சனி, 11 செப்டம்பர், 2021

திருக்குறள் : 595

பரதம் ஓர் உன்னதமான கலை என்பதில் நம்மில் பலருக்கு மாற்று கருத்து இருக்க முடியாது.

அந்த நம்மில்என் மனைவியும் ஒருவர் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை.

சிறு வயதிலேயே எங்கள் மகளை பரதம் பயில ஏற்பாடு செய்தார் என் மனைவி.

சுமார் 7-8 வருடங்களுக்கும் மேலாக பரதம் பயின்ற பாரதிக்கு ,

2016 ல் அரங்கேற்றம் செய்ய திட்டமிட்டோம்.

நிகழ்சிக்கு காவல் துறையின் ஓர் உயர்ந்த பதவியில் இருக்கும் IPS அதிகாரியான எங்கள் குடும்ப நண்பரை தலைமை வகிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

மறு பேச்சின்றி ஒப்புக் கொண்டார் அந்த நேர்மையான மனிதர்.

மேலும் சிறப்பு விருந்தினராக மக்கள் பணியில் நல்ல பெயரெடுத்திருக்கும் திரு.சைலேந்திர பாபு அவர்களை அழைக்க வேண்டுமென்ற என் ஆசையை நண்பரிடம் பகிர்ந்தேன்.

துறை ரீதியாக மட்டுமல்லாது , இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் நம் DGP அவர்களின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

சைலேந்திர பாபு அவர்களை சந்திக்க செல்லுமுன் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

1999ம் ஆண்டு, கடலூர் நகரில் துணை ஆய்வாளராக இருந்த என் நண்பர் கிட்டு அவர்களின் திருமண வரவேற்பு.

மாலையில் முதல் நபராய் முன்வரிசையில் இடம் பிடித்து அமர்ந்து விட்டேன்.

பல உயர் அதிகாரிகள் வந்த வண்ணம் இருந்தாலும் கட்டுமஸ்தான ஒருவர் எனக்கு அடுத்த இருகையில் அமர்ந்தார்.

அப்போது ஒரு காவலர் என்னிடம் ஓடி வந்து நெறிமுறையோடு அமருமாறு சொல்லிகொண்டிருக்கும் போதே என்னருகில் இருந்த அதிகாரி , 

அவர் விருப்பப்படி அமரட்டும் என்ன தவறு என்று காவலரை போகச் சொன்னார்.

அப்படி பொது இடத்தில் கண்ணியத்தோடு நடந்து கொண்டவர் அன்றைக்கு கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருந்த திரு.சைலேந்திர பாபு அவர்கள்.




DGP அவர்களை அவரது அலுவலகத்தில் என் குடும்ப சகிதமாக சந்தித்தேன் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் பெறுவதற்காக.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக எங்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார்.

அவர் சமீபத்தில் விஜயம் செய்திருந்த அமெரிக்க அனுபவத்தை பற்றி ஆர்வத்துடன் விவரித்துக் கொண்டிருந்தார்.

சிகாகோவின் நகரின் உயரமான கட்டிடத்தின் மீதிருந்து Sky Diving” (தமிழாக்கம் அறிந்தோர் சொல்லுங்கள்) செய்யும் அவரது புகைப்படத்தை எனக்கு காணும் போதே உதறல் எடுத்தது.

சைலேந்திர பாபு அவர்களுக்கோ இரு முறை மட்டுமே sky diving செய்ய வாய்ப்பு கிட்டியது என்றும் இன்னும் சில முறை கிடைக்கவில்லை என்ற வருத்தம் அப்போதும் தீராமலே இருந்தது.

பேச்சினூடே அவரது அலைபேசி சிணுங்கியது.

அழைத்தவர் மிதிவண்டி ஓட்டுவோர் சங்கத்தின் உறுப்பினர் போலும்.

சென்னையிலிருந்து மாமல்லர்புரம் வரை மறுநாள் செல்வதைப் பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இந்த வயதிலும் மனிதர் உடலை கட்டுக் கோப்பாக தான் வைத்திருக்கிறார்.

மெல்ல மெல்ல விஷயத்திற்கு வந்தேன்.

சார் என் மகளின் நடன அரங்கேற்றத்திற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பிக்க இயலுமா ...?

எந்த தேதியில் வைத்திருக்கிறீர்கள் குமார் .....

பிப்ரவரி 16 சார்.

என் மகளை நோக்கி திரும்பினார்.

ஏனம்மா உனக்கு பரதம் தவிர வேறு என்ன கலைகள் தெரியும். மேற்கத்திய நடனம் எதுவும் கற்றிருக்கிறாயா என்று கேட்டு விட்டு அவரது வருகைப் பற்றி மறுநாள் தெரிவிப்பதாக சொன்னார்.

மறுநாள் அழைத்தேன்.

குமார் என்னை அழைத்தமைக்கு நன்றி. ஆனாலும் எனக்கு பரதம் பற்றி எதுவும் தெரியாதே. இதுவே எனக்கு நன்கு தெரிந்த மேற்கத்திய நடனம் என்றால் நிச்சயம் வருவேன்.

எதுவுமே தெரியாத பரதம் பற்றிய நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக வருவதற்கு எனக்கு தகுதியில்லை. அறியாத ஒன்றைப் பற்றி மேடையில் பேசுவதும் பொருத்தமாயிராது என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

இதை கேட்கையில் எனக்கு ஆச்சர்யத்துடன், அவர் மீதான மதிப்பும் மேலும் கூடத்தான் செய்தது.

தகுதியே இல்லையென்றாலும் மேடை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் அலையும் மனிதர்களுக்கு இடையில் தகுதியுள்ள இவரை போன்றோர் என்றும் வேறுபட்டவர்களே.

சைலேந்திர பாபு அவர்கள் உடல் உயரத்தில், காவல் துறையின் உச்ச பதவியில் மட்டுமல்ல , குணத்தாலும் இமய மலையாகத் தான் திகழ்கிறார்.


வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

 

7 கருத்துகள்:

  1. காவலர் நிறை பேசும் கட்டுரை சிறப்பு சார்

    பதிலளிநீக்கு