செவ்வாய், 20 மார்ச், 2018

ஓலையும் அதன் சுவடுகளும்

பொதுவாகவே எனக்கு வரலாற்றின் மீது மாபெரும் ஈர்ப்பு உண்டு.

வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.
(எப்போது நடக்குமோ தெரியவில்லை)

வரலாறு (வரலாறுகள் எனும் பன்மை சொல் உண்டா ?) இன்றி நாம் இல்லை.

நம் முன்னோர்களின் அருஞ் செயல்களைஇலக்கியங்களை என எத்தனையோ விஷயங்களை வெளி கொணர்வதில் கல் வெட்டுக்கள் மட்டும் அல்ல,ஓலை சுவடிகளும் பெரும் பங்கு வகிக்கின்றன.

அச்சுவடிகளை பாதுகாக்கும் முறைகளையும் அவற்றை பற்றிய சிறு தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இம்மாத துவக்கத்தில் ஒரு திருமண விழாவில் எனது  தந்தையின் நண்பர் முனைவர்  பெருமாள் அவர்களை  சந்திக்க  நேர்ந்தது.

அப்போது  தட்டிய  பொறி  நான் ஏன் ஓலை  சுவடிகளைப்  பற்றி  வலை  பூவில்  
எழுத  கூடாது  என்பது.

மண்டபத்திலேயே அவருடன் பேசி  சில விவரங்களை சேகரித்தேன்.

சற்றும்  தயங்காமல்  விவரங்களை  வாரி  வழங்கினார் .

துவங்கும்  முன்  இவரை  பற்றி ஒரு  சிறு  குறிப்பு.




பௌதீகம் இளங்கலையும் பின்னர் நூலகவியலில் முதுகலை பட்டமும் பெற்று கல்வி மீதான வேட்கை தீராமல் முனைவர் பட்டமும் பெற்ற 
திரு. பெருமாள் அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன் சத்திரம் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்.

தஞ்சை  சரஸ்வதி மஹால் நூலகத்தில் 1980 ல் பணியில் சேர்ந்து,  2012  ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார்.

தேசிய கலை பொருட்கள் பாதுகாப்பு ஆய்வகம்லக்னோபாண்டிச்சேரி ஆவண காப்பகம். ஜப்பான் தேசிய நூல்கள் காப்பகம்,லண்டனில் உள்ள  விக்டோரியா அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் சுவடி பாதுகாப்பிற்கான பயிற்சி பெற்றவர்.

“நூலக பயன்பாடும் பாதுகாப்பும்” “சுவடி பாதுகாப்பு வரலாறு” மற்றும்  “வாருங்கள் நம் நூலகத்தை பாதுகாப்போம்” ஆகிய நூல்களை எழுதியுள்ள இவர்நெதர்லாந்து லெய்டன் பல்கலைகழகத்தாலும்மலேசிய தமிழ் சங்கத்தாலும் பேச்சாளராய் அழைக்கப் பட்ட பெருமை கொண்டவர்.

தஞ்சையில் நூலக தகவல் அமைப்பின் செயலாளராய் பணியாற்றி போது தான்இவரது தலைமையில் முதன் முதலில் தலைமையின் கீழ்
“தஞ்சையின் சுற்றுலா வரை படம்” உருவாக்கப் பட்டது.

பழங்கால ஓலை சுவடிகளை காப்பதும்  இவரது முக்கிய பணி .
இவற்றில் சுவடி சேகரிப்பும் அடங்கும்.


சுவடி ஆராய்ச்சியில் திரு. பெருமாள் அவர்கள் மாணவர்களுடன் 

சுவடிகள் பற்றி இவர் கூறிய தகவல்கள் மிகவும் ஆர்வத்தை தூண்டுபவையாக இருந்தன.

வாருங்களேன் பாப்போம்.

ஓர் ஓலை சுவடி என்பது அதிக பட்சம் 500 ஆண்டுகள் வரையே  அழியாமல் இருக்கும்.



பழங்கால ஓலை சுவடியின் புகை படம் ஒன்று திரு பெருமாள் அவர்கள் என் வேண்டுகோளின்படி அனுப்பியது 

ஆகவே இப்போது ஒரு சுவடி 600 அல்லது 1000  ஆண்டுகள் பழமையானது
என்று இருக்குமானால் அது அச்சே அன்றி அசல் அல்ல.

தமிழில் நமக்கு கிடைத்த பழமையான சுவடிகள் என்றால் அது
     தொல்காப்பியம்  தான்.

தற்போது இருப்பவை அதன் பிரதிகளே.

நம் நாட்டில் இருக்கும் மிகப் பழமையான சுவடி எது என்றால் அவை 1428  ஆம் மற்றும் 1430  ஆம் ஆண்டுகளில்  நமக்கு கிடைத்த 
வேதங்கள்பற்றிய வட மொழி சுவடிகள்  தான்.

1428 ம் ஆண்டை சேர்ந்த அச்சுவடி சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம் ஆகும்.

1430 ம் ஆண்டை சேர்ந்த சுவடி தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ளதுதெலுகு மொழியில் உள்ளது.

ஆனால் உலகின் பழமையான சுவடி எங்கு உள்ளது என்று ஆராய்ந்தால் 
நமக்கு கிடைக்கும் விடை ஜெர்மனி நாடு.

ஆம் நண்பர்களே அச்சுவடிகள் இங்கிருந்து யுவான் சுவானங்கினால் எடுத்து செல்லப் பட்டிருக்கிறது சீனாவிற்கு.

சென்ற நூற்றாண்டில் ஆராய்ச்சிமேற்கொண்ட ஒரு ஜெர்மானியர் ஒரு குகையில் இந்த ஓலை சுவடியை கண்டெடுத்து ஜெர்மனி நாட்டிற்கு எடுத்து சென்று விட்டார்.

கிபி 2ம் நூற்றாண்டை சேர்ந்த இது சமசுகிருத மொழியில் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 4ம் நூற்றாண்டை சேர்ந்த சுவடி தற்போது ஜப்பான் நாட்டிலும் , 7ம் நூற்றாண்டை சேர்ந்த சுவடி நேபாள நாட்டிலும் உள்ளன.

சுவடிகளின் முதல் ஓலையிலும் கடைசி ஓலையிலும் காலங்கள் குறிப்பிட பட்டாலும்ஒரு மொழியின் எழுத்து வடிவம் கொண்டே பெரும்பாலும் அதன் காலம் கணிக்கபடுகிறது.

நம் நாட்டில் இருப்பது 11 ம் நூற்றாண்டிற்கு பிறகு தான்அதுவும் தமிழ் நாட்டில் சரஸ்வதி மகாலில் இருப்பது என்பது பெருமையே.

அவை சங்க இலக்கியங்கள் என்பது ஒரு கூடுதல் தகவல்.


அனுப்பிய மற்றொரு ஓலை சுவடியின் புகை படம் 

ஓலை சுவடி என்பது 4 முக்கிய காரணங்களான ஈரப்பதம்,தூசி,அதிக வெளிச்சம் மற்றும் வெப்பம் ஆகியவற்றால் அழிந்து போகிறது.

மழைக் காலங்களில் ஈரப் பதத்தை உறிஞ்சி வெயில் காலத்தில் அதனை வெளியிடுவதால் சுருங்கி விரிந்து சுவடிகள் வீணாகின்றன.

ஈரமான அந்த சுவடிகளை பல பூச்சிகள்  சாப்பிட வரும். அப்போது முட்டை இட்டு வெளி வரும் புழுக்களே சுவடிகளின் அழிவிற்கு காரணம்.

இதை தவிர்க்க நம் முன்னோர்கள் அக்காலத்தில் அடுப்படிகளில் பரண் வைத்து அதன் மீது சுவடிகளை வைத்தனர்புகை படிவதினால் பாதிப்பு குறையும் என்பதனால்.

அந்த சுவடிகளை வருடம்  இரு முறை எடுத்து தூசு தட்டி சுத்தம் செய்து மீண்டும் பரண் மீதே முன்னோர்கள் வைத்து வந்தனர்,  மழை காலம் முன்னரும் (சரஸ்வதி  பூஜை) பின்னரும்  (ஆடி மாதம்).

மழை காலத்திற்கு பின்னர் சிதிலம் அடைந்த சுவடிகளை முன்னோர்கள் நெருப்பில் (பிரதி எடுத்த பின்) இடும் பழக்கமே போகி பண்டிகை என்றானது என அவர் சொன்ன போது தான் போகிப் பண்டிகையின் காரணம் அறிந்து கொண்டேன்.

ஒரு சிலர் போகியை மூடத்தனம் என்றெண்ணி பிரதி எடுக்காமலே நிறைய சுவடிகளை நெருப்பில் இட்டதன் காரணத்தால் நாம் பல தகவல்களை இழந்துவிட்டோம் என்று சொன்ன அவர் குரலில் வருத்தமே மேலோங்கி இருந்தது என்றால் அது மிகை இல்லை.

நம் முன்னோர்கள் மர பெட்டிகளில் சுவடிகளை சிவப்பு துணி கொண்டு சுற்றி வைத்து பாதுகாத்தனர். சிவப்பு நிற துணி உமிழும் கதிர் பூச்சிகளுக்கு எரிச்சலை கொடுக்கும் என்பதனால் பூசிகள் அண்டாது என்பதே காரணம்.

வசம்பு மற்றும் நிழலில் காய வைத்த வேப்பிலை கொண்டும் இவற்றை பாதுகாக்கலாம்.

சுமார் 15 – 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒளிப் பட நகல்களாய் பிரதிகள் எடுக்கப் பட்ட இந்த சுவடிகள் தற்போது இணையதளத்தில் மின்னணுவியல் வடிவத்தில் ஏற்றப்பட்டு தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன என்பது நமக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியே.

17 கருத்துகள்:

  1. அரிய தகவல்கள்தான் நண்பரே...
    நான் எப்பொழுதுமே பழமையை நேசிப்பவன்.

    இன்றைய தலைமுறையினருக்கு இதில் ஆர்வம் இருப்பதில்லை.

    நான் எனது அனுபவத்தில் பெற்ற சில பொருட்களை சுமார் 40 வருடங்களாக வைத்து இருக்கிறேன் இது எனது குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. எனது மறைவுக்குப் பிறகு இவை குப்பைத் தொட்டிகளுக்கே போகும்.

    ஒரு நாட்டின் பொக்கிஷங்களை காத்து வருவது சாதாரண விடயமில்லை. இதற்கு முதலில் மனம் வேண்டும்.

    போகியின் பின்புலம் அறிந்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கும் குறிப்பாக தொலைபேசி அழைப்பிற்கும்.

      நீக்கு
  2. வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு நண்பரே. நானும் உங்களைப் போன்று வைத்தீசுரன் கோயில் ஏடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். கைபேசி: 8428672556. srrinath@yahoo.com. srinath.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே .நான் சரித்திரத்தில் ஆர்வமுடையவன் , தங்களை போல் ஆராய்ச்சியாளர் அல்ல. விரைவில் உங்களை அழைக்கிறேன்.

      நீக்கு
  3. மிக்க நன்றி குமார். அருமையான தகவல். நமது பொக்கிஷம் நமக்குத் தெரியாமல் போய்விட்டது. வெளிநாட்டவர்கள் நமது ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்து பயன் அடைந்துள்ளார்கள். நமது விதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சுந்தர். உங்கள் கருத்தின் மூலமே நம் இழப்பின் வேதனை புரிகிறது.

      நீக்கு
  4. அருமை
    அறியாத தகவல்
    அரிய தகவல்
    இது
    நாமெல்லாருக்கும்
    சென்றடைய விழைகிறேன்

    பதிலளிநீக்கு
  5. மேனாள் சரஸ்வதி மகால் நூலகத்தின் நூலகர் மற்றும் காப்பாளர் திரு. பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்ட ஓலைச் சுவடிகள் பற்றிய கருத்துகள் ஒவ்வொன்றும் எங்களுக்குப் புதிய செய்திகள் மிகப்பயனுள்ள தகவலை முயன்று பெற்று பதிவிட்டமைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா.என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்.
      நான் வெறும் அம்பு தான். எய்தவர் திரு. பெருமாள் அவர்களே.

      நீக்கு
  6. ஐயா பெருமாள் அவர்களை நான் அறிவேன்.
    அமைதியானவர், ஆர்ப்பாட்டம் சிறிதும் இல்லாதவர், தனது துறையில் உச்சம் தொட்டவர்
    போற்றுதலுக்கு உரியவர்
    போற்றுவோம்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. ஆம் நண்பரே. மிகவும் அமைதியானவர். அவரை போன்றோர் உங்களுக்கு தெரியாவிடில் தான் அது ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  8. கம்பம் அகாடமி அக்குபங்ச்சர் நடத்திய தொல் தமிழ் எழுத்து பயிற்சியில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. பயிற்சியின்போது ஓலைச்சுவடிகளைப் பார்க்கவும் அதைப்பற்றிய தகவல்களும் அறியமுடிந்தது..இந்த பதிவு மேலும் ஓலைச்சுவடிகளைப் பற்றி அறிய முடிந்தது..தோழருக்கு வாழ்த்துக்கள்..தங்கள் பணி தொடரட்டும்..

    பதிலளிநீக்கு