ஞாயிறு, 12 மார்ச், 2023

கால இயந்திரம்

என்றும் புன்னகையே பிறருக்கு பரிசாய் அளித்து வந்து , சமீபத்தில் இயற்கை எய்திய கல்லுரி நண்பன் வெங்கடேஷ்க்கு கண்ணீர் அஞ்சலி.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்ற வாலியின் பாடலை ,

பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே எனும் கண்ணதாசனின் வரிகளை .........

கேட்கும் போதெல்லாம் பள்ளி / கல்லுரி கால நினைவுகளில் மூழ்கி மீண்டு வரும் போது விழியோரத்தில் நீர்த்துளி எட்டிப் பார்ப்பதை பலர் தவிர்த்திருக்க இயலாது.

அப்படிப் பட்டவர்களில் நானும் ஒருவன் தான்.

கால இயந்திரம் ஒன்றை வடிவமைத்து அந்த ஏக்கத்தை தணித்தார்கள் நண்பர்கள் ஆம்ஸ்ட்ராங்கும் ,ஸ்ரீனிவாசனும்.

 

நம்ப முடியவில்லையா என்ன , அது நிஜம் தாங்க.

கல்லுரி நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கல்லூரிக்கு விஜயம் செய்ய வேண்டும்,

ஒரு சில மணி நேரங்களாவது மாணவப் பருவத்தை மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆவலை நிறைவேற்ற இருவரும் உறுதி பூண்டார்கள்.

நண்பர்களை ஒன்று சேர்க்கும் பணியில் ஸ்ரீனிவாசன் ஈடுபட,

ஆம்ஸ்ட்ராங் நண்பர்களை மட்டுமல்லாது, பேராசிரியர்கள் பற்றிய தகவல்களையும் திரட்டத் துவங்கினார்.

வேலைப்பளு இருந்த போதிலும், மற்ற நண்பர்கள் ராமாயண அணிலாய் தம்மாலான பணிகளை மேற்கொண்டனர்.

நீண்ட நாட்களாக மனதில் இருந்த எண்ணத்தை செயல்படுத்த அலைபேசியின் குழு அழைப்பில் பலமுறை பேசி திட்டமிட்டோம்.

டிசம்பர் 29 2022 கல்லூரியில் சந்திப்பதாக முடிவானது.

பூண்டி புஷ்பம் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவர் திரு.ரவிச்சந்திரன் அவர்களை தொடர்புகொண்டு எங்கள் வருகைப்பற்றி தெரிவித்தோம்.

மனமகிழ்வுடன் எங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்வதாக சொன்னார்.

மன்னை நகரை பூர்வீகமாக கொண்ட முருகானந்தம்,  வருவதாக வாக்களித்தார்.

மண்ணைக் கவ்வாமல், இந்த சந்திப்பிற்காகவே அவர்  அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தது பேரானந்தம்.

தங்கள் வருகை ஐயமே என்று சொன்ன ராஜா முஹம்மது, ரங்கராஜன் , விவேக் மற்றும் பழனி ஆகியோர் சென்னையிலிருந்து இந்நிகழ்ச்சிக்காகவே பயணித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

நண்பர்கள் பலர் வந்து சிறப்பித்த போதிலும் தாணு மற்றும் பாலாஜி ஆகியோர் வர இயலவில்லை என்ற ஏக்கம் எழாமல் இல்லை.

காலை சுமார் 10 மணி அளவில் ,

எங்கள் AVVM பூண்டி புஷ்பம் கல்லுரிக்கு வரத் துவங்கினோம்.

நுழைவாயில் அருகில் செல்லச் செல்ல ,

கால இயந்திரம் பின்னோக்கி சுழல தொடங்கியது.

71 என்ற எண் கொண்ட பேருந்து மட்டுமே கல்லுரி வாசல் வரை வரும்.

அப்பேருந்தில் இடம் கிடைக்காத மாணவர்கள், வயல்களிடையே அமைந்திருக்கும் கல்லுரியை அடைய பேருந்து நிறுத்ததிலிருந்து சுமார் 1 KM நடக்க வேண்டும்.

நாங்கள் இளங்கலை படித்த 1988-1991 காலங்களில் ,

கல்லுரி உணவகத்தில் சுண்டல் எங்களிடையே பிரபலம்.

இதனை சுவைத்த பின்பு வகுப்பிற்கு தாமதமாய் சென்று, ஆசிரியரிடம்

வசை பெற்றோர் பலர் உண்டு.

ஒவ்வொரு முறையும் பருவத்தேர்வு முடிவுகளின் மதிப்பெண்களை கண்டு,

கணித விரிவுரையாளர் அச்சில் ஏற்றதக் கூடாத சொற்களை பயன்படுத்தி மிகவும் இயல்பாக திட்டி வருவதை,

இன்றும் நாங்கள் நகைச்சுவையாய் நினைவு கூர்ந்து வருவது ஒன்றென்றால் ,

இரண்டாவது, மேல்அங்கி அணிந்தபடி மேசையை ஒட்டி நின்று வருகைப் பதிவு எடுக்கும் ஆசிரியரின் சட்டைப் பையில் பேருந்து சீட்டுகளையும் ,மாத்திரை உறைகளையும் (வே)வாடிக்கையாக போட்டு விடுவது.

தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட ஆசிரியர், வடமொழி சொல்லான சாமிநாதன் என்ற தமது பெயரை “இறையரசன் என மாற்றிக் கொண்டவர்.

Chock piece என்பதற்கு தமிழில் சுண்ணம் என்று இவரிடம் தான் கற்றோம்.

மேலும், வானொலியில் “மாநில செய்திகள் வாசிப்பது என்று தொடங்குவதை எதிர்த்து வானொலி நிலையத்திற்கு கடிதம் எழுதியதாக அவர் சொல்வார்.

வாசிப்பது என்பது அஹ்ரினை வாசிப்பவர் என்பதே சரியாய் சொல் என்பது இவரது வாதம்.

விரிவுரையாளர்கள் எங்களை வரவேற்க வந்தமையால் காலச்சக்கரத்திலிருந்து கீழே இறங்கினோம்.

31 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்க்கிறேன்.

முதல்வர் அறை இடம் மாறி இருந்தது,

இயற்பியல் ஆய்வுக் கூடங்களில் ஒரு சில மாற்றங்கள்.

மற்றபடி பெரிதும் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை.

திரு.ரவிச்சந்திரன் தாம் சொன்ன படி,

இன்றைய மாணவர்களுடன் உரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.

நண்பர் ஸ்ரீனிவாசன் தொழிலில் தாம் பட்ட சிரமங்களையும் , தொழில் முன்னேன்றகளுக்கான வழி முறைகளையும் பற்றி எடுத்துரைத்தார்.

நண்பர் பழனிவேல் வங்கித் துறைகளில் உள்ள வாய்ப்புகளை பற்றி விளக்க ,ராஜா முஹம்மது கணிபொறித்துறை பற்றி பேசினார்.



பின்னர் நாங்கள் பாடம் பயின்ற ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று அக்கால நினைவுகளில் மூழ்கினோம்.

மாணக்களாக மாறி, இருக்கைகளில் அமர்ந்து அரட்டை அடித்ததை, இளமைக் கால சாகசத்தை எங்கள் எள்ளுப் பேரன்களுக்கும் சொல்லி மகிழவும் தயாரானோம்.

ஆசிரியர்களை உணவு நேரத்தில் தஞ்சை லக்ஷ்மி என்ற உணவு விடுதியில் சந்திப்பதாக ஏற்பாடு.

எனவே கல்லூரியிலிருந்து கனத்த மனதுடன் கிளம்பினோம்.

முன்னாள் முதல்வர் திரு. கிருஷ்ணமுர்த்தி அவர்கள் எங்களை சந்திப்பதற்கு காட்டிய ஆர்வம் சொல்லில் அடங்காது.

அவரே சக பேராசிரியர்களிடம் பேசி அழைத்தது வந்தது இன்ப அதிர்ச்சி.

நீண்ட இடைவெளி என்பதால் பேராசிரியர்களிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம்.

இன்று ஒரு சில பேராசிரியர்கள் உலகில் இல்லை எனினும்,

80 அகவையை தாண்டிய திரு.ரங்கமணி அவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டது ஆசிரியரின் அன்பைக் காட்டியது.

மதிய உணவே எங்களுக்கு சுமார் 3 மணிக்கு மேல் தான் தொடங்கியது, காரணம் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தமையால்.

செவிக்கு உணவு இல்லாத போழ்து என்ற குறளுக்கு உண்மையான பொருளை அன்று தான் நாங்கள் பலர் கண்டோம்.

ஒரு வேறுபாடு - வள்ளுவர் சொன்னது கல்வி ஞானத்தைப் பற்றியது.

ஆனால் அது எங்களுக்கோ பழைய நினைவுகள் என்று ஆகிப் போனது.

காலன் எங்களை இனி நிரந்தரமாக பிரிக்கும் வரை ,ஒவ்வொரு டிசம்பரிலும் கால இயந்திரம் எங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.

உரையாடலுக்கு பின்பு

நுழைவாயில் அருகே

முதலாம் ஆண்டு வகுப்பறை

கல்லூரியை சுற்றி வந்த போது

உணவருந்தும் நேரம்

பேராசிரியர்களின் வருகை

பேராசிரியர்களுடன் நாங்கள்

ஆசான்களுக்கு எங்கள் அன்பு பரிசு

இந்நாள் மாணவர்கள்

விரிவுரையாளர் திரு.செந்திலுடன்

முதல்வருக்கு எங்களின் அன்பு பரிசு

16 கருத்துகள்:

  1. மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே. மறக்க முடியாதவை. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. நண்பன் குமாருக்கு எப்பொழுதும் தன்னடக்கம் அதிகம் என்பதை அவருடன் படித்த நாங்களறிவோம்!!!!
    இச்சந்திப்பினை முன்னெடுத்ததே இவன்தான் ..... அதனை அடியொற்றி தான் மற்ற நண்பர்கள் அனைவரும் முயன்றனர்....
    இக்கட்டுரையின் கடைசி பகுதியை நிறைவேற்ற நண்பர்கள் முயற்சி செய்யவும்.....
    நீங்கா நினைவுகளுடன் ..
    விவேக் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை விவேக். மூல காரணம் ஸ்ரீனியும் ஆம்ஸ்ட்ராங்கும் தான்.

      நீக்கு
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. ஆஹா...... காலம் கடந்து விட்டாலும் தொடரும் நட்பு. இது போன்ற சந்திப்புகள் அவசியமானதும் கூட. நீங்கள் படித்த அதே வருடங்களில் நான் நெய்வேலி கல்லூரியில்....... நான்கு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு சந்திப்பு - மாணவர்கள் மட்டும் நடத்தினோம். மகிழ்சியான தருணங்கள் அவை.

    பதிலளிநீக்கு
  5. நிச்சயம் சந்திப்புகள் அவசியம் நண்பரே. நீங்களும் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வெங்கடேஷின் மரணம் மிகவும் வலிக்கின்றது, மிகவும் அவசரமாக எல்லோரையும் விட்டு சென்று விட்டான்.

    கல்லூரி நாட்கள் மிகவும் இனிமையானவை. அதை 30 வருடங்கள் கழித்து மீண்டும் நம் ஆசான்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து நினைவு கூர்வதென்பது மிகச்சிறப்பான ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. நானும் இருந்திருக்கலாம் எனும் ஏக்கம் வருகிறது. அருமையான முயற்சி குமார்.

    -ப்ரகாஷ்

    பதிலளிநீக்கு
  7. உண்மை தான் SGP. வெங்கடேஷின் மரணம் வலிக்கத் தான் செய்கிறது. அடுத்து முறை நீ இந்தியா வரும்போது நமது சந்திப்பை திட்டமிடலாம்.

    பதிலளிநீக்கு
  8. Very happy to see the reunion . great narration as always.. excellent write up kumar\

    பதிலளிநீக்கு
  9. சிறப்பு. இது உங்களின் '91 நினைவலைகள். எல்லோரும் பலவிதமான உணர்ச்சிகளிப்பில் இருந்திருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நிகழ்வை கொண்டாடி விட்டோம் என்பது உண்மை தான் ராஜேஷ்.

      நீக்கு
  10. அந்த நாள் ஞாபகம் வந்ததோ நண்பர்களே ...அன்றைய நாட்கள் என்றுமே அழியாத கோலங்களாய் நம் நினைவில் நிலைத்து நிற்கும்.. புகைப்படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  11. என்றும் நினைவில் நிற்கும் நாட்கள் அவை. ஐயா அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு