ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஐயர்’ஸ் கிச்சன்

ஆண்டு 2010. தேதி ஜனவரி 17. MGR-ன் பிறந்த நாள்.
இடம்  பெங்களூர்.
அன்று தான் நானும் எனது இனிய நண்பர் ஸ்ரீராம் என்கிற சுந்தரமும் இணைந்து தொழில் தொடங்கினோம். தொழில் ஒரு உணவு விடுதி.
பெயர் ஐயர்’ஸ் கிச்சன்.

சரி நண்பர்களே. புள்ளி விவரமாய் பேசுவதை விட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

எனது குடும்பமும் நண்பர் ஸ்ரீராம் குடும்பமும் ஒன்றாய் 2009 அக்டோபர் மாதம் திருப்பதி சென்று வந்தோம்.  பொதுவாகவே திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேரும் என்பார்கள். ஒத்த நிகழ்வென்றே நான் கருத வியாபாராம் செய்ய ஆயத்தமானோம். இரண்டு மாதம் இடம் தேடி ஸ்ரீராம் வீட்டிற்கு அடுத்த அடுமனை காலி செய்யப் பட நாங்கள் உரிமையாளரிடம் ஒரு வருட ஒப்பந்தம் செய்தோம். சுற்றுவட்டாரத்தில் வட மாநில மக்கள் அதிகம் இருப்பதை கண்டு (அவர்களுக்கு இட்லி/தோசை மற்றும் சாம்பார் என்றால் மிகவும் விருப்பம்) ஐயர்’ஸ் கிட்சன் என்று பெயரிட்டோம்.

நண்பர் ஸ்ரீராம் தனது துணைவியாருடன் :


எங்கள் யாருக்கும் முன் அனுபவம் இல்லை என்றாலும் திட்டமிட்டு பணிகளை செய்தோம்.  சமையல் பாத்திரங்கள் , மேசைகள் முதலானவைகளை புதிதாய் வாங்காமல் ஏற்கனவே பயன் படுத்தபட்டிருந்த பொருட்களை வாங்கினோம்.

எனது மனைவி திருமதி. கவிதா எப்போதும் ஒரு துடிப்போடு இருப்பவர். குறிப்பாக உணவு விடுதி என்றதும் மிகுந்த ஆர்வத்துடன் இறங்கினார். தலைமை சமையல்காராக நடிகர் ஜெயராமின் சித்தப்பா (பெயர் ஞாபகம் இல்லை) அமைந்தார். தோசை சுட ஒரு நபர் பரிமாறுபவர் என 2 – 3 ஆட்களை வேலைக்கு வைத்துக்கொண்டோம்.

தலைமை சமையல்காரர் மிக அருமையாக சமையல் செய்வார். அவர் போடும் குழம்பிக்கவே (Coffee) ஒரு கூட்டம் வரும் தினமும். ஆரம்பித்த முதல் நாளே அதிக கூட்டம் வந்தது. அதுவோ நாள் ஆக ஆக அதிகரித்தது, நாங்கள் மேலும் ஒரு நபரை பணியமர்த்தும் அளவிற்கு.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். 1. அருகினில் வேறு தமிழ் நாட்டு உணவு விடுதிகள் இல்லை. 2. உணவின் சுவை.
நாங்கள் பிரதி மாதம் சுமார் 15000 மேல் லாபம் பார்க்க துவங்கினோம். காலையில் ஸ்ரீராமும் மாலையில் நான்/எனது மனைவியும் வார நாட்களில் பார்த்துக்கொள்வது. வார இறுதிகளில் அனைவரும் காலை முதல் இரவு வரை இருப்பது என எழுதாத புரிந்துணர்வு ஒப்பந்தம்.
ஜனவரி தொடங்கி சுமார் 5 – 6 மாத காலம் சென்று லாபம் வர துவங்கிய நேரம் அது. ஒரு நாள் இரவினில் நண்பர் ஸ்ரீராமும் அவரது துணைவியார் திருமதி. இந்துமதியும் கடையை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

இரவு சுமார் 9.15. கூட்டம் குறைந்த நேரம். மோட்டார் பைக்கில் வந்த இருவரில் ஒருவன் மட்டும் இறங்கி கடையின் முகப்பில் நின்று கொண்டான். பைக் ஒட்டி வந்தவன்  ஊர்தியை அணைக்கவில்லை. அது சீறிக்கொண்டே இருந்தது.  சற்றே ஐயமுற்ற  இந்துமதி ஸ்ரீராமிடம் எச்சரிக்கை தர அவர் கடையை மூட ஆயத்தமானார். அடுப்பு / மின் விளக்குகள் அணைக்கப்படுகையில் கடை வாசலில் நின்றிருதவன் சடாரென உள்ளே பாய்ந்து ஸ்ரீராம் கையில் இருந்த பணத்தை பிடுங்கி கொண்டு தாவினான் நண்பனின் வாகனத்தில்.

பின்னாலே துரத்திய எனது நண்பரை எச்சரித்து தனது கத்தியால் என நண்பரின் கழுத்தில் “X” , “Y” “Z” என்றெல்லாம் ஆங்கில எழுத்துக்களை கற்றுக்கொண்டும் மற்றும் எச்சரித்தும் அந்த திருடர்கள் இருவரும் பறந்துவிட்டனர். அப்போது போனது சுமார் ரூபாய் 10000 மட்டுமல்ல ஸ்ரீராமின் கை பேசியும் தான்.

நண்பர் ஸ்ரீராம் சற்று புத்தி கூர்மை உள்ளவர். கை பேசி திருட்டு போனால் அதன் வழி தடத்தை பின் பற்றி கண்டு பிடிப்பதற்கான வழி முறைகளை செய்து வைத்திருந்தார். எனவே திருடன் புதிய SIM CARDஐ மாற்றிய பொது எங்களால் கண்டு பிடிக்க முடிந்தது காவல் துறையின் உதவியுடன். உள்ளூர் திருடர்கள் என்பதால் நாங்கள் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டோம், அச்சத்தின் பேரில்.
எங்கள் பணமும் நண்பரின் கை பேசியும் மீண்டும் கிடைத்தன அவர்களுடன் சமரசம் பேசிய பிறகு. பொருட்கள் திரும்ப கிடைத்த மகிழ்ச்சி எங்களுக்கு, புகார் திரும்ப பெற பட்ட மகிழ்ச்சி அந்த திருடர்களுக்கு.


அன்று நிறுத்திய வியாபார முயற்சி அதன் பிறகு நாங்கள் முயற்சிக்கவே இல்லை.