ஞாயிறு, 16 மே, 2021

மாலி என்னும் மாமனிதர்

மே மாதம் 7ம் தேதி காலை தோழர் சுந்தர் செய்தியை பகிர்ந்த போது என்னால் நம்பத்தான் முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்தேன்.

2001ம் ஆண்டு இறுதியில் நான் அமெரிக்காவிலிருந்து நம் தேசம் திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டிருந்த போது எனது சித்தப்பா அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப் பட்டவர் மகாலிங்கம்.

அப்போது அவர் HP நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை தலைவராக இருந்தார்.

மனிதர்களை எடை போடாமல் , அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதில் விருப்பம் உள்ளவர்.


தகவல் தொழில் துறை நலிவடைந்திருந்த அந்த நேரத்தில் , மிக மிக குறைந்த ஊதியத்திற்கே ஆட்களை பணியமர்த்தும் வாய்ப்பு இருந்தும்,

அதை செய்யாமல் தகுதிக்கேற்ப ஊழியம் வழங்க வேண்டுமென்பதில் கொள்கை மாறாதிருந்தார்.  

இக்கொள்கை இவரை மட்டுமல்ல, நிறுவனத்தின் நேர்பெயரையும் உயர்த்திக் காட்டியது.

தொழிலில் சிகரம் தொட்ட போதும், வாழ்க்கையில் சிரம் தாழ்ந்தே இருந்தார்.

https://www.youtube.com/watch?v=OfLyil_K89g

நண்பர் சுந்தர் (எங்களுக்கு முன்னாள் மேலாளர்) HP பெங்களுருவில் புதிதாய் விநியோக மையம் (Delivery  Center இன் மொழி பெயர்ப்பு J ) அமைக்க மிகப் பெரிய அளவில் உறுதுணையாய் இருந்தார், 

மேலாளராக அல்லாது அப்துல் கலாம் அவர்களை போல் வழி நடத்தும் ஒரு தலைவனாக.

                                                        திரு. சுந்தர்

HP மற்றும் IBM நிறுவனங்களில் நான் சேர்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமென்றால் அது மிகையில்லை.

தனது மேலாளர் திரு. அருண் தியாகராஜன் அவர்கள் மீது இவர் கொண்டிருந்த குரு பக்தி (தூய தமிழிலில் “ஆசான் வழிபாடு” என்று நினைக்கிறேன்) அளவிட முடியாதது என்பது,

பொது இடங்களில் கூட சற்றும் யோசிக்காமல் பாதம் தொட்டு ஆசி பெறுமளவிற்கு செல்லும்.

Times of India நாளிதழில் அவர் அளித்த பேட்டியே அதற்கு சாட்சி.


IIM போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பகுதி நேர பேராசிரியராகவும் பணி புரிந்தாலும், கற்றது கையளவே என்ற எண்ணம் கொண்டவர்.

அன்றாடம் புதிதாய் என்ன பயின்றோம் / பயிற்றுவித்தோம் என்பது, 

இளைய தலைமுறை இவரது தலைமைப் பண்புகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று.

சுமார் 9 வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்று, நிறுவனங்களுக்கு ஆலோசகராக பணியாற்ற துவங்கினார்.

இத்தனை பெருமைகள் இருந்தும், என் மீது நட்பு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் பாசமும் கொண்டவர்.

நான் 5 வருடங்கள் முன்பு அமெரிக்கா சென்ற போது, மின்னஞ்சலிலேயே அவரது நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது மட்டுமல்லாது,

எனக்கு வேண்டிய அனைத்தும் செய்து தருமாறு அவர்களுக்கு அன்பு கட்டளையும் இட்டார்.

சென்னைக்கு விஜயம் செய்யும் பெரும்பான்மையான நேரங்களில் தன்னை சந்திக்க அழைப்பு விடுப்பார்.

ஒரு சில நட்சத்திர விடுதிகளில் எனக்கு கிட்டிய உணவு நண்பரின் உபயமே.

தர்மபுரியை சேர்ந்த மனிதருக்கு ,

தர்மம் புரிவது பகுதி நேர பணியாகவே இருந்து வந்தது என்பது நாங்கள் அறிந்த உண்மை.

“ நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தே ளுலகு “

என்ற குறளுக்கு பொருத்தமான மனிதர் மாலி அவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

அன்பை மட்டுமே பிறருக்கு பரிசாக அளித்து வந்த திரு.மாலி,

60 வயதில் முதன் முறையாக ஏமாற்றத்தை அளித்திருக்கிறார் 

கரோனாவிற்கு மற்றொரு பலி என்ற பெயரில்.

https://hr.economictimes.indiatimes.com/news/industry/rip-mali-mahalingam-former-vp-hr-of-ibm-india-passes-away/82431662

கரோனாவிற்கு தான் கருணை இல்லை , இறைவனுக்குமா இரக்கம் இல்லை.

25 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. அவரது மறைவு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அன்பு குமாருக்கு,"தர்மபுரியை சேர்ந்தவருக்கு தர்மம் புரிவது பகுதி நேர பணி" என்ற வரியிலேயே திரு.மாலி அவர்களின் குணத்தை கோடிட்டு காட்டினார் விட்டீர்கள் குமார். அன்னாரது மறைவு வருத்தத்தை தருகிறது. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைமை ஆசிரியரின் வருகைக்கும் நீண்ட கருத்திற்கும் நன்றிகள் பல

      நீக்கு
  3. தீநுண்மி பலிகொண்ட நல்லவர்கள் பட்டியல் - பயம் தருகிறது. திரு மாலி அவர்களின் இழப்பும் அப்படியே.

    ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீநுண்மி புதிய சொல்லை அறிமுக படுத்திய நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
      கரோனா அச்சம் தந்தாலும் நாம் மீண்டு(ம்) வருவோம் என்று நம்பிக்கையுடன் இருப்போம்

      நீக்கு
  4. எதிர்பாராத நட்புகள் திடீரென்று மரணிப்பது தற்போது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது நண்பரே....

    எமது இரங்கல்களை தெரிவிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே. அவரது இழப்பை இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை

      நீக்கு
  5. திரு. குமார் 
    திரு. மாலியினுடைய இழப்பு தங்களுக்கு ஒரு பெரிய இழப்பு. உங்களுடைய நண்பராகவும், ஆசார்யராகவும், வழிநடத்துபராகவும் உங்கள் வாழ்க்கையைத் தொட்டவர். நூற்றுக்கணக்கானோர் அவரது இழப்பை தினமும் உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று உணர்கிறான். அவரது ஆன்மா சாந்தி அடைய அவர் குலதெய்வமான ஸ்ரீ ஸ்வாமிநாதனை ப்ரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு. சுந்தர் அவர்களின் நீண்ட கருத்திற்கு நன்றி.
      நிச்சயம் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று தான்.

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. என்னால் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை...என்னை போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் அனைவரின் கனவை  நனவாக்கியவர். எனக்கு  எல்லாமாக இருந்து வாழ்க்கை என்றால் என்ன? எப்படி ஒரு சவாலை எதிர்கொள்ள வேண்டும் எந்த நேரத்தில் தணிந்து போக வேண்டும், எந்த நேரத்தில் தைரியமாக செயல்பட வேண்டும் என்று அத்தனை பண்புகளையும் போதித்தவர். அவரது இழப்பை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை...அவரது ஆன்மா இறைவனின் பாதத்தில் தழுவி சரணடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    ஓம் நமசிவாய 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ராம்பிரசாத். அவர் மறைவை மறப்பது எளிதல்ல.

      நீக்கு
  8. நல்ல பதிவு குமார். ஆனாலும் வருத்தமளிக்கிறது

    பதிலளிநீக்கு
  9. மிகவும் வருத்தமளிக்கிறது திரு. மாலி அவர்களின் இழப்பு. எனக்கு அவர் யாரென்று தெரியாதென்றாலும் அவர் ஒரு அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பது இந்த பதிவிலிருந்து அறிய முடிகிறது. ஆழ்ந்த இரங்கல்கள் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும். ஒரு இனம் அறியா வலி நல்ல மனிதர்கள் மிக சீக்கிரம் நம்மை விட்டு விலகும் போதும். அவரது ஆன்மா சாந்தியுடன் உறங்க ப்ரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறரின் வேதனையை புரிந்து கொண்டு கருத்தை வெளிப்படுத்தும் SGPக்கு நன்றி

      நீக்கு
  10. கொரோனவின் பேரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மற்றுமொருவர்.அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.அவரது நற்பண்புகளை பதிவு செய்ததற்கு நன்றியும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ராஜேஷ். விரைவில் உங்களையும் வலைபூவில் எதிர்பார்க்கிறேன்

      நீக்கு
  11. உயர்வான உள்ளமும் பண்பும் உள்ளவர்களை பார்ப்பது அரிது. அப்படிப்பட்டவர்களின் இழப்பு சமுதாயத்திற்கு பேரிழப்புதான். அவரின் நினைவுகளைப் போற்றுவதும் அவர் மூலம் நாம் கற்ற நற்பண்புகளுடன் வாழ்வதே அவருக்கு நீங்கள் செலுத்தும் சிறந்த நன்றியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் அழகாக உங்கள் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள். நிச்சயம் அவர் காட்டிய பாதையில் செல்வேன்.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு