திங்கள், 21 மே, 2018

கண்ணதாசனும் முருகதாசனும்

திரைப்படங்கள் என்றால் நான் உங்களில் பலரைப் போல் விரும்பி பார்ப்பதுண்டு. குறிப்பாக கருப்பு வெள்ளை திரைப்படங்கள்.

எதற்கு பல வண்ண தொலைகாட்சி பெட்டிகருப்பு வெள்ளை பெட்டியையே வாங்கி இருக்கலாமே என்று தினமும் என் மனைவி சொல்லும் அளவிற்கு உண்டென்றால் மீதத்தை நீங்கள் யூகம் செய்து கொள்ளலாம்.

அப்படிப் பட்ட படங்களில் பட்டுக்கோட்டைஆலங்குடி சோமு ,
கா மு ஷெரிப் என எத்தனையோ பாடலாசிரியர்கள் நம் மனதை கவர்ந்தாலும் நான் என்றும் முதலிடம் தருவது கவிஞர்கள் கண்ணதாசனுக்கும்வாலிக்கும்  தான்.

இந்த இருவரின் பாடல்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது , இருவருக்குமிடையே நிறைய ஒற்றுமைகளை  கண்டு மலைத்தேன்.

முத்தையாகண்ணன் மேல் கொண்ட பற்றினால் கண்ணதாசன் என்று பெயரை மாற்றிக் கொண்டார்.




ரங்கராஜனோ பெருமாளை வழிபடும் குடும்பத்தில் பிறந்தவராயினும் முருகனின் தீவிர பக்தர் .

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் போன்ற முருகன் பாடல்களை TMS அவர்களுக்கு ஸ்ரீரங்கத்திலுருந்து அனுப்பி அவரால் சென்னைக்கு அழைத்து வரப் பட்டவர்.



ஆனந்த விகடனில் இருந்த மாலி அவர்களின் திறமையின் பால் ஈர்க்கப்பட்டு வாலி என பெயர் மாறினார்.

ஆக திரையுலகில் இருவருக்கும் புனைப் பெயர் தான்.

இருவருமே இவ்வுலகில் தொடாத விஷயங்கள் இல்லை தங்கள் பாடல்கள் மூலம்.

தாய்மையை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனோ 
அம்மா என்றொரு தமிழ் வார்த்தை என்று அழகாக எழுதினார்.

வாலியின் பாடலான “அம்மா என்றழைக்காத உயிரில்லையே
ஸ்ரீரங்கம் கோவிலில் கல் வெட்டுக்களால் பொறிக்கப் பட்டுள்ளது அப்பாடலுக்கு சிறப்பல்லஅதன் முலம் கல்வெட்டிற்கே பெருமை.

வாலி அவர்களோ ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்”என்றும் 
நலம் வாழ எந்நாளும் என வாழ்த்துக்கள் “ அழகாய் எழுத,

கவியரசுவோ “வீடு வரை உறவு , வீதி வரை மனைவி” என்றும் 
போனால் போகட்டும் போடா” என்றும் தத்துவத்தின் உச்சம் தொட்டார்.

ஆக ஒருவர் வாழும் போதும் மற்றொருவர் வாழ்க்கைக்கு பிறகும்.

என் அறிவிற்கு எட்டிய வரையில் மரணத்தை பற்றி எழுதப் பட்ட பாடல்களில் மேற்சொன்ன கவிஞரின் இரு பாடல்களையும் மிஞ்சிய ஒன்று இன்று வரை இல்லை. 

பெண்மையின் சிறப்பை கண்ணதாசன் 
காலங்களில் அவள் வசந்தம்”  என்று மிக எளிமையான சொற்களில் கூற ,

வாலியோ நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ என்று அங்குலம் அங்குலமாய் வர்ணித்து பிரம்மாதப் படுத்தி விட்டார் என்றே எனக்கு தோன்றுகின்றது.

குழந்தைப் பாடல் என்று கொண்டால்,

ஒருவர் தங்கங்களே நாளை தலைவர்களே என்று துவங்கும் 
பாடலில் கூடிய பிறகு குற்றம் காணும் கொள்கை தள்ளுங்கள் 
என்ற அருமையான பண்பை புகட்டினார்.

இன்னொருவரோ நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்று  துவங்கி வள்ளல் ஆவதற்கும் தலைவன் ஆவதற்குண்டான வழி முறைகளை கற்பித்தார்.

மனைவியின் தீண்டாமையை எடுத்துக்கொண்டால் , 

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே” 

என்று சவாலை சமாளித்தார் கவியரசு.

வாலிபக் கவிஞரோ 

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர எண்ணம் இல்லையோ” 

என்று மௌனமாய் ராகம் பாடினார்.

சொல்ல வந்த செய்தி ஒன்றே ஆயினும் பயன் படுத்திய சொற்கள் கொண்டு பார்க்கையில்,இரு மேதைகளுக்கும் உள்ள வேறுபாடு எனக்கு தெரியவில்லை.

நாம் அனைவருமே என்றும் ஏங்கும் பள்ளிப் பருவத்தை 

பசுமை நிறைந்த நினைவுகளே” 

என்று கண்ணதாசன் ஏங்க ,

வாலியோ 

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” 

என்று ஏங்க வைத்தார்.

MGR அவர்களின் வெற்றிக்குப் பின்னால் இருவரும் துணை நின்றனர் என்றாலும்வாலி , MGR அவர்களுக்குக்காக எழுதியது , பின்னாளில் மிக பொருந்தியது.

நான் அரசன் என்றால் அது நடந்து விட்டால் என்றே வாலி 
"எங்க வீட்டு பிள்ளையில்" எழுதினார்.

பாடல் பதிவின் போது தான் தற்போது நாம் கேட்கும் வரிகள் மாற்றப் பட்டன.

புதிய வானம் புதிய பூமி என்று துவங்கும் பாடலில் 

உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

என்று அப்போது MGR அப்போது இருந்த கட்சியின் சின்னத்தை பற்றி எழுத,
இப்பாடலும் ஒலிப் பதிவின் போது 

புதிய சூரியனின் பார்வையிலே என்று வரிகள் மாற்றப் பட்டன.

கண்ணதாசனுக்கும் இது போன்ற அனுபவம் உண்டு .

களத்தூர் கண்ணம்மா திரைபடத்தில் கண்ணதாசன் 

அம்மையும் நீஅப்பனும் நீ என்றே பாடலை எழுதி இருந்தார்.

பாடல் பதிவின் போது தான் 

அம்மாவும் நீயேஅப்பாவும் நீயே என்று வரிகள் மாற்றப் பட்டன.

சுவை எல்லாம் தேன் சிந்தும் சுவையாகுமா என்றே எழுதியிருந்தார்,  

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா என்று துவங்கும் பாடலில் கவிஞர் அவர்கள்.

படக்குழுவினருடன் விவாதத்தில் ஈடுபாடிருந்த போதுஒருவர் தேன் என்ற சொல்லிற்கு பதிலாய் இதழ் என்ற சொல்லை பரிந்துரைக்க பெருந்தன்மையாய் கவியரசு ஏற்றுக்கொண்டு வரிகளை மாற்றினார்.

(மேற்கூறியவை செவி வழி செய்திகள்)

MGR பற்றி பேசிக்கொண்டிருந்தவனை பாடல் வரிகளின் மாற்றங்கள் எங்கோ கொண்டு சென்று விட்டன.

திரும்பி வருவோம்.

இரு கவிஞர்களுமே MGR க்கு நன்றி கூறி பாடல் எழுதி உள்ளார்கள்

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா என்று கவியரசு MGR -ன் புகழ் பாட ,

வாலிப கவிஞரோ

என்னைப் பாட வைத்தவன் ஒருவன் , என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
என்று நன்றி நவின்றார்.

கவியரசு ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று தம்மை பாட

வாலிப கவிஞரோ என்னை தெரியுமா என்றார்.

இறைவனை பற்றிய பாடல்களை எடுத்துக் கொண்டால்ஒருவர்
"இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான் " கேட்ட கேள்விக்கு 
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே"
மற்றொருவர் விடையளித்தார்.
   
காதலியை பார்த்து ஒருவர் 

மெல்லப் போ , மெல்லப் போ என்று கெஞ்ச 

இன்னொருவர் ஆஹா மெல்ல நட , மெல்ல நட என குழைந்தார்..

இவ்வளவு விடயங்கள் பேசிய இரு மேதைகளும் மனைவியின் பெருமை பாடாதிருப்பார்களா ?

முத்தையாவிற்கு ஒரு சம்சாரம் என்பது வீணை என்றால் ,
ரங்கராஜனுக்கு ஒரு கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே  பாடல்.

கமலஹாசனின் முதல் படத்தில் கண்ணதாசன் இணைந்ததும்,  அந்த கவியரசுவின் இறுதி பாடலுக்கு கமலஹாசனே வாயசைக்க நேரிட்டதும் இறைவனின் சித்தமோ என்னவோ.

கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாடல் கேட்டு , 
அதன் மூலம் உத்வேகம் பெற்று பேரும் புகழும் 
பெற துவங்கிய காலத்தில்,வாலியிடம் நிருபர்கள் கேட்டார்கள்.

“ நீங்கள் கண்ணதாசனை போலவே காப்பி அடித்து எழுதுகிறீர்களே ..? “

தங்கத்தோடு தானே ஒப்பிடுகிறீர்கள் , தகரத்தோடு அல்லவே 

என்ற பதிலே வாலியின் தரம் சொல்லும்.

அப்படி இருந்தும் வாலி அவர்கள் கவியரசுவை போல் புகழ் பெறவில்லையோ என்ற ஏக்கம் எனக்கு உண்டு.

என்ன தான் பெரும் தமிழ் புலமை பெற்றிருந்தாலும் கண்ணதாசன் ஓர் இலக்கப் பிழை செய்து விட்டார் என்றே தோன்றுகிறது , நிழல் நிஜமாகிறது படத்தில்.

இது எழுத்து பிழையா அல்லது பாடல் பதிவின் போது ஏற்பட்ட பிழையா என தெரியவில்லை.
அறிந்தவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ள ஆவலாய் இருக்கிறேன்

ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் என்று எழுதி விட்டாரே .. ?

கவிஞரின் ஹலோ ஹலோ சுகமா , ஆமா நீங்க நலமா என்று "மா" வில் முடியும் பாடல் போன்றோ  ,

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன் என்று "தேன்" ல் முடியும் பாடல் போன்றோ வாலி அவர்கள் எழுதியதாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஆனால் பட்டினத்தில் பிரவேசம் புகுந்து 
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா 
என்று "லா" வில் முடியும் கவியரசுவின் பாடலுக்கு நிகராக ,

வாலி அவர்களோ மௌனமே சம்மதமாய்  
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா 
என்று இவரும் "லா" வில் முடித்தார்.

ஆகா இந்த மாபெரும் பாடல் ஆசிரியர்கள் இருவரும் தங்கள் திரை பட பாடல்கள் மூலமாக என்றும் நம்மை தாலாட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

புதன், 2 மே, 2018

இக்கரைக்கு அக்கரை பச்சை


நாம் எல்லாம் மிக சாதாரணமாக எண்ணி விடுவோம் காவல் துறை என்றால் அட்டூழியம் அராஜகம் கையூட்டு என்று.

ஆனால் அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் மறு பக்கம் உண்டு.

ஒரு சில கருப்பு ஆடுகளை கொண்டு மற்றவரை தவறாக எண்ணி விட முடியாது.

24 மணி நேரம் போதவில்லை என்று அடுத்த நாளிலிருந்து கடன் வாங்கி செய்யும் மக்கள் பணி அது.

பிரதமாரோ மாநில முதல் அமைச்சரோ வரும் போது மணி கணக்கில் வெயிலோ மழையோ நின்றே ஆக வேண்டிய கட்டாயம் சாலையில்பல நேரங்களில் குடும்பங்களை மறந்தும் கூட.

பல சிரமங்களுக்கிடையிலும் (தமிழ்) நாட்டை காக்கும் காவல் துறையின் மீது எனக்கு எப்பொழுதுமே மதிப்பும், மரியாதையும் உண்டு என்பது மட்டுமல்ல, ஒரு சில உயர் (தர) அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பும் உண்டு.

அவர்களில் ஒருவரை இப்பதிவில் காண்போம் வாருங்கள்.

கிருஷ்ணமூர்த்தி  - இந்த பெயருக்கு எங்கள் கல்லூரி வட்டாரத்தில் ஒரு தனி இடம் உண்டு.


                                              நண்பர் கிட்டுவுடன்

இவர் என்னுடன் ஒன்றாய் கல்லூரியில் இயற்பியல் இளங்கலை பயின்றவர்.

உதகமண்டலத்தை சேர்ந்தவர் ஏன் தஞ்சை பூண்டி கல்லுரி வந்து படிக்க வேண்டும் என்ற வினாவிற்கு , இவர் இன்றும் விடை தேடித் கொண்டிருக்கிறார்.

நானும் அவரும் வெவ்வேறு நிறுவனங்களில் , பெங்களூரில் பணி புரிந்த கொண்டிருந்த போது தான் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது, கல்லுரி நாட்களை விட.

தொலைபேசியில் மட்டுமே விடுத்த அழைப்பை நேரிடையான அழைப்பாய் ஏற்று , என் திருமணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த கண்ணியவானின் நட்பிற்கு நான் என்றும் நன்றி உடையவன் .

பெங்களூரில் பணி புரிந்த காலத்திலேயே காவல் துறை உதவி ஆய்வாளர் பதவிக்காக முயன்று அதில் வெற்றியும் பெற்றார் 1996ல்.

பயிற்சி காலத்தில் சிறந்த மாணவராக தங்க பதக்கம் பெற்ற உதவி ஆய்வாளர்களில் இவரும் ஒருவர்.



2004 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகத்தை, ஏன் இந்தியாவையே உலுக்கிய மிகவும் பரபரப்பான வழக்கில் ஈடுபட்டு தமது தனி திறமையை காட்டியமைக்காக மேலதிகாரிகளின் பெரும் மதிப்பை பெற்றார்.

இடையினிலே அவர் மத்திய அரசின்  (Narcotics Control Board) போதை பொருள் தடுப்பு பிரிவிலும் சில  காலம் பணி புரிந்தார்.

காவல் துறையிலேயே மிகவும் ஆபத்தான இப்பணிக்கு , தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப் பட்ட வெகு சிலரில், இவரும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு.

திரைப்படங்களில் வருவது போல் மாறு வேடங்கள் புனைந்து இவர் நிகழ்த்திய அருஞ்செயல்கள் ஒன்றோ இரண்டோ அல்ல.

2001 இல் கடலூர் மாவட்டத்தில் அழகி திரை படத்தின் திருட்டு VCD குற்றத்தினை பெருமளவு குறைத்தமைக்காக இயக்குனர் தங்கர் பச்சானின் பெரும் மதிப்பை பெற்று அவரின் நட்புக்கு பாத்திரமானார்.

இதன் மூலமாக திரைப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் சட்டத்தை மதித்து அன்பாய் மறுத்தார் வந்த வாய்ப்பை.

10 வருடங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூரில் நடந்த புகழ் பெற்ற வழக்கில் மிகப் பெரும் பங்கு வகித்து அரசிடம் இவர் பெற்ற பாராட்டு பத்திரம், இன்றும் வாசிக்கப் பட்டு கொண்டிருக்கிறது.



தனது பணியில் மட்டுமல்ல , கலை மீதும் மிகுந்த பற்று கொண்ட இவர்,   வருடங்களுக்கு முன்பு இவரது இரு மகள்களுக்கும் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்வித்தார்.

அப்போதைய இசை கல்லூரியின் துணை வேந்தராய் இருந்த திருமதி. வீணை காயத்ரி அவர்களும், இயக்குனர் தங்கர் பச்சானும் அவர்களும் தலைமை வகித்தார்கள்.

சகோதரிகளின் நடனம் மிக பிரமாதமாய் இருந்தது. அப்படி ஓர் ஒத்திசைவை பாராட்டாத ஆட்கள் இல்லை.

கடலூர் மாவட்டத்தில் துணை கண்காணிப்பாளராக பணியில் இருந்த இவரை, சில மாதங்களுக்கு முன் அரசு தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உதவி ஆணையாளராக பணி மாற்றம் செய்தது.


காவல் துறை ஆணையர் திரு. விசுவநாதன் அவர்களுடன் 

யாக்கையை பராபரிப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், சென்ற மாதம் கொரட்டூர் அருகே நடந்த ஆணழகன் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

விருந்தினராய் சென்ற இவர் ,திடீர் மாப்பிள்ளை கதையாய் எதிர் பாராத போது மேடையேற்றப் பட்டு முதல் பரிசு வென்று வந்தது ஒரு தனி கதையே.

                                         ஆணழகன் போட்டியில்




இவர் தனது கடமையை மட்டும் நேர்மையான முறையில் செய்யவில்லை, பல ஏழை குழந்தைகள் கல்வி பயிலவும் உதவுகிறார் என்பதற்கு சஞ்சிகைகளிலும் மற்றும் முகநூலில் வெளி வரும் பதிவுகளே சாட்சி.





எப்பேர்ப்பட்ட மனிதர் என்றாலும் குறை வேண்டுமல்லவா .

பணியின் மீது உள்ள அதீத ஈடுபாட்டின் காரணமாக ஒரு நாளின் பெரும் பகுதியை கடமைக்காகவே செலவிடுகிறார்.

8 ல்  1 பகுதி நேரத்தை இவரால் குடும்பத்திற்காக செலவிட முடிகிறது. என்பதே அது.

இவரது பணி எப்போதும் போல நல்ல முறையில் தொடர , வாழ்த்த தகுதி இல்லை. ஆனால் இறைவனை வேண்டுகிறேன்