வெள்ளி, 15 ஜூன், 2018

மாற்று(ம்) திறனாளி


குழந்தை பிறந்தவுடன் வாரிசு வந்த மகிழ்வில் குடும்பமே திளைத்திருக்க வேண்டிய தருணம் அது.

பாட்டியார் மட்டும் பிறந்த குழந்தையை , இந்த பதிவின் நாயகரை ஏறெடுத்தும் பாராமல் மருத்துவமனையை விட்டு சென்று விட்டார்.

அப்படி என்ன நடந்து விட்டது.

வாருங்களேன் பார்ப்போம்.

1982 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி, ஆஸ்திரேலியாவில் நிக் வுஜிசிக் பிறந்த போது இவருக்கு இரு கரங்கள் மட்டுமல்ல, கால்களும் இல்லை.



ஓர் அங்குலம் அளவுள்ள கால்கள் கொண்ட இவருக்கு ஒரு கால் அந்த சிறிய அளவிலும் கூட கோணலாகவே இருந்தது.

மற்றபடி இவர் முழு உடல் நலன் உள்ளவர் தான்.

ஒரு மாற்றுத் திறனாளி சிறுவனைப் போல் இவர் இல்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் பயிலாமல் இவர் மற்ற ஆரோக்கியமான மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே சேர்ந்தார், அரும்பாடுபட்டு.

தம் மீது விழுந்த கேலியான விமர்சனங்களை தாங்க இயலாமல் 8ம் அகவையிலேயே தற்கொலைக்கு முயன்றவர் , பின்னர் அவைகளை மெல்ல மெல்ல வெற்றி படிகளாக்கிக் கொண்டார்.

இவரின் தாயார் மாற்று திறனாளிகளை பற்றி ஒரு நீண்ட நேரம் இவரிடம் பேசியதே இவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது

இரு கரங்களும், கால்களும் இல்லை , கூடவே கவலையும் இல்லை என்பதே இவரது தாரக மந்திரம்.



உயரம் .99 மீட்டர்களே உள்ள இவரது திறமைகளை பட்டியலிடுவது சிரமம் தான்.

தூரிகையை வாயால் கவ்விய படியே ஓவியம் வரைவதில் வல்லவர்.

ஓர் அங்குல கால்களை கொண்டே கால் பந்து அழகாய் விளையாடுவார்.



கணிப்பொறியில் நிமிடத்திற்கு 45 சொற்களை இவர் அடிக்கவும் செய்பவர் என்பது மட்டுமல்ல, இவர் இசை கருவிகளும் வாசிக்கும் திறன் உடையவர்..

தமக்கென தனியாக வடிவமைக்கப்பட்ட மகிழ்வுந்தை செலுத்துவதில் வல்லவர்.


Skydiving செய்வதிலும் அஞ்சாதவர்..



இவ்வளவு ஏன், இவர் நீந்தவும் செய்வார் என்றால் நம்ப முடிகிறதா.




முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர் ஓர் ஊக்கமூட்டும் மேடை பேச்சாளர்.



2006 ல் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த இவர் 2012 ல் கனே மியாஹார என்ற பெண்மணியை கரம் பிடித்தார்.



மேடை பேச்சிற்காக இது வரை சுமார் 57 நாடுகள் பயணித்துள்ளார்.



3000 மேடைகள் ஏறியுள்ளார், ஒரு சில இடங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 110,000 மேலே.

“Life without limits” , “Limitless” , “Unstoppable “, “Attitude is everything”  போன்ற ஆங்கில புத்தகங்களை எழுதியுள்ளார்.






"The Butterfly Circus என்ற குறும்படத்தில் நடித்தமைக்காக விருதும் பெற்றார்..


பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

(பொருள்: உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை)

மேற்கூறிய திருக்குறளுக்கு ஏற்ப சிறந்த உதாரணமாய் வாழ்ந்து வரும் இவரை போன்ற திறமைசாலிகள் இவ்வுலகிற்கு மென்மேலும் கிடைக்க பெறுவார்களானால், மாற்று திறனாளிகள் என்ற சொல் அகராதியிலிருந்து மறைந்து, உலகை மாற்றும் திறனாளிகள் என்ற சொல்லே நிச்சயம் இடம் பெறும்.

வெள்ளி, 1 ஜூன், 2018

என்று தணியும் இந்த ஆங்கில மோகம்


சில மாதங்களுக்கு முன் என் நீண்ட நாளைய நண்பரின் புதின வெளியீட்டு விழாவிற்காக தஞ்சை சென்றிருந்தேன்.

நண்பருக்கு அனைத்து துறைகளிலும் தொடர்புகள் அதிகம்.

எனவே ஆங்கில மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமின்றி பல்கலை கழகத்தில் பணி புரியும் அதிகாரிகளும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டிருந்தனர்.

சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அந்த புதினத்தை பற்றி வந்திருந்த அனைவரும் மிகவும் பாராட்டி பேசினர்.

வரலாற்று ஆசிரியர், நண்பரின் நற்குணங்களை பற்றி கூற பல்கலை கழக அதிகாரியோ நண்பரின் எழுத்து நடை பற்றி சிலாகித்து பேசினார்.

அடுத்து பேச வந்தவர் ஆங்கில பேராசிரியர்.

பேசிய 15 நிமிடங்களில் சுமார் ஓர் இரு நிமிடங்களே புதினம் பற்றி பேசினார்.

பின்னர் தம்மை பற்றியும், ஆங்கில மொழியின் பெருமை பற்றியும் பேச துவங்கினார் .

ஆங்கிலம் போல் ஒரு மொழி இல்லை அதை கற்றால் வாழ்வு சிறக்கும். என்னிடம் ஆங்கிலம் பயின்ற பல மாணவர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளனர் என்று பேசிக் கொண்டிருந்தார்.

எனக்கோ சற்றே குருதி கொதிக்க துவங்கியது.

தேவையான இடங்களை தவிர மற்ற இடங்களில் தாய் மொழியையே பயன் படுத்த வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன் நான்.

(கணிப்பொறியில் பணி புரியும் நான் ஆங்கிலத்திற்கு மரியாதை அளிக்கிறேன்உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை)

ஆங்கிலேயன் நம்மை ஆண்டான் என்பதை விட நமது வளங்கள் பலவும் சுரண்டப்பட்டன என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

ஜாலியன் வாலாபாக் படுகொலையும் கோஹினுர் வைரம் நம் நாட்டிலிருந்து மறைந்ததும் ஒரு சில உதாரணங்கள் எனது இந்த கோபத்திற்கு.

தமிழ் தொலைக்காட்சிகளின் பல நிகழ்ச்சிகளில் செயற்கையாக மற்றும் தேவையின்றி ஆங்கிலம் பேசும் யாரை கண்டாலும் எனக்கு வெறுப்பே மேலோங்கி நிற்கும்.

குறிப்பாக நடுவர்கள் என கூறிக் கொண்டு மேடையில் ஒலி வாங்கியுடன் அமர்ந்திருப்பவர்கள்.

ஒருவன் திறமையை மேடையில் விமர்சனம் செய்யும் போது 95% ஆங்கிலமும் 5% மட்டுமே தமிழும் அவர்களால் பேசப்படும்.

காரணம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  ஆங்கிலத்திற்கு அளிக்கப் படும் மதிப்பு உலகின் மூத்த மொழிக்கு அளிக்கப் படுவதில்லை.

பாடகர்கள் பலர் தொலைக்காட்சியில் நடுவர்களாக இது போன்று பேசுவதை நிச்சயம் கண்டிருப்போம்.

அப்போதெல்லாம் என்னுள் எழும் கேள்விதிரைப் படங்களின் பாடல் பதிவின் போது தமிழிலேயே எழுதப்பட்ட பாடலை ஆங்கிலம் கலந்து பாட இவர்கள் ஆயத்தமாய் இருக்கிறார்களா என்பதே.

சரி செயற்கையாய் இருக்கும் மனிதர்களை விட்டு விடயத்திற்கு வருகிறேன்.

அந்த பேராசிரியரின் பேச்சில் தலை செருக்கு நன்றாக வெளிப் பட்டதை கண்ட எனக்கு அவரிடம் சிறிது நேரம் பேச வேண்டும் என தோன்றியது.

பேசி முடித்த பிறகு வந்தவரிடம் , என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச துவங்கினேன்.

சார் நல்லா பேசினீங்க , நானும் உங்க கல்லூரி மாணவன் தான் என்ற போது அவர் மகிழ்ந்தார்.

ஆங்கிலத்தில் எனக்கு ஓர் ஐயம் என்ற போது , கேளுங்கள் என்றார்.

"நான் என் குடும்பத்தில் ஐந்தாவது மகன்" என்ற சொற்றொடருக்கு ஆங்கிலத்தில் கேள்வி என்னவாக இருக்க முடியும் என்றேன்.

என் ஆங்கில அறிவிற்கு எட்டிய வரை இந்த கேள்விக்குவிடை இல்லை.

அவரோ “Which of the son are you”  என்பதே விடை என்றார்.

எனக்கோ இந்த விடை சரியாய் இருக்குமென தோன்றவில்லை.

ஆகையால் அவரிடம் ஐயா இது சரியாய் தோன்றவில்லையேஎந்த மகன் என்றா பொருள் கொள்ள முடியும் என்று கூறியதோடு  நிற்காமல் ஆங்கிலம் அப்படியொன்றும் ஒரு முழுமை அடைந்த மொழியாய் தோன்றவில்லை  என்ற எனது தனிப்பட்ட கருத்தை நான் சொன்ன பொது அவருக்கு கோபம் பொசுக்கென்று வந்தது.

பேசிக் கொண்டிருக்கும் போதே நாகரீகமாய் தமது வாகனத்தினுள்ளே சென்று அமர்ந்து விட்டார்.

பின்னாலே வந்த உதவியாளர் எனப்படும் அள்ளக்கை,

சார் ஏன் போயிட்டீங்க , ஆங்கிலம் தெரியாதவன் பிச்சைகாரன் , அடி முட்டாள் என்று மூதறிஞர் ஒருவர் சொன்னதை இவருக்கு (எனக்கு) சொல்ல வேண்டியது தானே என்றார்.

ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த என் ரத்தத்தில் இவர் எண்ணையை அல்ல , எரி பொருளையே ஊற்றி விட்டார்.

அப்படி என்றால் இத்தாலியிலிருந்து இங்கு வந்து தமிழுக்காக தம்மை அர்ப்பணம் செய்த வீர மாமுனிவர் எனும் ஜோசப் பெஸ்கி அடி முட்டாளா ..?


2000 ஆண்டுகளுக்கு முன் கண் அறுவை சிகிச்சை செய்த வாஸ்த்யாயனர் ஆங்கிலம் தெரிந்து தான் செய்தாரா அல்லது ஆர்யபட்டா கோள்களை ஆராய்ந்த போது ஆங்கிலம் இங்கு இருந்ததா போன்ற என்னுடைய பல கேள்விகளுக்கு அவரால் விடை தர இயலவில்லை.

என்ன இருந்தாலும் நாம் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்றவாறே அவரும் வாகனத்தினுள்ளே சென்று அமர வாகனம் வேகமாய் சென்று விட்டது.

இவரை போன்ற ஆங்கில மோகம் கொண்டவர்கள் சுமார் 100 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழ் இனி மெல்ல சாகும் என்று அந்த பெருங்கவி பாடி இருக்க மாட்டார்.

இந்த விடயத்தில் (மட்டும்) அந்த கவியின் கூற்று பொய்யாகி விட வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.