ஞாயிறு, 14 நவம்பர், 2021

மெய்வழிச்சாலை

 தொடு சிகிச்சை வகுப்பில் எங்கள் ஆசான் திரு.உமர் பாருக் அவர்கள் வாயிலாக புதுக்கோட்டை அருகே இருக்கும் மெய்வழிச்சாலை என்ற இடத்தைப் பற்றித் தெரிய வந்தது.

அவர்அவ்வூரைப்பற்றிய விஷயங்களை அடுக்கிச் சொல்லச் சொல்ல அவ்விடத்தைப் பார்த்தே தீர வேண்டுமென்று உறுதி பூண்டேன்.

வாய்ப்பு கிடைத்ததென்னவோ 3 ஆண்டுகள் கழித்துதான்.

24 அக்டோபர் 2021நானும் என் குடும்பத்தினரும் மற்றும் நண்பர் செந்தில் & அவரது மனைவி நித்யா ஆகியோர் விஜயம் செய்தோம்.

புதுக்கோட்டையை அடுத்த சித்தன்ன வாசலைத் தாண்டினால், மகிழ்வுந்து பயணத்தில் 15 நிமிடங்களில் வருகிறது அவ்வூர்.

உள்ளே நுழையும்போதே கண்ணில் படுவது, அந்த வாழ்வியலை ஏற்றுக்கொண்ட ஆண்கள் (சிறுவர் உட்பட) தலையில் சீக்கிய மக்களைப் போல் முண்டாசு கட்டிக்கொள்வதும், பெண்கள் முழுமையாக முக்காடு அணிந்து கொள்வதும்தான்.

அங்கு கடந்த 21 வருடங்களாக வசித்துவரும் சாலை பொன்.சுசீலா அவர்கள் எங்களை வரவேற்றார்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.  அரசின் கல்வித் துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

அவரின் விடுதியை சென்றடைந்த நேரம் பிற்பகல் 2 மணியைத் தாண்டி இருந்ததால் அவரும் அவரது தோழியாரும் முதற்காரியமாகச் செய்தது எங்களுக்கு அமுது படைத்தது தான்.

மணி ஆயிடுச்சில்ல, பசியோடு வந்திருப்பீங்க, மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம்,” என்றார்.

என் நினைவுக்கு வந்தது என்னவோ அதிதி தேவோ பவ

ஆனால் இவரது மறுமொழி வேறு மாதிரி இருக்கிறது.

மெய்வழிச் சாலையில் உள்ள என் விடுதிக்கு வருபவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பதை என் கடமையாகக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்”.

அப்படி என்ன இருக்கிறது மெய்வழிச்சாலையில் ?

நம் அறிவுக்குத் தெரிந்தவரை இது சுற்றுலாத் தலமோ; 8-ஆம் அதிசயமோ இல்லை.

ஆயினும் இது தனித்துவமானதாகத்தான் இருக்கிறது.

நாங்கள் அனைவரும் கேள்விக் கணைகளை தொடுக்க தெளிவாக விடையளிக்கத் துவங்கினார் அவர்.

அது என்னங்க மெய்வழிச்சாலை?

மரணத்தில் இரண்டுவகை இருப்பதையும், மரணத்திற்குப் பின்னும் மனிதனுக்கு மட்டும் வாழ்வு இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டவர்களுக்கு இது ஒரு புண்ணியத் தலம்.

திருப்புத்தூரில் தொடங்கப்பெற்று, இராஜகம்பீரத்திலும் மதுரையிலும் வளர்ச்சி பெற்ற மெய்வழிச் சபை 1942-லிருந்து புதுக்கோட்டையில் இயங்குகிறது. அச்சபை அமைந்திருக்கும் ஊர் மெய்வழிச்சாலை.

இச்சபையை நிறுவிய குருநாதரை நாங்கள் மெய்வழி ஆண்டவர்கள் என்றே குறிப்பிடுவோம். அவர் இயற்பெயர் திரு.காதர் பாட்சா என்பது.

மெய்வழி ஆண்டவர்களுக்கு மெய்ஞ்ஞான குருவாக அமைந்த தனிகை மணிப்பிரான் அவர்களே வடலூர் வள்ளல்பிரானுக்கும் குருவாக இருந்தவர் என்பது இவர் அளித்த சிறப்புத் தகவல்.

ஊருக்கு நடுவே அமைந்துள்ள பொன்னரங்க தேவாலயத்தைச் சுற்றி அமைக்கப்பெற்று, வேலியிடப்பெற்ற எல்லைக்குள் அமைந்திருக்கும் எளிமையான கூரைவேய்ந்த விடுதிகளில் இப்போதும் கழிப்பறை இல்லை; (1942-ல் ஆரம்பகாலத்தில் கட்டப்பெற்ற விடுதிகளுக்கு கதவும் இல்லை. தரைகூட சிமெண்ட் பூச்சு இல்லாதிருந்துள்ளது.



இவையெல்லாம் இயல்பான, எளிமையான வாழ்வு கருதி மெய்வழி ஆண்டவர்களால் வகுக்கப்பெற்ற வாழ்வியல் சட்டங்கள்.

துறவறம் பூண்டோ காட்டில் கடுமையான தவம் செய்தோ நாம் முக்தி அடைய வேண்டியதில்லை. மரணத்திலிருந்து நம்மை மீட்கும் செயலுடைய ஒரு மெய்யான குருபிரானின் (அவரே மெய்வழி ஆண்டவர்கள்!) பெருந்தயவினால் மட்டுமே மரணமிலாப் பெருவாழ்வு இங்கு கிடைக்கிறது. இதைத்தான் அருட்பெருஞ் சோதியின் தனிப்பெருங் கருணை என்கிறார் வள்ளலார்.

சர்வ சன்னதங்களையும் தங்கள் திருக்கரங்களில் (உள்ளங்கைகளில்) தரித்தவராய், ஊண் உறக்கமற்றவராய், மூக்குக்கு வெளியே மூச்சோடா தவம் உடையவராய்த் திருமேனியுடன் வாழ்ந்து, இன்று வான்கன்னிவிராட் தவத்திற்கு ஏகியிருக்கும் மெய்வழி ஆண்டவர்களைத் தெய்வமென ஏற்றுக்கொண்டு - அவர்கள் மட்டுமே தெய்வம் என நம்பி வழிபடுவோருக்கு இன்றும் மரணமிலாப் பெருவாழ்வு, நாம் நம்முடைய ஊனக்கண்களால் காணக்கூடிய அளவிற்கு சாகாக்கலை அடையாளங்களுடன் கிடைக்கிறது.



இச்செய்திகளை இவ்வளவு உறுதியாக உங்களால் எப்படிக் கூற முடிகிறது?

மரணமிலாப் பெருவாழ்வு எங்கே, எப்படிக் கிடைக்கும் என்று ஆய்ந்தலைந்த எனக்கு, என் ஆராய்ச்சியின் முடிவாகக் கிடைத்தவைகளைத்தான் நான் அறிந்து கொண்டவைகளைத்தான் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

மெய்வழி ஆண்டவர்களை வழிபட்டு அடக்கமானவர்களைக் காணும் வாய்ப்பிருந்தால் நீங்களும் இவற்றை இன்றும் காணலாம்.

சாலையைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது?

நான் தான், எனக்கு மரணமிலாப் பெருவாழ்வு வேண்டும் என்று ஆய்ந்தேன் அதற்காக அலைந்தேன் என்று சொன்னேனே! காலங்காலமாக இருந்துவரும் இச்செயல், நான் பிறவி எடுத்திருக்கும் இந்தக் காலத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் மெய்வழியில் எளிமையாகவும், நிச்சயமாகவும் கிடைக்கிறது என்பதை என் முனைவர் பட்டப் படிப்பின் வழிகாட்டியாக அமைந்த டாக்டர்.அரங்க.ராமலிங்கம் அவர்கள் கூறக்கேட்டு நான் மெய்வழியில் நுழைந்தேன் மெய்வழிச்சாலைக்கு வந்தேன். உண்மைகளை அறிந்தேன்.

தற்போது மெய்வழியில் சேர மக்களுக்குத் தகுதித் தேர்வு ஏதேனும் உண்டா?

மெய்வழி ஆண்டவர்கள் தூலத் திருமேனியுடன் விளங்கியபோது, (அரசாங்கத்தில் முறையாகப் பதிவு செய்யப்பெற்ற) இச்சபையில் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தளித்து, சத்தியபிராமாணம் செய்து 5049-பேர்கள் அங்கமாகிக் கொண்டார்கள்.

ஆனால், இன்றோ அதுபோன்ற சம்பிரதாயங்கள் இல்லை. சுய விருப்பத்தின்பேரில் எவர் வேண்டுமானாலும் மெய்வழி ஆண்டவர்களை நம்பி தெய்வம் என ஏற்று, வழிபட்டு, மரணமிலாப் பெருவாழ்வடையலாம். எங்களுக்கென்று ஒரு சில வாழ்வியல் முறைகள் உண்டு அவற்றைக் கடைபிடிக்க வேண்டுமென்பது நியதி.

மெய்வழிச்சாலையின் வாழ்வியல் முறைகள் என்பது என்ன?

பஞ்சமா பாதகங்களுக்கு அஞ்சி நடத்தல், அசைவ உணவு உண்ணாதிருத்தல் புகைபிடிக்காதிருத்தல், திரைப்படம் காணாதிருத்தல், அரசியலில் ஈடுபடாதிருத்தல், ஆகியன இகவாழ்வு தொடர்பான பத்தியங்கள்.

ஆலய வணக்க/வழிபாடுகளில் கலந்து கொள்ளுதல், மூலமந்திரம் கூறுதல், தெய்வ நூல்களை ஓதுதல் போன்ற ஒருசில நியதிகள் பரவாழ்வு பற்றியவை. எமன் கைவசப்பட்டு நாறிச்சாகும் சாவிற்குப் போகக் கூடாதென்பது மிக முக்கிய விதி. ஆனால் மெய்வழி ஆண்டவர்களின் பெருந்தயவால் மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர்களின் அடக்கத்தில் கட்டாயம் கலந்து கொள்வோம்.

இறந்வர் யார்? மரணமிலாப் பெருவாழ்வு அடைந்தவர் யார்? என்பதைச் சற்று விளக்குங்களேன்.

சுருக்கமாகச் சொன்னால் மறுபிறப்பைத் தவிர்க்க இறைவனோடு ஐக்கியமாதல் என்ற ஒரு செயல் இருக்கிறது. இதை அடைதலே மரணமிலாப் பெருவாழ்வடைதல். பிறப்பு நம் விருப்பத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இறப்பும் அதைத் தவிர்ப்பதும் நம் கைகளில் இருக்கிறது. பிறந்தால் இறக்க வேண்டும்; இறக்காதிருந்தால் மீண்டும் பிறக்காதிருக்கலாம். இறவா நிலை அடைந்தவர்களின் உடல் துர்நாற்றம் வீசாது , நலம்குலையாது, விறைக்காது, (குளிர்சாதனப் பெட்டியில் இவர்களை வைக்கவே கூடாது) மாறாக முகத்தில் மஞ்சள் நிற அழகு பூக்கும், உடலில் இதமான சூடு இருக்கும், வியர்க்கும். ஆலயத்திலிருந்து கொண்டுவந்து வழங்கப்பெற்ற புனித தீர்த்தம் அவர்கள் வாயின் மூலம் உள்ளே இறங்கும். எல்லாவற்றிற்கும் முதலாக அவர்களின் உயிர் உடலைவிட்டு வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கும்.

இப்படி அடங்குவதைத்தான் திருவள்ளுவர்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்  - என்கிறார்.

இப்படி அடக்கமானவர்களைத் தீயிட்டு எரிக்கக்கூடாது என்பது எங்கள் தெய்வ சட்டம்.

அப்படியா?

பரனளிக்கும் தேகமிது சுடுவது அபராதம்என இவர்களுக்காகத்தான் வள்ளலார்கூட பாடிஇருக்கிறாரே.

இறுதியாகத் தாங்கள் கூறவிரும்புவது?

இந்த மெய்வழிச்சாலை உங்கள் கண்களில் எளிமையான ஊராகத் தோற்றம் அளிக்கலாம். ஆனால், இது “wonder land“ என்பது மெய்வழியைப் புரிந்து கொண்டவர்களுக்கு விளங்கும்.

இங்கு சாதி, மத பேதம் இல்லை.

மொழி, இனம், கலாச்சாரம், பாகுபாடு இல்லை..

பணம், படிப்பு, பதவி இவற்றால் ஏற்றத்தாழ்வில்லை

ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்ற திருமூலரின் திருவாக்கைச் செயலில் கொண்டிருக்கும் ஊர் இவ்வூர்.

மெய்வழி மக்களுக்கெனத் திருவிழாக்கள் உண்டு. கொடியேற்றும் நிகழ்வுண்டு. அலாதியான சடங்குகளுடன்கூடிய திருமண வைபவம் உண்டு.

இது தனி மனித ஒழுக்கத்தைக் கற்பிக்கும் இடம்.

சத்தியமான செயலுடைய இறைநெறியில் மனிதன் வாழ்ந்தானா இல்லையா என்பதை அவனது மரணத்தைக் கொண்டு நிரூபிக்கும் ஊர் இவ்வூர்.

ஆச்சரியமாக உள்ளது, அல்லவா?

இந்தக் கலியுகத்தில் ஜாதி, மத பேதமின்றி மனித நேயம் போற்றும் ஆன்மீகத் தலத்திற்கு உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து வாருங்களேன். நிச்சயமான ஆன்மீகப் பலனை அவர்களும் அடையட்டுமே என்று அழைப்பு விடுக்கிறார் அவர்.



அவரது அழைப்பை ஏற்று ஆன்மீகத்தில் விருப்பம்/நாட்டம் உள்ளவர்கள் ஒருமுறை மெய்வழிச்சாலைக்குச் சென்று பாருங்களேன்.

அந்த ஊர் நிச்சயம் உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.




மெய்வழிச் சாலையின் வாழ்வியலை ஏற்றக் கொண்டு அம்முறைப் படி திருமணம் செய்து கொண்ட எனது நண்பர் மணிவண்ணனும் அவரது துணைவியாரும்

 

23 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சுந்தரின் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி

      நீக்கு
  2. சூப்பர் சார். தங்களின் டாகுமெண்டேஷன் பலருக்கும் பயனுள்ளது

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஐயா
    தங்களின் தொகுப்பு மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  4. ஆமாம், நான்‌ செல்வகுமார் மெய்வழிச்சாலை அருகில் உள்ள கீழக்குறிச்சி எனும் கிராமத்தில் வசிக்கிறேன், அவர்களின்‌ ஒற்றுமை ஒருமைப்பாடு ஜாதி மதம் இனம் இவற்றை தான்டி வாழும் ஒரு சுதந்திர வாழ்வு எனக்கு மிகவும் பிடிக்கும், கலாச்சாரத்தைக் கண்டு நானும் வியந்தேன்,தொடக்க காலத்தில் அங்கிருக்கும் விடுதிகளில் (வீடுகளில்) கதவு கூட இருந்தது கிடையாது நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன், அவர்கள் கொண்டாடும் விழாக்கள் அனைத்திலும் கலந்து கொள்வேன்...... அந்த ஆலயம் சுற்றிலும் உள்ள மணல் தரையில் அமைதியாக அமர்ந்து உட்கார்ந்து பார்த்தல் அவ்வளவு அமைதியும் நிவர்த்தியும் கிடைத்தார் போல் இருந்தது... அனைவரும் வாருங்கள் ‌‌மன‌அமைதியை பெற்றுச் செல்லுங்கள்... எனக்கும் ஜாதி மதம் இனம் இவற்றை கடந்து சுதந்திர வாழ்வு வாழ ஆசை தான்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வகுமார் அவர்களின் கொடுத்து வைத்தவர். வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  5. சிறப்பான செய்தி. தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் பட்டால் மகிழ்ச்சியே. வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே

      நீக்கு
  6. அரிய தகவல்கள் நண்பரே நானும் ஓர்தினம் காணவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் மகிழ்ச்சி நண்பரே. நீங்கள் சென்று வந்தால் மகிழ்வேன்

      நீக்கு
  7. ஒருமுறையேனும் சென்றுவரவேண்டும் என்ற பட்டியலில் உள்ள இடம்.பல செய்திகள் கேள்விப்பட்டுள்ளேன்.நேரில் சென்று அனுபவித்து வர ஆவல் உண்டு.

    கொசுறு செய்தி இந்த வாழ்வியலை ஏற்றுக்கொண்டவர்கள் பெயரில் "சாலை" என்று சேர்ந்திருக்கும்! உங்களது தொடர் பயணதிற்கும் பதிவிற்கும் நன்றி. தொடரட்டும் மேற்கொண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நீங்கள் சென்று வர வேண்டும். அது மட்டுமல்ல நீங்களும் வலை பூவில் இதை பற்றி எழுத வேண்டும் என்பது என் ஆசை. ஆம் சாலை. பொன் சுசீலா என்று தான் அவரை குறிப்பிட்டு உள்ளேன்.

      நீக்கு
  8. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு என நினைக்கிறேன். இந்த அமைப்பினைப் பற்றி எதிர்மறையான செய்திகள் அதிகம் பேசப்பட்டன. இப்பதிவு மூலம் பல புதிய நேர்மறைச் செய்திகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது 40 ஆண்டுகள் என்று அப்போது ஆய்வில் ஈடு பட்டிருந்த (மறைந்த ) என் தூரத்து உறவினர் சொன்னார் ஐயா. நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. மெய்வழிச் சாலை பற்றிய
    மை தீட்டிய மொழியால்
    மெய் சிலிர்த்தது.

    பதிலளிநீக்கு