வெள்ளி, 27 ஏப்ரல், 2018

கலாமின் இந்த சீடருக்கு வானமே எல்லை


பழகு தமிழில் சொன்னால் அதிர்ஷ்டம்  , தூய தமிழில் அது நல்லூழ்.
இந்த ஒன்றை பெறுவது என்பது அவ்வளவு எளிது அல்ல.

மேதகு கலாம் அவர்களின் அறிமுகமும் , அன்பும் பெற்ற கொடுப்பினை , அதற்கு முன் இயக்குனர் சிகரம் திரு பாலசந்தர் அவர்களின் படமான “வானமே எல்லை” இல் அறிமுகம்.

கல்வித் துறையிலும் , கலைத் துறையிலும் மோதிரக் கைகளால் குட்டுப் பட்ட இந்த பேறு வேறு யாருக்கும் அல்ல நண்பர்களே.

இந்த பெருமைக்கு உரித்தானவர் திரைப்பட நடிகர் திரு. தாமு அவர்கள் தான்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் மகளுக்கு பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கிய எனது அருமை நண்பர் திரு.வேணுகோபால் அவர்களிடம் கூடவே ஒரு சிறப்பு விருந்தினரையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

சற்றும் தயங்காமல் 2 – 3 பிரபலங்களின் பெயரை அவர் சொல்ல, நாங்கள் ஒரு மனதாய் தேர்ந்தெடுத்தது நடிகர் திரு. தாமு அவர்களை தான்.

முதல் சந்திப்பிலேயே கவர்ந்தார், தமது பரதக் கலையின் ஆழ்ந்த ஞானத்தின் மூலமும் தமது விருந்தோம்பலின் மூலமும்.


                                       தாமு அவர்களுடன் நான்

அரங்கேற்ற தேதியை சொன்ன போது மறுக்காமல் ஒப்புக் கொண்டார் , மேலும் விழாவில் பங்கேற்க எந்த ஒரு நிபந்தனையையும் அவர் வைக்கவில்லை. 

அரங்கேற்றம் முடிந்த பின் அவர் பேச மேடைக்கு வந்த போது ஒரு சிறு அன்பளிப்பையும் , பழக் கூடையும் அன்பாய் அளித்தோம்.

பழத்தை பெற வைத்து என்னை பழம் பெ(ரு)றும் நடிகராக்கி விட்டீர்களே என்று நகைச்சுவையாய் பேசினார்.

பரத முனிவரை கொண்டே இந்த பரத கலை இப்பெயர் பெற்றது என்று தமது பேச்சை மிக அருமையாய் துவங்கினார்.

பாவம் ராகம் தாளம் ஆகிய மூன்றும் ஒருங்கே இணைந்த மாபெரும்  கலை தான் பரதம்.  

ஜாதி , மதம் மொழி போன்ற தடை கள் இல்லாத இந்த கலை ,ஒரு தெய்வீக அனுபவத்தை பார்ப்பவர்களுக்கும் , வழங்குபவருக்கும் கொடுப்பது தான் இதன் சிறப்பு அம்சம்  எனவும் ,  ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பாரத கலைஞன் இருந்தே ஆக வேண்டும் என்றும் கூறி அரங்கில் நிறைந்து இருந்தோரை கலைக்கு பக்தர்களாக்கினார்.

பல குரல் மன்னனான இவர் பெட்டை கோழி எப்படி கூவும், சேவல் எப்படி கூவும் என்று இரண்டிற்குமான வேறு பாட்டை செய்து காட்டுவது மட்டுமல்ல , ரஜினி , கமல் போன்றவர்களின் குரலில் பேசும் போது அந்த நடிகர்களை நம் கண் முன்னே நிறுத்துவது இவரின் தனித் திறமை.


திரு கலாம் அவர்களுடன் தாமுவும் உடன் பொன்ராஜும்

ஹெலிகாப்டர் போன்று ஓசை எழுப்பினால் அதன் மூல ஒளி , அதை எழுப்பும் போது உடல் உறுப்புக்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிவியல் ரீதியாகவும் மேடையில் சொல்லி விடுவார்.

இக்கலையில் இவர் தன் குருவாய் கருதுவது பாண்டிச்சேரியை சேர்ந்த திரு. சந்திரமோகன் என்றாலும் இவர் இளம் வயதில் கற்க துவங்கியது தமது தாயாரிடமே.

மிமிக்கிரி கலைக்காகவும், சிறப்பு பேச்சாளர் மற்றும் கல்வி பயிற்சியாளர் என இது வரை 9800 முறைகள் மேடையேறியுள்ளார்.

இவருக்கு கலாம் அவர்கள் அறிமுகம் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வின் மூலம்.

2011 இல் கோவையில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாநாடு கலாம் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

ஒரு மணி நேரம் மிமிகிரி செய்வதற்காக அழைக்கப்பட்டிருந்த நடிகர் தாமு, கலாம் ஐயா நிகழ்ச்சிக்கு வர தாமதம் ஆனதால் சுமார் 3 மணி நேரம் மாணாக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.


விமானத்திலிருந்து இறங்கியவுடன் உதவியாளர் பொன்ராஜ் அவர்களை
கை பேசியில் அழைத்து அங்கு மேடையில் நடப்பனவற்றை கேட்பதற்கு எதுவாக தொடர்பிலேயே இருக்க சொன்னார் கலாம் அவர்கள்.

கலாம் அவர்களை ரசிக்க வந்த தாமுவின் மேடை பேச்சை, பல குரல் வித்தையை ரசித்த நம் முன்னாள் ஜனாதிபதி , தாமுவின் திறமையின் பால் ஈர்க்கப்பட்டு தம்முடனே சீடராக வைத்துக்கொண்டது இந்த நிகழ்ச்சிக்குப் பின் தான்.



கலாம் அவர்களின் பாதையில் பயணித்து, நண்பர் தாமு இது வரை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 20 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை இலக்காக கொண்டுள்ளார்.

சுருங்க சொன்னால் , அந்த பயிற்சி என்பது மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை கொண்ட முப்பரிமாணம்.

                                    
                              மாணவர்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் 

ஆசிரியர்கள் எப்படி ஒரு மாணவனின் மனதிற்குள் நுழைந்து எப்படி பள்ளி தேர்வில் வெற்றியாளனாகிறான் என்பதே இந்த இதன் நோக்கம்.

10 கட்டளைகள் மாணவர்களுக்கும், கூடுதலாக 1 ஒன்று என மொத்தம் 11
கட்டளைகள் ஆசிரியர்களுக்கும் இவர் பயிற்றுவிக்கிறார்.

தற்போது மாணவர் முன்னேற்றத்திற்கான சஞ்சிகை ஒன்றை "கசடறக் கற்க' எனும் பெயரில் நடத்தி வருகிறார்.  விருப்பமுள்ளவர்கள் இவரை  8144447811 எனும் அலை பேசியில் அழைத்து சந்தாதாரர் ஆகலாம்.



கலாம் அவர்களின் 2020 கனவு என்ன என்பதை தாமு அவர்களை தவிர வேறு யார் தெளிவாக கூற முடியும். அதையும் அவரிடம் கேட்டு விட்டேன்.

தனி நபர் வருமானம் சராசரியாக (ஒரு நாளைக்கு) 1  லட்சமாக உயரவேண்டும் என்பதே கலாம் அவர்களின் முதல் கனவு.

இதை ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த கனவாக கருதி உழைப்பானேயானால் 2020 சாத்தியமே.  

மேலும் நண்பர் தாமு அவர்கள் ,கலாம் அவர்களை பற்றி கூறியதை பெட்டி செய்தியாய்  குறிப்பிட விரும்புகிறேன்.

கலாம் அவர்கள் ஒரு மெய்ஞானி . உடலை பேணுவதில் பெரும் அக்கறை கொண்டவர்.


உணவு உண்பதற்கு முன், சுமார் 5 நிமிடங்கள் கை கழுவும் பழக்கம் கொண்டவர்.

EAT - என்பதற்கு கலாம் அவர்களின் விளக்கம்: Experience All Taste என்பதே. அந்த அளவிற்கு அவர் உணவை ரசித்து உண்பவர்.

கலாம் அவர்கள் தம் அன்பிற்கு பாத்திரமானவர்களை Funny Guys என்றே அழைப்பார். தாமுவும் ,பொன்ராஜும் இதற்கு விதி விலக்கு அல்ல.

இயக்குனரும் இவரது நண்பருமான வசந்த் அவர்களின் படமான "கேளடி கண்மணி" பட 100 வது நாள் விழாவில் இவரது செய்த மிமிக்கிரி கலையில் வியந்தே, இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் தாமு அவர்களுக்கு "வானமே எல்லை" படத்தில் வாய்ப்பு அளித்தார்.

சுகந்தி எனும் இனிய வாழ்க்கை துணையை கொண்ட இவருக்கு இறைவன் அளித்ததோ கல்கி பிரியா மற்றும் ஜீவ பிரியா எனும் இரட்டை லட்சுமிகளை.

பலகுரல் மூலமாக வாய்ப்பு பெற்று கலை துறையிலும் , கல்வி துறையிலும் சேவை செய்து வரும் இந்த அருமையான மனிதரை பற்றி பல குரல்கள் தமிழமெங்கும் அசை போடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

8 கருத்துகள்:

  1. வியப்பான செய்திகள் தாமு விந்தை மனிதரே... வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  2. நடிகர் தாமு பற்றிய அறியாத பல செய்திகளைத் தங்களால் அறிந்து கொண்டேன்
    தாமு போற்றுதலுக்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  3. பார்க்க எளிய மனிதராக காணப்படும் இவரின் பல முகங்களை உன்னால் அறிய முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் டா. என்னுடன் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் அளவிற்கு அடக்கமானவர்.

      நீக்கு
  4. திரு.தாமு அவர்களைப் பற்றிய பல சுவையான செய்திகளை தங்கள் பதிவில் தெரிந்துகொண்டேன் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தாமுவை தன்னுடன் வைத்துக் கொண்டது பற்றிய செய்தி வியப்பளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு