ஞாயிறு, 23 ஜனவரி, 2022

சிலம்பாட்டம்

சிலம்பத்தை விட ஒல்லியான உடல் வாகு.

எடுத்து சுழற்றினால் சிலம்பம் போலவே இவரை எளிதாக சுழற்றி விடலாம் என்றே தோன்றுகிறது.

"வாங்க" என்று புன்னகைத்த படி என்னை சற்று காத்திருக்க சொன்னார்.

மார்கழியின் தொடக்கத்தில் ஒரு நாள் அதிகாலை எங்கள் பள்ளி விளையாட்டுத் திடலை சுற்றி  வந்து கொண்டிருந்த போது,

சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டத்தை கண்டேன்.


அவர்களிடம் பயிற்சியை தொடருமாறு சொல்லி விட்டு என்னிடம்  உரையாடலை தொடங்கினார்.

ஆசான் பெயர் யோவான்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ராமலிங்கம் எனும் காவல் ஆய்வாளரிடம் இக்கலையை கற்றுத் தேர்ந்திருக்கிறார் இவர்.

தேசிய / மாநில அளவிலும் பெற்ற பரிசுகள் போதாதென்று ,

பிரான்ஸ் நாட்டில் நடந்த சிலம்ப போட்டியில் பங்கேற்று நமக்கு பெருமை சேர்த்தவர்.

சிலம்பம் என்பது கம்பு மட்டுமே தொடர்புடைய

தற்காப்புக் கலை என்று தவறாக நினைத்திருந்த எனக்கு,

இவரது பதில் ஆச்சரியத்தை தந்தது.

முதல்ல நாங்கள் கராத்தே / குங்குபூ  மாதிரி கையால பாதுகாத்துக்கற வழியை சொல்லி தருவோம் .

அதுக்கு அப்புறம் தான் சிலம்பம் பழக ஆரம்பிக்கணும்.

சிலம்பம் எதனால் செய்யப் படுகிறது

பச்சையா மரத்திலிருந்து வெட்டி எடுத்த உடனே நாம விளையாட முடியாது.

குச்சியை உறுதி படுத்துற வழி முறைகள் கொஞ்சம் இருக்கு.

அதன் படி நாங்க செஞ்சு உறுதியான்னு சரி பாத்து

அப்புறம் தான் விளையாடுவோம்.

ஆரம்பத்துல மூங்கில் மாதிரி மரத்துல செஞ்சாங்க.,

கல் மூங்கில் மரத்துல  சிலம்பு செஞ்சா ரொம்ப உறுதியா இருக்கும்,

நிறைய நாள் விளையாடலாம்.

இப்போ கல்லு மூங்கில் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமுங்க சார்.

ஆல மர விழுதுலயும் செய்றதுண்டு.

இப்பல்லாம் பெரும்பாலும் பிரம்பை கொண்டு தான் செய்றாங்க.

இக்கலையில் பலவகைகள் உண்டா

கள்ள புத்து , கரடி பீடம் , குறவஞ்சி மற்றும் நாகபாசம் அப்படின்னு ஒரு சில வகை இருக்குங்க.

போட்டியில் எதை கொண்டு ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப் படுகிறார்

புள்ளி கணக்கு தான்.

எத்தனை தடவை எதிராளி மேல ஒருத்தன் தன்னோட சிலம்பத்தால நெத்தி, தோள் பட்டை , கை இது மாதிரி இடங்கள்ல பொட்டு வைக்கிறான் அப்டிங்கறதை வச்சு தாங்க வெற்றி .

இதன் பூர்வீகம்

நம்ம தமிழ்நாடு தாங்க. ஆதி காலத்துல மனுஷன் மிருகங்க கிட்டயிருந்து பாதுகாத்துக்கறதுக்கு செஞ்ச முயற்சி பின்னாடி சிலம்பமா மாறிடுச்சுங்க.

அதனால இந்த கலையில நாங்க செய்ற ஒரு சில அங்க அசைவுகள் விலங்கு மாதிரி இருக்கும்.

சிலம்பம் கற்றுக் கொள்ள ஏதேனும் தகுதி

ஆர்வம் ஒன்னு தாங்க.

அப்புறம் மெய்ப்பாடம்ன்னு எங்க மொழியில சொல்ற மாதிரி.

மாணவன் உடலையும் மனதையும் உறுதி படுத்திக்கணும்.

அப்புறமா தான் நாங்க சிலம்பத்தையே கையில கொடுப்போம்.

இதுவரை சுமார் எத்தனை சீடர்களை நீங்கள் உருவாக்கி உள்ளீர்கள்

கடந்த 26 வருஷத்துல சுமார் 5000 மேல சொல்லி குடுத்திருப்பேங்க

மாதாந்திர கட்டணம் எவ்வளவு

கறாரா கேட்டதில்லைஅவங்களா எது குடுத்தாலும் வாங்கிப்பேன்.

எனக்கு இந்த கலை வளரணும். அது தாங்க முக்கியம்.

போட்டிக்கு வெளியூர் போன அனுபவம்

தமிழ்நாடு முழுக்க அப்புறம் ஆந்திரா , கர்நாடக டெல்லி மாதிரி இடங்கள்லாம் போயி போட்டியில கலந்துக்கிட்டு இருக்கோம்.

திறமை இருக்குற மாணவர்கள் அப்போ போட்டிக்கு வர முடியலைன்னா என் வீட்டு பித்தளை சாமான்களை அடகு வச்சு அவங்கள நிறைய தடவ கூட்டு போவேனுங்க.

(அருகில் இருக்கும் அவரது ஆஸ்தான சீடர் கார்த்தி அதனை வெகுவாக ஆமோதிக்கிறார்)

உங்கள் சீடர்களில் குறிப்பிடத்தக்க வகையில் யாரும்

அவங்கள்ல வைத்தியர்கள் ,ஒரு சில போலீஸ் ஆளுங்க, ஒரு பெண் நீதிபதி இப்படி உண்டுங்க.

உங்க புகைப்படம் கிடைக்குமா

வேணாங்க.அப்படி ஒன்னும் நான் பெரிய ஆள் இல்லையே

இப்படி பணம் எதுவும் வாங்காமல் சொல்லி தருகிறீர்களே, நிறைய படிச்சுட்டு ஒரு பெரிய வேலையில் இருக்கிறீர்களா

நான் ஒரு ஜவுளி கடையில பட்டு துணி செக்ஷன்ல “salesman” ஆ இருக்கேங்க.

நமக்கு தான் படிப்புக்கான அஸ்திவாரம் அஞ்சாவதோட அஸ்தமனம் ஆயிடுச்சுங்களே.



மானிட சேவை என்பது கலைகளை வளர்ப்பதிலும் இருக்கிறது என்பதை நமக்கு  என்பதை இவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.


"வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்"

11 கருத்துகள்:

  1. அருமையான தகவல்களும் ஓர் நல்ல மனிதரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. நண்பர் கில்லார்ஜி அவர்களுக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான மனிதர் அறிமுகம். அவருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான மனிதரை அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெ நா அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  5. பதில்கள்
    1. உண்மை தான் ஐயா. ஆசானின் ஆர்வம் சொல்லில் அடங்காது

      நீக்கு
  6. அன்பிற்குரிய சகோதரர் அவர்களின் சிலம்பாசிரியரின் அறிமுகப் பதிவு அருமை. அந்த சிலம்பாசிரிய நண்பரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். சிலம்பம் மற்றும் அனைத்து தற்காப்புக் கலைகளும் பயின்றவராக இருப்பினும் மிகவும் எளிமையான மனிதராக இருப்பார்.நல்ல மனிதர். நல்ல பதிவு. வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோவான் அவர்களுக்கு பல தற்காப்பு கலைகள் தெரியும் என்பது ஆச்சரியம் தலைமை ஆசிரியரே.
      வருகைக்கும் கருத்திற்கும் நண்பரே

      நீக்கு