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

பள்ளி படிப்பை முடித்து பொறியாளர் கனவை எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவனுக்கு கிடைத்த மதிப்பெண் 85% மேல்.

நுழைவு தேர்வில் நன்கு தேறியும் கூட,

இட ஒதுக்கீட்டின் காரணமாக தாம் விரும்பிய பொறியியல் படிப்பு முதல் நிலை கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்ற செய்தி பேரிடியாய் தலையில் இறங்குகிறது.

இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளில் கிடைத்தும் ,

பொருளாதார சூழ்நிலை காரணமாக இளங்கலை படிப்பை தேர்ந்தெடுக்க நேர்கிறது.

81 விழுக்காடுகளுக்கும் மேல் பெற்று, வகுப்பில் முதல் மாணவன் என்ற பெருமையுடன் கல்லூரி படிப்பை முடிக்கிறான்.

வேலையில்லா திண்டாட்டம் என்ற சிக்கலுக்கு நமது கதாநாயகனும் விலக்கல்ல.

தன் முயற்சியில் சற்றும் தளராத அம்புலிமாமாவின் விக்கிரமன் போல் விடா முயற்சியானது ,

சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைக்கச் செய்கிறது.

மிக குறைந்த ஊதியத்தின் காரணமாக நம் நாயகன் சில நாட்கள் பேருந்தை பயன்படுத்தாமல் ,

நடராஜனையே நம்பி அலுவலகம் செல்வதுண்டு.

இவனது இந்த நிலை கண்டு மனமிரங்கும் இந்த நிறுவனத்தின் மேலாளர்கள் இருவர்,

கணிப்பொறியில் இவன் மேலும் தொழில் நுட்பங்களை கற்க பொருளாதார உதவி செய்கிறார்கள்.

நாயகன் வாழ்நாள் முழுதும் செய்நன்றியை மறவாமல் நினைவில் வைத்திருக்கிறான்.

காலச் சக்கரம் மெல்ல உருண்டோடுகிறது.

பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் , முதுநிலை மேலாளர் , பின் இயக்குனர் போன்ற பதவிகளை வகிக்கிறான் நாயகன்.

மிதி வண்டி மிதித்தும் , தொடர் வண்டியில் தொற்றிக் கொண்டும் சென்றவனை இப்போது மகிழ்வுந்து மகிழ்விக்கிறது.

தஞ்சையின் ஏதோ ஒரு சந்தின் மூலையில் ஒண்டுக் குடித்தனம் செய்தவன்

இன்று உலக வரைபடத்தில் மூலைகளில் இருக்கும் தேசங்களுக்கெல்லாம் பறக்கிறான்.


அறிமுக நாயகன் - ஸ்ரீனிவாசன்

பிரம்மச்சாரியாய் இளங்கலை பட்டம் பயின்றவனுக்கு காலப் போக்கில் கணவன் என்ற பட்டமும் பின்னர் தந்தை என்று பட்டங்களும் கிட்டுகின்றன.

கடும் முயற்சியின் பலனாய் இரு முதுகலைகள், ஒரு முனைவர் என பட்டங்களின் பட்டியல் நீளுகிறது 40 வயதிற்கு பிறகும்.


அமைச்சரின் கையால் முனைவர் பட்டம்

நிற்க – இப்படி நாயகன் வளர்ந்து வருகையில் கதையில் திருப்பம் வேண்டுமல்லவா.

தந்தை வைத்தியநாதன் தலையில் பலத்த அடிபட்டு நினைவிழக்கிறார்.

தாயார் திருமதி. ஜெயலக்ஷ்மி கூடவே இருந்து கணவரை, குழந்தை போல் கவனித்துக் கொள்கிறார்.

அடுத்து உணர்ச்சிப் பிழம்பான காட்சி (அதாங்க sentiment) .

ஒரு நாள் தாயார் பூஜை அறையில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை சொல்லியபடி முழங்தாளிட்டு கடவுளை வணங்குகிறார்.

வணங்கியவர் இறைவன் தாள் பற்றியபடியே அவனடி  சேர்கிறார் பூஜை அறையிலேயே.

தாயார் மரணம் என்ற துக்கத்தில் நாயகன்.......

இதை பற்றி எதுவும் தெரியாத நிலையிலோ தந்தை.........

இதற்கிடையே தாம் நீண்ட நாட்களாக பணிபுரிந்த நிறுவனம் ,  அயல் நாட்டிற்கு கட்டாய பணி மாற்றம் செய்கிறது.

நினைவு தவறிய தந்தையை, நித்தம் தவறாமல் நினைவில் நிறுத்தியிருக்கும் நாயகன்

தந்தையே முக்கியம் என்று வேறு நிறுவனத்தில் வேலை கிடைக்காமலே இப்பணியை துறக்கிறான்.

நீண்ட நாட்களாக அப்படியே இருக்கும் தந்தை , தம் துணைவியார் மறைவை பற்றி ஏதும் அறியாமலே இயற்கை எய்துகிறார்.

தந்தையின் மறைவு அளித்த சோகத்தை விட, அவர் தம் மனைவியின் மரணம் பற்றி ஏதும் அறியாமலே உயிர் நீத்த நிகழ்வு,

நாயகனை மீளாத் துயரில் ஆழ்த்துகிறது.

பீனிக்ஸ் பறவையாய் மீண்டு(ம்) எழுந்த ஸ்ரீனிவாசன் இன்று “Tigma Technologies என்ற பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.


தலைமை செயல் அதிகாரியாக வெளிவந்த அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் 10 நம்பிக்கை அளிக்கும் வியாபார நுண்ணறிவு (Business Intelligence) சேவை நிறுவனங்களில் ஒன்றாக டிக்மா நிறுவனத்தை , சிலிக்கான் இந்தியா என்ற சஞ்சிகை தேர்ந்தெடுப்பதற்கு மூல காரணமாகிறான். 


சிலிக்கான் இந்தியா நிறுவனத்திற்கு ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டி

என்ன சார் இப்படி கதையை முடிக்கலாமா என்று தயாரிப்பாளரை வினவுகிறார் இயக்குனர்.

திரையில் தோன்றும் நாயகரை போற்ற தெரிந்த பலருக்கு , தரையில் நம் கண் முன்னே தெரியும் ஸ்ரீனியை போன்ற பல நிஜ நாயகர்களை தெரிய வாய்ப்பில்லை.

செலவை பத்தி கவலை படாம இந்த கதையே படமா எடுங்க என்ற படி கிளம்பினார் தயாரிப்பாளர்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிலம்பாட்டம்

சிலம்பத்தை விட ஒல்லியான உடல் வாகு.

எடுத்து சுழற்றினால் சிலம்பம் போலவே இவரை எளிதாக சுழற்றி விடலாம் என்றே தோன்றுகிறது.

"வாங்க" என்று புன்னகைத்த படி என்னை சற்று காத்திருக்க சொன்னார்.

மார்கழியின் தொடக்கத்தில் ஒரு நாள் அதிகாலை எங்கள் பள்ளி விளையாட்டுத் திடலை சுற்றி  வந்து கொண்டிருந்த போது,

சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டத்தை கண்டேன்.


அவர்களிடம் பயிற்சியை தொடருமாறு சொல்லி விட்டு என்னிடம்  உரையாடலை தொடங்கினார்.

ஆசான் பெயர் யோவான்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ராமலிங்கம் எனும் காவல் ஆய்வாளரிடம் இக்கலையை கற்றுத் தேர்ந்திருக்கிறார் இவர்.

தேசிய / மாநில அளவிலும் பெற்ற பரிசுகள் போதாதென்று ,

பிரான்ஸ் நாட்டில் நடந்த சிலம்ப போட்டியில் பங்கேற்று நமக்கு பெருமை சேர்த்தவர்.

சிலம்பம் என்பது கம்பு மட்டுமே தொடர்புடைய

தற்காப்புக் கலை என்று தவறாக நினைத்திருந்த எனக்கு,

இவரது பதில் ஆச்சரியத்தை தந்தது.

முதல்ல நாங்கள் கராத்தே / குங்குபூ  மாதிரி கையால பாதுகாத்துக்கற வழியை சொல்லி தருவோம் .

அதுக்கு அப்புறம் தான் சிலம்பம் பழக ஆரம்பிக்கணும்.

சிலம்பம் எதனால் செய்யப் படுகிறது

பச்சையா மரத்திலிருந்து வெட்டி எடுத்த உடனே நாம விளையாட முடியாது.

குச்சியை உறுதி படுத்துற வழி முறைகள் கொஞ்சம் இருக்கு.

அதன் படி நாங்க செஞ்சு உறுதியான்னு சரி பாத்து

அப்புறம் தான் விளையாடுவோம்.

ஆரம்பத்துல மூங்கில் மாதிரி மரத்துல செஞ்சாங்க.,

கல் மூங்கில் மரத்துல  சிலம்பு செஞ்சா ரொம்ப உறுதியா இருக்கும்,

நிறைய நாள் விளையாடலாம்.

இப்போ கல்லு மூங்கில் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமுங்க சார்.

ஆல மர விழுதுலயும் செய்றதுண்டு.

இப்பல்லாம் பெரும்பாலும் பிரம்பை கொண்டு தான் செய்றாங்க.

இக்கலையில் பலவகைகள் உண்டா

கள்ள புத்து , கரடி பீடம் , குறவஞ்சி மற்றும் நாகபாசம் அப்படின்னு ஒரு சில வகை இருக்குங்க.

போட்டியில் எதை கொண்டு ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப் படுகிறார்

புள்ளி கணக்கு தான்.

எத்தனை தடவை எதிராளி மேல ஒருத்தன் தன்னோட சிலம்பத்தால நெத்தி, தோள் பட்டை , கை இது மாதிரி இடங்கள்ல பொட்டு வைக்கிறான் அப்டிங்கறதை வச்சு தாங்க வெற்றி .

இதன் பூர்வீகம்

நம்ம தமிழ்நாடு தாங்க. ஆதி காலத்துல மனுஷன் மிருகங்க கிட்டயிருந்து பாதுகாத்துக்கறதுக்கு செஞ்ச முயற்சி பின்னாடி சிலம்பமா மாறிடுச்சுங்க.

அதனால இந்த கலையில நாங்க செய்ற ஒரு சில அங்க அசைவுகள் விலங்கு மாதிரி இருக்கும்.

சிலம்பம் கற்றுக் கொள்ள ஏதேனும் தகுதி

ஆர்வம் ஒன்னு தாங்க.

அப்புறம் மெய்ப்பாடம்ன்னு எங்க மொழியில சொல்ற மாதிரி.

மாணவன் உடலையும் மனதையும் உறுதி படுத்திக்கணும்.

அப்புறமா தான் நாங்க சிலம்பத்தையே கையில கொடுப்போம்.

இதுவரை சுமார் எத்தனை சீடர்களை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள்

கடந்த 26 வருஷத்துல சுமார் 5000 மேல சொல்லி குடுத்திருப்பேங்க

மாதாந்திர கட்டணம் எவ்வளவு

கறாரா கேட்டதில்லைஅவங்களா எது குடுத்தாலும் வாங்கிப்பேன்.

எனக்கு இந்த கலை வளரணும். அது தாங்க முக்கியம்.

போட்டிக்கு வெளியூர் போன அனுபவம்

தமிழ்நாடு முழுக்க அப்புறம் ஆந்திரா , கர்நாடக டெல்லி மாதிரி இடங்கள்லாம் போயி போட்டியில கலந்துக்கிட்டு இருக்கோம்.

திறமை இருக்குற மாணவர்கள் அப்போ போட்டிக்கு வர முடியலைன்னா என் வீட்டு பித்தளை சாமான்களை அடகு வச்சு அவங்கள நிறைய தடவ கூட்டு போவேனுங்க.

(அருகில் இருக்கும் அவரது ஆஸ்தான சீடர் கார்த்தி அதனை வெகுவாக ஆமோதிக்கிறார்)

உங்கள் சீடர்களில் குறிப்பிடத்தக்க வகையில் யாரும்

அவங்கள்ல வைத்தியர்கள் ,ஒரு சில போலீஸ் ஆளுங்க, ஒரு பெண் நீதிபதி இப்படி உண்டுங்க.

உங்க புகைப்படம் கிடைக்குமா

வேணாங்க.அப்படி ஒன்னும் நான் பெரிய ஆள் இல்லையே

இப்படி பணம் எதுவும் வாங்காமல் சொல்லி தருகிறீர்களே, நிறைய படிச்சுட்டு ஒரு பெரிய வேலையில் இருக்கிறீர்களா

நான் ஒரு ஜவுளி கடையில பட்டு துணி செக்ஷன்ல “salesman” ஆ இருக்கேங்க.

நமக்கு தான் படிப்புக்கான அஸ்திவாரம் அஞ்சாவதோட அஸ்தமனம் ஆயிடுச்சுங்களே.



மானிட சேவை என்பது கலைகளை வளர்ப்பதிலும் இருக்கிறது என்பதை நமக்கு  என்பதை இவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.


"வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்"

செவ்வாய், 21 டிசம்பர், 2021

பிசாசு வாங்கிய பட்டம்

 நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது

இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ

நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும்.


ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ??

பிசாசு என்று விடை வருகிறது

ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.


அவ்வாறு தான் இவரது பெயரத்தி திருமதி . சிவகாம சுந்தரி

இன்றும் தனது பாட்டனாரை அன்போடு குறிப்பிடுகின்றார்.


தமிழ் , சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர்

இம்மொழிகளுக்கிடையே ஆன இலக்கணங்களை 1930 ம் ஆண்டு

ஒப்பீடு செய்து தமிழில் முதன் முறையாக 

முனைவர் பட்டம் பெற்ற பெருமையை தாங்கி நிற்பவர்.


மொழிகள் மற்றும் அவற்றின் இலக்கணம் மீதான வேட்கை தீராமல் 

மற்ற இரு மொழிகளிலும் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர்.

ரிக் , யஜுர் சாம வேதங்களை கற்றுத் தேர்ந்த வித்துவான்.

காஞ்சி பெரியவரே வேதங்கள் பற்றிய தமது ஐயங்களை தீர்த்துக் கொள்ள மடத்திலிருந்து ,

அவ்வப்போது ஆட்களை அனுப்பும் அளவிற்கு 

வேதத்தின் மீதான ஞானம் ஓங்கி இருந்தது என்பது இவரது சிறப்பு.


தாம் அடைந்த ஞானம் அனைவரும் பெற வேண்டும் என்பதை 

வாழ்நாள் குறிக்கோளாய் கொண்டிருந்தார்.


பணி ஓய்விற்கு பின்னர் துப்புரவு தொழிலாளர்கள் சிலருக்கு

அன்றாடம் இவர் திருக்குறள் கற்றுத் தந்ததே அதற்கு சான்று.


பல நூல்களை மும்மொழிகளுக்கிடையே மொழியாக்கம் செய்திருந்தாலும்

முதன் முதலாய் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த பெருமையையும் இவரே தட்டிச் செல்கிறார்.


மலர்மகள் கலைமகள் மகிழ்வொடுங் கூடி

நிலவுசோ ணாட்டில்   நீள்தமிழ் அரசாய்

மன்னுரு தொண்டை மான்திகழ் புதுவையிற்

பின்னங் குடியினிற் பிராம்மண குலத்தில்

கௌசிக முனிவன் கால்வழி வந்த

தோமிலாக் குணத்தினன் சாமிநா தனக்கும்

வாம மார் மங்கள நம்மை தனக்கும்

மகவென வந்தனை


என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரைப் பற்றி பாடல் புனைந்து தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது.

பணி ஓய்விற்கு பின் தமது பேத்தியே அனைத்தும் என்று 

அவருடனே இறுதி மூச்சு வரை வசித்தார்.

87 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்த மாமனிதர் ,

இறுதி வரை நோய் நொடி எதுவுமின்றி திடகாத்திரமாய் இருந்தார் ,

தம் பேத்தியை ஓட்டப் பந்தயத்திற்கு அழைக்கும் அளவிற்கு.


நண்பர்களே இந்த பிசாசு யார் தெரியுமா ........



பூர்விகம் பின்னங்குடி

தந்தையார் பெயர் சாமிநாதன்

பெற்றோர் இட்ட பெயர் சுப்ரமணியன்

சுருக்கமாய் பிசாசு .


சென்ற வாரம் அரபு நாட்டிலிருந்து தேசம் திரும்பியிருந்த என் கல்லூரி நண்பர் பாலாஜியை சந்திக்க திருவையாறு சென்றிருந்தேன்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது அன்னை திருமதி. சிவகாம சுந்தரி அவர்கள் வழங்கிய தேன் போன்ற இனிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நானும் மகிழ்ந்தேன்.


திருவையாறு மேலமட விளாகத்தில் பி . சா .சு அவர்கள் வாழ்ந்த இல்லம்


                                  தாயாருடன் நண்பர் பாலாஜி 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மெய்வழிச்சாலை

 தொடு சிகிச்சை வகுப்பில் எங்கள் ஆசான் திரு.உமர் பாருக் அவர்கள் வாயிலாக புதுக்கோட்டை அருகே இருக்கும் மெய்வழிச்சாலை என்ற இடத்தைப் பற்றித் தெரிய வந்தது.

அவர்அவ்வூரைப்பற்றிய விஷயங்களை அடுக்கிச் சொல்லச் சொல்ல அவ்விடத்தைப் பார்த்தே தீர வேண்டுமென்று உறுதி பூண்டேன்.

வாய்ப்பு கிடைத்ததென்னவோ 3 ஆண்டுகள் கழித்துதான்.

24 அக்டோபர் 2021நானும் என் குடும்பத்தினரும் மற்றும் நண்பர் செந்தில் & அவரது மனைவி நித்யா ஆகியோர் விஜயம் செய்தோம்.

புதுக்கோட்டையை அடுத்த சித்தன்ன வாசலைத் தாண்டினால், மகிழ்வுந்து பயணத்தில் 15 நிமிடங்களில் வருகிறது அவ்வூர்.

உள்ளே நுழையும்போதே கண்ணில் படுவது, அந்த வாழ்வியலை ஏற்றுக்கொண்ட ஆண்கள் (சிறுவர் உட்பட) தலையில் சீக்கிய மக்களைப் போல் முண்டாசு கட்டிக்கொள்வதும், பெண்கள் முழுமையாக முக்காடு அணிந்து கொள்வதும்தான்.

அங்கு கடந்த 21 வருடங்களாக வசித்துவரும் சாலை பொன்.சுசீலா அவர்கள் எங்களை வரவேற்றார்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.  அரசின் கல்வித் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

அவரின் விடுதியை சென்றடைந்த நேரம் பிற்பகல் 2 மணியைத் தாண்டி இருந்ததால் அவரும் அவரது தோழியாரும் முதற்காரியமாகச் செய்தது எங்களுக்கு அமுது படைத்தது தான்.

மணி ஆயிடுச்சில்ல, பசியோடு வந்திருப்பீங்க, மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம்,” என்றார்.

என் நினைவுக்கு வந்தது என்னவோ அதிதி தேவோ பவ

ஆனால் இவரது மறுமொழி வேறு மாதிரி இருக்கிறது.

மெய்வழிச் சாலையில் உள்ள என் விடுதிக்கு வருபவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பதை என் கடமையாகக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்”.

அப்படி என்ன இருக்கிறது மெய்வழிச்சாலையில் ?

நம் அறிவுக்குத் தெரிந்தவரை இது சுற்றுலாத் தலமோ; 8-ஆம் அதிசயமோ இல்லை.

ஆயினும் இது தனித்துவமானதாகத்தான் இருக்கிறது.

நாங்கள் அனைவரும் கேள்விக் கணைகளை தொடுக்க தெளிவாக விடையளிக்கத் துவங்கினார் அவர்.

அது என்னங்க மெய்வழிச்சாலை?

மரணத்தில் இரண்டுவகை இருப்பதையும், மரணத்திற்குப் பின்னும் மனிதனுக்கு மட்டும் வாழ்வு இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டவர்களுக்கு இது ஒரு புண்ணியத் தலம்.

திருப்புத்தூரில் தொடங்கப்பெற்று, இராஜகம்பீரத்திலும் மதுரையிலும் வளர்ச்சி பெற்ற மெய்வழிச் சபை 1942-லிருந்து புதுக்கோட்டையில் இயங்குகிறது. அச்சபை அமைந்திருக்கும் ஊர் மெய்வழிச்சாலை.

இச்சபையை நிறுவிய குருநாதரை நாங்கள் மெய்வழி ஆண்டவர்கள் என்றே குறிப்பிடுவோம். அவர் இயற்பெயர் திரு.காதர் பாட்சா என்பது.

மெய்வழி ஆண்டவர்களுக்கு மெய்ஞ்ஞான குருவாக அமைந்த தனிகை மணிப்பிரான் அவர்களே வடலூர் வள்ளல்பிரானுக்கும் குருவாக இருந்தவர் என்பது இவர் அளித்த சிறப்புத் தகவல்.

ஊருக்கு நடுவே அமைந்துள்ள பொன்னரங்க தேவாலயத்தைச் சுற்றி அமைக்கப்பெற்று, வேலியிடப்பெற்ற எல்லைக்குள் அமைந்திருக்கும் எளிமையான கூரைவேய்ந்த விடுதிகளில் இப்போதும் கழிப்பறை இல்லை; (1942-ல் ஆரம்பகாலத்தில் கட்டப்பெற்ற விடுதிகளுக்கு கதவும் இல்லை. தரைகூட சிமெண்ட் பூச்சு இல்லாதிருந்துள்ளது.



இவையெல்லாம் இயல்பான, எளிமையான வாழ்வு கருதி மெய்வழி ஆண்டவர்களால் வகுக்கப்பெற்ற வாழ்வியல் சட்டங்கள்.

துறவறம் பூண்டோ காட்டில் கடுமையான தவம் செய்தோ நாம் முக்தி அடைய வேண்டியதில்லை. மரணத்திலிருந்து நம்மை மீட்கும் செயலுடைய ஒரு மெய்யான குருபிரானின் (அவரே மெய்வழி ஆண்டவர்கள்!) பெருந்தயவினால் மட்டுமே மரணமிலாப் பெருவாழ்வு இங்கு கிடைக்கிறது. இதைத்தான் அருட்பெருஞ் சோதியின் தனிப்பெருங் கருணை என்கிறார் வள்ளலார்.

சர்வ சன்னதங்களையும் தங்கள் திருக்கரங்களில் (உள்ளங்கைகளில்) தரித்தவராய், ஊண் உறக்கமற்றவராய், மூக்குக்கு வெளியே மூச்சோடா தவம் உடையவராய்த் திருமேனியுடன் வாழ்ந்து, இன்று வான்கன்னிவிராட் தவத்திற்கு ஏகியிருக்கும் மெய்வழி ஆண்டவர்களைத் தெய்வமென ஏற்றுக்கொண்டு - அவர்கள் மட்டுமே தெய்வம் என நம்பி வழிபடுவோருக்கு இன்றும் மரணமிலாப் பெருவாழ்வு, நாம் நம்முடைய ஊனக்கண்களால் காணக்கூடிய அளவிற்கு சாகாக்கலை அடையாளங்களுடன் கிடைக்கிறது.



இச்செய்திகளை இவ்வளவு உறுதியாக உங்களால் எப்படிக் கூற முடிகிறது?

மரணமிலாப் பெருவாழ்வு எங்கே, எப்படிக் கிடைக்கும் என்று ஆய்ந்தலைந்த எனக்கு, என் ஆராய்ச்சியின் முடிவாகக் கிடைத்தவைகளைத்தான் நான் அறிந்து கொண்டவைகளைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

மெய்வழி ஆண்டவர்களை வழிபட்டு அடக்கமானவர்களைக் காணும் வாய்ப்பிருந்தால் நீங்களும் இவற்றை இன்றும் காணலாம்.

சாலையைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

நான் தான், எனக்கு மரணமிலாப் பெருவாழ்வு வேண்டும் என்று ஆய்ந்தேன் அதற்காக அலைந்தேன் என்று சொன்னேனே! காலங்காலமாக இருந்துவரும் இச்செயல், நான் பிறவி எடுத்திருக்கும் இந்தக் காலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் மெய்வழியில் எளிமையாகவும், நிச்சயமாகவும் கிடைக்கிறது என்பதை என் முனைவர் பட்டப் படிப்பின் வழிகாட்டியாக அமைந்த டாக்டர்.அரங்க.ராமலிங்கம் அவர்கள் கூறக்கேட்டு நான் மெய்வழியில் நுழைந்தேன் மெய்வழிச்சாலைக்கு வந்தேன். உண்மைகளை அறிந்தேன்.

தற்போது மெய்வழியில் சேர மக்களுக்குத் தகுதித் தேர்வு ஏதேனும் உண்டா?

மெய்வழி ஆண்டவர்கள் தூலத் திருமேனியுடன் விளங்கியபோது, (அரசாங்கத்தில் முறையாகப் பதிவு செய்யப்பெற்ற) இச்சபையில் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தளித்து, சத்தியபிராமாணம் செய்து 5049-பேர்கள் அங்கமாகிக் கொண்டார்கள்.

ஆனால், இன்றோ அதுபோன்ற சம்பிரதாயங்கள் இல்லை. சுய விருப்பத்தின்பேரில் எவர் வேண்டுமானாலும் மெய்வழி ஆண்டவர்களை நம்பி தெய்வம் என ஏற்று, வழிபட்டு, மரணமிலாப் பெருவாழ்வடையலாம். எங்களுக்கென்று ஒரு சில வாழ்வியல் முறைகள் உண்டு அவற்றைக் கடைபிடிக்க வேண்டுமென்பது நியதி.

மெய்வழிச்சாலையின் வாழ்வியல் முறைகள் என்பது என்ன?

பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சி நடத்தல், அசைவ உணவு உண்ணாதிருத்தல் புகைபிடிக்காதிருத்தல், திரைப்படம் காணாதிருத்தல், அரசியலில் ஈடுபடாதிருத்தல், ஆகியன இகவாழ்வு தொடர்பான பத்தியங்கள்.

ஆலய வணக்க/வழிபாடுகளில் கலந்து கொள்ளுதல், மூலமந்திரம் கூறுதல், தெய்வ நூல்களை ஓதுதல் போன்ற ஒருசில நியதிகள் பரவாழ்வு பற்றியவை. எமன் கைவசப்பட்டு நாறிச்சாகும் சாவிற்குப் போகக் கூடாதென்பது மிக முக்கிய விதி. ஆனால் மெய்வழி ஆண்டவர்களின் பெருந்தயவால் மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர்களின் அடக்கத்தில் கட்டாயம் கலந்து கொள்வோம்.

இறந்வர் யார்? மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர் யார்? என்பதைச் சற்று விளக்குங்களேன்.

சுருக்கமாகச் சொன்னால் மறுபிறப்பைத் தவிர்க்க இறைவனோடு ஐக்கியமாதல் என்ற ஒரு செயல் இருக்கிறது. இதை அடைதலே மரணமிலாப் பெருவாழ்வடைதல். பிறப்பு நம் விருப்பத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இறப்பும் அதைத் தவிர்ப்பதும் நம் கைகளில் இருக்கிறது. பிறந்தால் இறக்க வேண்டும்; இறக்காதிருந்தால் மீண்டும் பிறக்காதிருக்கலாம். இறவா நிலை அடைந்தவர்களின் உடல் துர்நாற்றம் வீசாது , நலம்குலையாது, விறைக்காது, (குளிர்சாதனப் பெட்டியில் இவர்களை வைக்கவே கூடாது) மாறாக முகத்தில் மஞ்சள் நிற அழகு பூக்கும், உடலில் இதமான சூடு இருக்கும், வியர்க்கும். ஆலயத்திலிருந்து கொண்டுவந்து வழங்கப்பெற்ற புனித தீர்த்தம் அவர்கள் வாயின் மூலம் உள்ளே இறங்கும். எல்லாவற்றிற்கும் முதலாக அவர்களின் உயிர் உடலைவிட்டு வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கும்.

இப்படி அடங்குவதைத்தான் திருவள்ளுவர்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்  - என்கிறார்.

இப்படி அடக்கமானவர்களைத் தீயிட்டு எரிக்கக்கூடாது என்பது எங்கள் தெய்வ சட்டம்.

அப்படியா?

பரனளிக்கும் தேகமிது சுடுவது அபராதம்என இவர்களுக்காகத்தான் வள்ளலார்கூட பாடிஇருக்கிறாரே.

இறுதியாகத் தாங்கள் கூறவிரும்புவது?

இந்த மெய்வழிச்சாலை உங்கள் கண்களில் எளிமையான ஊராகத் தோற்றம் அளிக்கலாம். ஆனால், இது “wonder land“ என்பது மெய்வழியைப் புரிந்து கொண்டவர்களுக்கு விளங்கும்.

இங்கு சாதி, மத பேதம் இல்லை.

மொழி, இனம், கலாச்சாரம், பாகுபாடு இல்லை..

பணம், படிப்பு, பதவி இவற்றால் ஏற்றத்தாழ்வில்லை

ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்ற திருமூலரின் திருவாக்கைச் செயலில் கொண்டிருக்கும் ஊர் இவ்வூர்.

மெய்வழி மக்களுக்கெனத் திருவிழாக்கள் உண்டு. கொடியேற்றும் நிகழ்வுண்டு. அலாதியான சடங்குகளுடன்கூடிய திருமண வைபவம் உண்டு.

இது தனி மனித ஒழுக்கத்தைக் கற்பிக்கும் இடம்.

சத்தியமான செயலுடைய இறைநெறியில் மனிதன் வாழ்ந்தானா இல்லையா என்பதை அவனது மரணத்தைக் கொண்டு நிரூபிக்கும் ஊர் இவ்வூர்.

ஆச்சரியமாக உள்ளது, அல்லவா?

இந்தக் கலியுகத்தில் ஜாதி, மத பேதமின்றி மனித நேயம் போற்றும் ஆன்மீகத் தலத்திற்கு உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து வாருங்களேன். நிச்சயமான ஆன்மீகப் பலனை அவர்களும் அடையட்டுமே என்று அழைப்பு விடுக்கிறார் அவர்.



அவரது அழைப்பை ஏற்று ஆன்மீகத்தில் விருப்பம்/நாட்டம் உள்ளவர்கள் ஒருமுறை மெய்வழிச்சாலைக்குச் சென்று பாருங்களேன்.

அந்த ஊர் நிச்சயம் உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.




மெய்வழிச் சாலையின் வாழ்வியலை ஏற்றக் கொண்டு அம்முறைப் படி திருமணம் செய்து கொண்ட எனது நண்பர் மணிவண்ணனும் அவரது துணைவியாரும்