வியாழன், 13 அக்டோபர், 2022

திரைநாயகர்களும் தரை நாயகர்களும்

நட்சத்திர விடுதியின் அறையில் அமர்ந்தபடி இயக்குனர் கதை சொல்ல துவங்குகிறார்.

இரு கரங்களையும் “ப வடிவில் பாரதிராஜா போல் வைத்து இல்லாத ஒளிப்பட கருவியை இயக்கி, கதை சொல்கிறார் தயாரிப்பாளருக்கு.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரியும் திரு.வைத்தியநாதனுக்கு ஆண் மகவு பிறக்கிறது.

பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீனிவாசன் என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

பள்ளி படிப்பை முடித்து பொறியாளர் கனவை எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவனுக்கு கிடைத்த மதிப்பெண் 85% மேல்.

நுழைவு தேர்வில் நன்கு தேறியும் கூட,

இட ஒதுக்கீட்டின் காரணமாக தாம் விரும்பிய பொறியியல் படிப்பு முதல் நிலை கல்லூரிகளில் இடம் கிடைக்காது என்ற செய்தி பேரிடியாய் தலையில் இறங்குகிறது.

இரண்டாம் நிலையில் உள்ள கல்லூரிகளில் கிடைத்தும் ,

பொருளாதார சூழ்நிலை காரணமாக இளங்கலை படிப்பை தேர்ந்தெடுக்க நேர்கிறது.

81 விழுக்காடுகளுக்கும் மேல் பெற்று, வகுப்பில் முதல் மாணவன் என்ற பெருமையுடன் கல்லூரி படிப்பை முடிக்கிறான்.

வேலையில்லா திண்டாட்டம் என்ற சிக்கலுக்கு நமது கதாநாயகனும் விலக்கல்ல.

தன் முயற்சியில் சற்றும் தளராத அம்புலிமாமாவின் விக்கிரமன் போல் விடா முயற்சியானது ,

சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை கிடைக்கச் செய்கிறது.

மிக குறைந்த ஊதியத்தின் காரணமாக நம் நாயகன் சில நாட்கள் பேருந்தை பயன்படுத்தாமல் ,

நடராஜனையே நம்பி அலுவலகம் செல்வதுண்டு.

இவனது இந்த நிலை கண்டு மனமிரங்கும் இந்த நிறுவனத்தின் மேலாளர்கள் இருவர்,

கணிப்பொறியில் இவன் மேலும் தொழில் நுட்பங்களை கற்க பொருளாதார உதவி செய்கிறார்கள்.

நாயகன் வாழ்நாள் முழுதும் செய்நன்றியை மறவாமல் நினைவில் வைத்திருக்கிறான்.

காலச் சக்கரம் மெல்ல உருண்டோடுகிறது.

பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் , முதுநிலை மேலாளர் , பின் இயக்குனர் போன்ற பதவிகளை வகிக்கிறான் நாயகன்.

மிதி வண்டி மிதித்தும் , தொடர் வண்டியில் தொற்றிக் கொண்டும் சென்றவனை இப்போது மகிழ்வுந்து மகிழ்விக்கிறது.

தஞ்சையின் ஏதோ ஒரு சந்தின் மூலையில் ஒண்டுக் குடித்தனம் செய்தவன்

இன்று உலக வரைபடத்தில் மூலைகளில் இருக்கும் தேசங்களுக்கெல்லாம் பறக்கிறான்.


அறிமுக நாயகன் - ஸ்ரீனிவாசன்

பிரம்மச்சாரியாய் இளங்கலை பட்டம் பயின்றவனுக்கு காலப் போக்கில் கணவன் என்ற பட்டமும் பின்னர் தந்தை என்று பட்டங்களும் கிட்டுகின்றன.

கடும் முயற்சியின் பலனாய் இரு முதுகலைகள், ஒரு முனைவர் என பட்டங்களின் பட்டியல் நீளுகிறது 40 வயதிற்கு பிறகும்.


அமைச்சரின் கையால் முனைவர் பட்டம்

நிற்க – இப்படி நாயகன் வளர்ந்து வருகையில் கதையில் திருப்பம் வேண்டுமல்லவா.

தந்தை வைத்தியநாதன் தலையில் பலத்த அடிபட்டு நினைவிழக்கிறார்.

தாயார் திருமதி. ஜெயலக்ஷ்மி கூடவே இருந்து கணவரை, குழந்தை போல் கவனித்துக் கொள்கிறார்.

அடுத்து உணர்ச்சிப் பிழம்பான காட்சி (அதாங்க sentiment) .

ஒரு நாள் தாயார் பூஜை அறையில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை சொல்லியபடி முழங்தாளிட்டு கடவுளை வணங்குகிறார்.

வணங்கியவர் இறைவன் தாள் பற்றியபடியே அவனடி  சேர்கிறார் பூஜை அறையிலேயே.

தாயார் மரணம் என்ற துக்கத்தில் நாயகன்.......

இதை பற்றி எதுவும் தெரியாத நிலையிலோ தந்தை.........

இதற்கிடையே தாம் நீண்ட நாட்களாக பணிபுரிந்த நிறுவனம் ,  அயல் நாட்டிற்கு கட்டாய பணி மாற்றம் செய்கிறது.

நினைவு தவறிய தந்தையை, நித்தம் தவறாமல் நினைவில் நிறுத்தியிருக்கும் நாயகன்

தந்தையே முக்கியம் என்று வேறு நிறுவனத்தில் வேலை கிடைக்காமலே இப்பணியை துறக்கிறான்.

நீண்ட நாட்களாக அப்படியே இருக்கும் தந்தை , தம் துணைவியார் மறைவை பற்றி ஏதும் அறியாமலே இயற்கை எய்துகிறார்.

தந்தையின் மறைவு அளித்த சோகத்தை விட, அவர் தம் மனைவியின் மரணம் பற்றி ஏதும் அறியாமலே உயிர் நீத்த நிகழ்வு,

நாயகனை மீளாத் துயரில் ஆழ்த்துகிறது.

பீனிக்ஸ் பறவையாய் மீண்டு(ம்) எழுந்த ஸ்ரீனிவாசன் இன்று “Tigma Technologies என்ற பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.


தலைமை செயல் அதிகாரியாக வெளிவந்த அறிவிப்பு

இந்த ஆண்டின் முதல் 10 நம்பிக்கை அளிக்கும் வியாபார நுண்ணறிவு (Business Intelligence) சேவை நிறுவனங்களில் ஒன்றாக டிக்மா நிறுவனத்தை , சிலிக்கான் இந்தியா என்ற சஞ்சிகை தேர்ந்தெடுப்பதற்கு மூல காரணமாகிறான். 


சிலிக்கான் இந்தியா நிறுவனத்திற்கு ஸ்ரீனிவாசன் அளித்த பேட்டி

என்ன சார் இப்படி கதையை முடிக்கலாமா என்று தயாரிப்பாளரை வினவுகிறார் இயக்குனர்.

திரையில் தோன்றும் நாயகரை போற்ற தெரிந்த பலருக்கு , தரையில் நம் கண் முன்னே தெரியும் ஸ்ரீனியை போன்ற பல நிஜ நாயகர்களை தெரிய வாய்ப்பில்லை.

செலவை பத்தி கவலை படாம இந்த கதையே படமா எடுங்க என்ற படி கிளம்பினார் தயாரிப்பாளர்.

14 கருத்துகள்:

  1. திரை நாயகர்களைவிட, தரை நாயகர்கள் எல்லா வகையிலும் உயர்ந்தவர்களே... காரணம் உண்மையான, நியாயமான ஊதியத்தில் உயர்ந்தவர்கள்.

    தங்களது நண்பர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு எமது வாழத்துகளும்கூடி...

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் நண்பரே. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. வலை சித்தரின் ஊக்கம் நிறைந்த கருத்திற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  4. மனத்திடம் மிக்க சாதனையாளர்

    பதிலளிநீக்கு
  5. திரைப்படம் பார்த்த திருப்தி சார்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி குமார் ராஜசேகர் , எங்கள் பள்ளி நண்பனின் முழு பக்கத்தை அளித்தமை குறித்து மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. என் நீண்ட கால நண்பன் ஸ்ரீனிவாசனை பற்றி எழுதியதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

      நீக்கு