புதன், 7 மார்ச், 2018

உயர்ந்த மனிதர்


வலைப் பூவின் இந்த பகுதிக்கு செல்லுமுன் ஒரு நன்றி கூற விழைகிறேன்.

2017 ஜூன் மாத இறுதியில் ஒரு சனிக் கிழமை மாலையில் சுமார் அரை மணி நேரம் நான், சிறு குழந்தைகளுக்கும் மிகுந்த மரியாதை தந்து பழகும் இனிய நண்பர் திரு. கரந்தை ஜெயகுமார் அவர்களுடன் வலைப் பூவில் எழுதுவதை பற்றி பேசிக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த ஊக்கமே ஏதேனும் ஒன்றை வலை பூவில் என்னை எழுத வைத்தது. 

அப்படி எழுத துவங்கி முதலில் என பாட்டனாருக்கு அஞ்சலியும் தற்போது என் சித்தப்பாவிற்கு ஒரு நன்றியையும் செலுத்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த என் வலைபூ ஆசான் திரு. ஜெயகுமார் அவர்களுக்கு நான் என்றும் நன்றி உடையவன்.



வாருங்கள் நண்பர்களே, எனக்கு எல்லாமுமாய் இருந்து உதவிவரும், ஒரு மாபெரும் மனிதரைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன்.

 “எந்நன்றி  கொன்றார்க்கும்  உய்வுண்டாம்  உய்வில்லை
செய்ந்நன்றி  கொன்ற  மகற்கு”    

மேற் கூறிய இந்த குறளிற்கு பொறுத்தமாய் என் வாழ் நாளில் நான் ஒருவரை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டுமானால் அவர், திரு. அருண் தியாகராஜன் அவர்கள்.

இந்த பெயரை கேட்டாலே எனக்கு மகிழ்ச்சி , பரவசம் ஏற்படும் கூடவே என்றும் மாறா நன்றி உணர்ச்சியும்.

இவர் எனது தந்தையின் ஒன்று விட்ட சகோதரர்.

எனது பெரிய பாட்டனார் திரு. தியாகராஜன் பெரும் அறிவாளி என தஞ்சை கரந்தையில் பெயர் பெற்றவர்.

1920 – களில் இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரில் சென்று படித்தார். திரும்பி பாரதம் வந்து , FLAKT எனும் நிறுவனத்தில் பெரிய பதவியில் சேர்ந்தார்.

இவர் தனது மகனை 1960களில் சுவீடன் நாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தார், பொறியியல் இளங்கலையும், முதுகலையும்.

அந்நாட்டு மொழியே தெரியாமல் , சென்ற சில மாதங்களிலேயே அந்த மொழி கற்று படிப்பில் சிறந்து விளங்க தொடங்கினார் எனது சித்தப்பா திரு அருண் அவர்கள்.

பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைகழகத்திலும் சென்று சிறிது காலம் படித்தார் மேலாண்மையை.

படித்து முடித்து பாரதம் வந்து, அதே FLAKT நிறுவனத்தில் பொது மேலாளராய் 1968 – இல் பணியில் சேர்ந்த அவர் சுமார் 9 வருடங்களுக்குள்ளேயே நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார், கல்கத்தாவில்.

80 களின் துவக்கத்தில் பெங்களூருக்கு பணி மாற்றம் பெற்று அங்கேயே தற்போது வாழ்ந்து வரும் அந்த பெருமகனார் தாம் நிர்வாக இயக்குனராக பதவி வகித்த ABB என்ற நிறுவனத்திலிருந்து பதவி விலகி, HP (Hewlett Packard) நிறுவனத்தில் இணைந்தார் இந்திய பகுதியின் அதிபராக. 

இடையே WIPRO-விலும் அவர் சுமார் 2 ஆண்டு காலம் பணி புரிந்தார்.
இதன் காரணமாய் WIPRO வின் திரு. பிரேம்ஜி அவர்களுக்கு நெருங்கிய நண்பராகவும் ஆனார்.

மனித வடிவில் இந்த தெய்வம் எங்கள் குடும்பதினருக்கு குறிப்பாக எனக்கு செய்த / செய்து வரும் உதவிகள் கணக்கில் அடங்காது.


                              சித்தப்பா திரு. அருண் தியாகராஜன் 

கலியுகத்தில் கர்ணனாய் மறைந்த எனது பாட்டனாருக்கு அடுத்த படியாக என கண் முன்னே நான் இவரை தான் கண்டு வருகிறேன்.

நான் 10ஆம் வகுப்பு படித்துகொண்டு இருக்கும் போதே, தஞ்சையில் இருந்த தமது இல்லத்தை எனக்கு அன்பளிப்பாய் கொடுத்தவர்.

நான் கல்லூரி படிப்பை முடித்த சுமார் 1.5 ஆண்டு காலத்திற்கு பின் ABB நிறுவனத்தில் எனக்கு முதன் முதலில் பணி கிடைக்க பெரும் உதவி செய்தவர் அவர்.  

அதன் பிறகு நான் அமெரிக்கா சென்று திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டிருந்த போது HP நிறுவனத்திலும் நேர்முக தேர்வினை ஏற்பாடு செய்து பணி வாங்கிக் கொடுத்தார் மீண்டும்.

இவரின் அறிவு மிகக் கூர்மையானது என, இவரது நட்பு வட்டராம் கூற கண்டிருக்கிறேன் , பல சமயங்கள்  நேரிலும்.

அமிதாப் பச்சன் நடத்தி வந்த “கோடீஸ்வரன்” நிகழ்ச்சிக்கு இவர் வந்தால் எந்த உதவியும் இல்லாமலே மிக எளிதாய் பரிசு 10 கோடியாக இருந்தாலும் பெற்று வரக் கூடிய ஆழ்ந்த உலக ஞானம் இவருக்கு உண்டு.

தமிழ், ஹிந்தி , ஸ்வீடிஷ் , பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளிலும் வல்லமை பெற்றவர்.

இவர் கூறி தான் நான் உறுதி படுத்திக் கொண்டேன் – தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையானது என்பதை.

வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், தலை கணம் சிறிதும் இல்லாதவர்.

உங்களைப் பற்றி வலைப் பூவில் எழுத ஆசை என்ற போது , வேறு ஏதாவது உருப்படியாய் எழுது என்று அன்பாய் மறுத்தவரை வற்புறுத்தி சம்மதம் வாங்கினேன் என்றால் அது மிகை இல்லை.

லண்டன் பிசினஸ் ஸ்கூல் – ஆலும், இந்தியாவின் பெரும் கல்வி நிறுவனங்களினாலும் பகுதி நேர பேச்சாளராக அழைக்கப்பட்ட பெருமை கொண்டவர் என்று சொல்வதை விட , இவரை அழைத்து பெருமை தேடிக் கொண்டன என்பதே என் கருத்து.

                   
சித்தப்பா அமெரிக்க முன்னாள் அதிபர் திரு. ஜார்ஜ் புஷ்ஷுடன்

நான் பெங்களூரில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்தில் , என் குடும்பத்தினருடன் அவர் இல்லம் சென்று, அவரை சந்தித்து வருவதுண்டு.

அவரது வீட்டில் இருந்து புறப்படும் பொழுது, போர்டிகோ வரை வந்து எங்களை வழி அனுப்பும் உயர் குணம் உடையவர்.

இந்த மனிதருடன் தொலை பேசியில் பேசும் போது எல்லாம் அவரிடம் நான் கொண்ட மரியாதை நிமித்தமாக நின்று கொண்டே தான் பேசி வந்தேன் நீண்ட வருடங்களாய்.

இந்த பழக்கத்தை சில வருடங்களுக்கு முன்பு தான் மாற்றிக் கொண்டேன்.

எனது தங்கையின் திருமணம் பற்றிய தகவலை அவருடன் பகிர்ந்து கொண்ட  போது, முதலில் திருமண தேதியை சொல், அழைப்பிதழ் தேவையில்லை என சம்பிரதாயங்களை உடைத்தெறிந்தவர்.

இன்று ஓய்வு பெற்ற பின் , பல நிறுவனங்களில் இயக்குனர் குழுவில் இணைந்து பகுதி நேர பணி ஆற்றி வருகிறார்.

இந்த ஆண்டு ஜனவரியில் தன்னுடன் சுவீடன் நாட்டில் தன்னுடன் ஒன்றாய் படித்த நண்பர்களை அழைத்து கர்நாடகா மாநிலத்தை வலம் வந்தார்.

இன்று சமூக வலை தளங்களின் உதவி கொண்டு மாணவர்கள் ஒன்றாய் இணைவது ஓர் ஆச்சர்யமான செய்தி இல்லை எனினும், தொலை தொடர்பு வசதிகள் மிகவும் குறைந்த 60களின்  மத்தியிலிருந்து இந்த நண்பர் கூட்டம் இணைந்திருப்பது அற்புதம் தான்.

சுமார் 90 வருடங்கள் பழமையான எங்கள் இல்லத்தை நான் இடித்து விட்டு கட்ட வேண்டும் என அவருடன் நான் பேசிக் கொண்டிருந்த போது, தானாய் மனமுவந்து அள்ளிக் கொடுத்தார் நாங்கள் வீடு கட்ட.

இவரை பற்றி வலைப்பூவில் சிறிதேனும் எழுதும் வாய்ப்பு கிடைத்தை எனது பெரும் பேறாகவே நான் கருதுகிறேன்.

இன்று வள்ளுவர் உயிரோடு இருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு 


என்று தாம் எழுதிய குறளிற்கு சிறந்த உதாரணமாய் இந்த மனிதரை கண்ட மாத்திரத்தில்.

10 கருத்துகள்:

  1. தங்களின் சித்தப்பா போற்றுதலுக்கு உரியவர்
    தங்களின் சித்தப்பாவின் அடிச்சுவட்டில் பயணித்து, தாங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துகிறேன்.

    எனக்கு எதற்கு நண்பரே நன்றி எல்லாம், தங்களின் வாசிப்பு,
    தங்களின் உழைப்பு, தங்களின் எழுத்து,
    நான் என்ன செய்தேன்
    தங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  2. தங்களது எழுத்துகளால் நான் காணாத தங்களது சித்தப்பாமீது அதீத மரியாதை உண்டாகிறது.

    வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. திரு.கரந்தை ஜெயகுமார் தந்த ஊக்கத்தால் விளைந்தது ஒரு நல்ல அறிமுகக் கட்டுரை. அதுவும் பன்முகத் தன்மை கொண்ட தங்கள் சித்தப்பா பற்றிய கட்டுரை. மிகச் சிறந்த தொடக்கம். தங்கள் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நண்பர் ஜெயகுமார் மட்டுமல்ல ஐய்யா. உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஊக்கமும் கூட இதில் சேரும்.

    பதிலளிநீக்கு
  5. ஆக சிறந்த பதிவு மனிதருள் மாணிக்கமாய் வாழும் தங்களின் சித்தப்பா மேதகு .அருண் தியாகராஜன் அவர்களை போன்றோர்கள் நம்மை போன்றோர்க்கும் ஓர் உந்துசக்தி என்பது பசுமரத்தாணிபோல் பதியவைத்த பதிவிற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பர் பார்த்திபன் அவர்களே.உங்கள் தமிழ் புலமை மிக அருமை

    பதிலளிநீக்கு
  7. உங்க சித்தப்பா பற்றி படித்தவுடன் எனக்கு வேறு நினைவு வவரும் வரை உட்கார மனமில்லை என்றால்
    அது பொய்யில்லை
    நண்பா

    பதிலளிநீக்கு
  8. அன்பு குமார் அவர்களுக்கு வாழ்த்துகள், நல்ல மனிதரைப் பற்றிய மிக நல்லப் பதிவு.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு