திங்கள், 17 டிசம்பர், 2018

உள்ளத்தில் நல்ல உள்ளம்

திரை உலகில் பிரபலமாவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல.  

அப்படியே ஆகிவிட்டாலும் தன் திறமையினால் கிடைத்த நற்பெயரை தொடர்ந்து தக்க வைப்பது குதிரை கொம்பு.

அப்படி ஒருவர் தாம் மறைந்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் இன்றும் தமிழகமே போற்றி வரும் ஒரு மாபெரும் கவிஞர் என்பது எளிதான செயலா என்ன.

அப்படிப்பட்டவரின் மகனாய் பிறந்து தம்மைப் பற்றி அதிகம் வெளிக் காட்டி கொள்ளாமல் தந்தை சென்ற பாதையில் செல்லாது தனக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்து அதிலே மிளிர்ந்து வரும் ஓர் இனிய மனிதர் இவர்.

சில வாரங்களுக்கு முன் அவரை சந்திக்க வாய்ப்பு கிட்டியது ,சென்னை துறைமுகத்தில் பணி புரியும் எனது அருமை நண்பர் ஷியாம் சுந்தர் அவர்களின் உதவியுடன்.

கணீர் குரலில் வரவேற்று முதல் சந்திப்பிலேயே மிகவும் மனம் கவர்ந்தார்.

ஆம் நண்பர்களே, என்னை சந்திப்பது முதல் முறை என்றாலும் அவரது உபசரிப்பு அருமையாக இருந்தது. 

என்ன வேண்டும் என எங்களை கேட்டு தனது உதவியாளரை அழைத்து தேநீர் கொணர செய்தார்.

நாங்கள் தேநீர் அருந்திய காகித குவளைகளை தாமே எடுத்து குப்பை கூடையில் போட்ட போது என் மதிப்பில் உயர்ந்தார்.

பேசத் துவங்கும் முன் உரையாடலை கை பேசியில் பதிவு செய்து கொள்ளவும் சொன்னார்.

அது மட்டுமல்லாது, அவரே சென்று மின் விசிறியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு, குளிரூட்டியை இயங்க செய்தார் ஓசையற்ற குரல் பதிவிற்காக.

பேச துவங்கிய போது தான் கவிஞரான இவரது தந்தையார் எவ்வளவு உதவும் குணம் கொண்டவர் என்பதும் தெரிந்தது.

கவிஞர் தனது சகோதர, சகோதரிகளுக்காக அவர்கள் வாரிசுகளுக்காக, அமைச்சர்களிடம் பேசுவது, கல்லூரிகளில் இடம் கிடைக்க செய்வது மற்றும் பண உதவி என்று செய்தவை அதிகம்.

இவ்வளவு செய்தும் அவர் பிரதி பலனாக எதையும் எதிர் பார்த்ததில்லை.

எப்பொழுதுமே உறவினர்களுக்கெல்லாம் ஓர் உதவும் கருவியாக தான் பார்க்கப் பட்டார்.

இதை அறிந்தே தான் கவிஞர் “நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்டேன்” என்று பாடல் எழுதினார் போலும்.

தந்தையிடமிருந்து தமையனாருக்கு வருவோம்.

பார்ப்பதற்கு சுமார் 55 வயது உள்ளவராக தோன்றினாலும்,
இவரது வயதோ 63க்கும் மேல்.

எப்படி தமது சரீரத்தை பராமரிக்கிறாரோ தெரியவில்லை.

இவர் சட்டம் படித்தவர். ஏற்றுமதி வர்த்தகமும் சிறிது காலம் செய்து வந்தார்.

சென்னையில் இவர் படித்த சட்ட கல்லூரியானது அரைநாள் மட்டுமே இயங்கி வந்தது.

மீதம் உள்ள அரை நாளை ஏதேனும் உபயோகமாக செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தவரை தந்தையரே ஏற்றுமதி தொழில் செய்யலாம் என்று மகனை ஊக்குவித்தார்.

இருப்பினும் அந்த தொழில் பெரிதாக கை கொடுக்கவில்லை.

எனவே 1977 இல் கீதாசமாஜம் என்ற பதிப்பகத்தை துவங்கினார்.
இப்பதிப்பகம் 1981ல் நிறுத்தப்பட்டது பல்வேறு காரணங்களுக்காக.

மீண்டும் இந்த பதிப்பகம் 1986 ல்துவங்கப்பட்டது, இம்முறை தந்தையாரின் பேரிலேயே.

ஒவ்வொரு பதிப்பகத்தாருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளம் உண்டு.

வானதிக்கு சரித்திர, ஆன்மீக புத்தகங்கள் போல ,இவரின் பதிப்பகத்திற்கு "சுயமுன்னேற்றம்"  சம்பந்தபட்ட நூல்கள் மற்றும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட நூல்கள் தாம் அடையாளம்.

ஆங்கில மொழி பெயர்ப்பு வேலைகளை நிறைய பதிப்பகத்தார் செய்வதில்லை. இவர் செய்கிறார்.

புத்தகங்களை இவர் அச்சிடுவதோடு மட்டுமல்லாமல்,இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்து விற்பனை செய்கிறார் , கால ஓட்டத்திற்கேற்ப.

இவ்வளவு நேரம் பதிப்பகத்தை பற்றியே இவரிடம் பேசிக்கொண்டிருந்த நான் மெல்ல இவரது தந்தையாரை பற்றி பேச துவங்கினேன்.

எத்தனையோ அருமையான பாடல்களை எழுதிய கவிஞருக்கு பிடிக்காத பாடல்கள் ஒன்றிரண்டு இருக்க வேண்டுமல்லவா.

அவை, இலந்தை பழம் போன்ற இரட்டை அர்த்தமுள்ள பாடல்களும், குத்து பாடல்களும்தான்.

அது போன்ற பாடல்களை கவிஞர் என்றும் விரும்பி எழுதியதில்லை மாறாக வற்புறுத்தலின் பேரிலேயே எழுதியிருக்கிறார்.

கவிஞர் பாமரர்களுக்கும் பாடல் வரிகள் புரியும் வகையில் எழுதுவதில் அக்கறை கொண்டிருந்தார்.

தமது வாகன ஓட்டிகளோ, பணியாளர்களோ பாடல் வரிகள் புரியவில்லை என்று சொன்னால் வரிகளை மாற்ற முயல்வார்.

இல்லையெனில் அடுத்த முறை இதை மனதில் கொண்டே பாடல்கள் இயற்றுவார்.

கவிஞரின் பல பாடல்கள் இலக்கியதை அடிப்படையாக கொண்டவை.

"ஆட்டுவித்தால்ஆடாதாரே ,பாட்டுவித்தால் பாடாதாரே
கேட்டுவித்தால் கேளாதாரே"

என்ற ஆறாம் திருமுறைபாடல் பாடல்தான்

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்று பாமரனுக்கும் புரியும் படியாக எளிய வடிவில் வந்தது.

"அந்தமும் வாழ்வும் அகத்து மட்டே" என்ற பாடல் தான் 
வீடு வரை உறவு என்று உருமாறி வந்தது.

8ம்வகுப்பு வரை மட்டுமே படித்த கவிஞருக்கு இவ்வளவு தமிழ்ஞானம் எப்படி வந்தது என்ற அடிப்படை கேள்வி என்னுள் எழாமல் இல்லை.

இந்த மாபெரும் கவிஞர் அப்படி ஒன்றும் எளிதாக இத்தகைய தமிழ் ஞானத்தைப் பெற்றிடவில்லை.

ஒரு சில ஆசிரியர்களிடம் தமிழ் பயின்றார்,

மேலும் சுமார் 3000 தமிழ் நூல்களைப் படித்து புலமையை வளர்த்துக்கொண்டார்.

அவற்றுள் 1500 நூல்கள் தற்போது இவர் இல்லத்தில் உள்ளன.

மீதமுள்ள நூல்கள் இவரது பெரிய தாயாரிடம் சென்று விட்டன.

உரையாடலின் போது கவிஞரை பற்றி ஒரு சில சுவையான சம்பவங்களை சேகரித்தேன்.

பார்வதி என்று பெயருள்ள தம் மனைவியை கவிஞர் அழைப்பது "பார் அவதி" என்றே.

கவிஞரிடம் பாடலுக்கு வேண்டிய சூழ்நிலை விளக்கப்பட்டு விட்டால் உடனே பாடல் அருவியாய் கொட்டும் .

அதுவும் விட்டத்தை பார்த்தபடி அவர் சொல்ல துவங்கினால் ஒரு மாணவன் மனப் பாடம் செய்து ஒப்புவிப்பது போலிருக்கும்.

அவரது உதவியாளர் பஞ்சு அருணாச்சலம் கவிஞரின் சொல் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பாடலை எழுத மிகவும் சிரமப்படுவார்.

"ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே" என்ற பாடல் பதிவான பின்னர், பாடலைக் கேட்டக்  கவிஞர் ஒரு சிறு தவறினை கண்டார்.

இவர் சொன்னதோ “ஒருத்தி மட்டும் கரையினிலே" என்பது,
எழுதப்பட்டதோ“ ஒருத்தி மட்டும் தரையினிலே”என்பது.

ரெண்டுக்கும் ஒன்னும் பெரிய வேறுபாடு இல்லை என்று சொன்னவர்களிடம் கவிஞர் சொன்ன விளக்கம் அற்புதம்.

நாம் இப்போ நிற்பது தரையடா ,ஆற்றில் ஓடம் செல்லும்போது , நாயகி நிற்பது கரையடா என்று சொன்னதோடு நிற்காமல் ,

அவரே தயாரிப்பாளரிடம் தம் செலவிலேயே மீண்டும் பாடல் பதிவினை செய்து தருவதாக சொன்னார்.

தயாரிப்பாளர் பெருந்தன்மையோடு அதை மறுதலித்தது வேறு கதை.

இயக்குனர் பாலசந்தர் அவர்கள் MSV மற்றும் கவிஞருடனும் சேர்ந்து ஒரு திரைப்படபாடல் எவ்வாறு உருவாகிறது என்ற செய்முறை விளக்கமாக பொதுமக்களுக்கு மேடையில் செய்துகாட்டவேண்டுமென்ற முயற்சியில் இறங்கினார்.

தேர்ந்தெடுக்கப்பட்டஇடம் : Music Academy.

MSVயும் இயக்குனர் அவர்களும் சேர்ந்து காலை முதலே பயிற்சியில் ஈடுபட்டு இருக்க, மாலை வந்த கவிஞர் எந்த ஒரு சிரத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை.

நிகழ்ச்சியில் பொது மக்கள் முன்னே மெட்டு போடப்பட்டவுடன் பிறந்த பாடல்தான் "அங்கும் இங்கும் பாதை உண்டு”.

கவிஞரின் மறைவிற்கு பின் ஏன் அவரது வாரிசுகள் யாரும் திரைதுறையில் மிளிரவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை.

நம் நண்பர் சொன்ன விடை மிக அற்புதமாய் இருந்தது.

சிவாஜி மற்றும் MGR காலத்திற்கு பிறகு திரை உலகம் ஒரு மாற்றத்தை சந்திக்க நேர்ந்தது.

திறமையானவர்கள் எண்ணிக்கை சற்றே குறைய துவங்கியது.

ஒருவர் இயக்கிய திரைப்படத்தை தமது பெயரையே இயக்குனராக போட்டு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்ட கூத்தும் உண்டு.

இது போன்ற சூழ்நிலையில் தாமும் சென்று வாய்ப்பு கேட்டால் ,கவிஞரின் மகனே வந்து கதவை தட்டுகிறான் என்று நிலைக்கு ஆளாக நேரிடும்,

மேலும் தம் தந்தையார் பெயர் கேட்டு விடும் என்ற காரணத்தாலேயே வாரிசுகள் யாரும் திரை புகவில்லை.

இதை கேட்கும் போது நம் நினைவிற்கு வரும் கவிஞரின் வரிகள்

"கையிலே பணம் இருந்தால் கழுதை கூட நடிகனடி
கைதட்ட ஆளிருந்தால்  காக்கை கூட அரசனடி
பொய்யிலே நீந்தி வந்தால் புழுகனெல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யும்ஆசாமி சூரனடி"

கவிஞரின் படம் நீங்கள் இங்கு காண்பது ,புதுக்கோட்டையிலிருந்து ரங்கசாமி என்ற ரசிகர் கொடுத்த அன்பளிப்பு.


ஓவியர் அப்படத்தை கொடுக்கையில், யாருக்கும் எளிதில் அமையாத ஒரு சிறப்பம்சம் கவிஞருக்கு அமைந்திருப்பதாக சொன்னார்.

கவிஞரின் ஒரு பாதி முகத்தை மட்டும் பார்த்தோமானால் அது பெண் முகம் போலவும் மறுபாதி ஆண்முகம் போலவும் தெரியுமளவிற்கு சிறப்பு அம்சம் கொண்டவர் கவிஞர் அவர்கள்.

இதை கேட்கையில் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது , இந்த மனிதருக்கு சரஸ்வதி தேவியின் அருள் மட்டுமில்லை , அர்தநாரீஸ்வரரின் அன்பும் இருக்கிறதென்று.

கவிஞரை பற்றி நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர் பரிந்துரைப்பது “வனவாசம்” , “சினிமா சந்தையில் 30  ஆண்டுகள்” மற்றும் "எனது வசந்த காலங்கள” ஆகிய புத்தகங்களை.

கல்லூரியின் சிறப்பு அழைப்பாளராய் அழைக்கப்பட்டு பேசி முடித்த பின் மேடை இறங்கி வரும்போது எதேச்சையாய் ஒரு மாணவனை அங்கு கண்டார்.

என்னடா இங்கே, என் பேச்சை கேட்க வந்தியா என்றவரிடம் ,
இல்லை அப்பா இங்குதான் படிக்கிறேன் என்றார் அக்கல்லூரியில் படிக்கும் அவரது மகன்.

தன் மகன் எக்கல்லூரியில் படிக்கிறான் என்பதை அறியக் கூட நேரமின்றி, பாடல், பாடல் என தன் கால்களில் இறக்கைக் கட்டிப் பறந்தவர் இக்கவிஞர்.

நண்பர்களே,

தங்களின் யூகம் சரிதான்.

இக்கவிஞர் தான், கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

எங்களிடம் நட்பு பாராட்டி மிக இனிமையாக உரையாடியவர் , கவியரசு அவர்களின் அன்பு மகன், கண்ணதாசன் பதிப்பகத்தை நடத்தி வரும் இனிய மனிதர் காந்தி கண்ணதாசன் அவர்கள்.



                             காந்தி கண்ணதாசன் அவர்களுடன்


என்னால் மறக்க இயலாத மனிதர்களில் ஒருவர்.



                                   நண்பர் ஷியாம் சுந்தருடன்

உரையாடல் முடிந்து கனத்த இதயத்துடன் தான் இவ்விடம் விட்டு கிளம்பினோம், கவிஞர் தம் உடல் நலத்தை பேணி பாதுகாத்திருந்தால் இன்னும் பல அருமையான பாடல்களை நமக்கு வாரி வழங்கியிருக்கலாமே என்ற பேராசையே காரணம்.