திங்கள், 26 பிப்ரவரி, 2018

ஆறாம் அறிவு

செய்தியை கேட்டவுடன் கண்கள் பணிக்கத் தான் செய்தன. காரணம் தெரியவில்லை நண்பர்களே

டோக்யோ பல்கலைகழகத்தில் பணி புரிந்த ஹிதேசுபரோ என்ற  பேராசிரியர் ஒரு நாயை வளர்த்து வந்தார்,ஹசிகோ என்று பெயரிட்டு, 1920 களில்.

அன்றாடம் தொடர் வண்டியினையே பயன் படுத்தி கல்லுரி சென்று திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.



                             தோழன் தனது எஜமானருடன்
                         
தினமும் மாலை அவரை வரவேற்க அவரின் செல்ல பிராணி ஷிபுயா என்ற தொடர் வண்டி நிலையத்திலே காத்திருக்கும்.

ஒரு நாள் ஹிதேசுபரோ மாரடைப்பின் காரணமாய் பல்கலைகழகத்திலேயே இறந்து விட்டது தெரியாமல் ஹசிகோ தினமும் மாலை வந்து காத்திருந்தது.

இந்த காத்திருப்பு ஒரு நாள் அல்ல ஒரு மாதம் அல்ல, ஒன்பது வருடங்கள் , ஒன்பது மாதங்கள் மற்றும் 15 நாட்கள்.

  

                             ஹசிகோ அந்நாளைய செய்தி தாள்களில்


அதற்கு மேலும் அந்த தோழன் தொடர்ந்து வந்திருப்பான், அதற்குள் இயற்கை அவனை அழைத்துக் கொண்டது தன்னிடம், 1935ல்.

இந்த தோழன் தற்போது தன் எஜமானர் சமாதி அருகிலேயே உறங்கிக் கொண்டு இருக்கிறான் ஜப்பானில்.
       

எஜமானரும் தோழனும் அருகருகே நிரந்தர துயில் கொண்டிருக்கும்  இடம்

                         ஒரு விலங்கு தன்னிடம் காட்டிய அன்பை / நன்றியை நினைவு கூறும் வகையில் ஹசிகோவின் வெண்கல சிலை அந்த தொடர் வண்டி நிலையத்திலேயே எழுப்பப் பட்டு உள்ளது, கூடவே இதன் எஜமானரும் உள்ளார், சிலையாய்.


           ஹசிகோவின்  நினைவாய் எழுப்பட்ட சிலை

 (ஆதாரமும், நன்றியும் - https://nerdnomads.com/hachiko_the_dog)

இது ஆறு அறிவு உள்ள மனிதன் , ஐந்து அறிவு உள்ள ஒரு விலங்கிற்கு திருப்பி செலுத்திய நன்றி.

இதற்கு மாறாய் ஐந்து அறிவு உள்ள விலங்குகள் தங்கள் உயிரை காத்த , அன்பு செலுத்திய ஆறறிவு உள்ள மனிதனுக்கு என்ன கைம்மாறு செய்தன.

அதை படிக்க படிக்க, வியப்பெனும் கடலில் மூழ்கிவிட்டேன் நண்பர்களே.

லாரன்ஸ் அந்தோனி எனும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஓர் அன்பர் விலங்குகளிடம் மாறா அன்பு கொண்டிருந்தார்.

அவைகளை வேட்டை ஆடும் மனிதர்களிடமிருந்து காப்பதில் தயக்கம் கொள்ளாதவர். 2003ல் வளைகுடா மீது நடத்தப் பட்ட தாக்குதலின் போது, அரசின் எதிர்ப்பையும் மீறி பாக்தாத் விலங்குகள் பூங்காவிற்கு சென்று தன்னால் இயன்ற வரை விலங்குகளை அழிவிலிருந்து காத்தவர்.

அழிந்தவை 650க்கும் மேல். இவரால் காப்பாற்ற பட்டவை கரடிகள், வல்லூறுகள்,சிங்கங்கள் மற்றும் புலிகள் என சுமார் 50.

இந்த போரின் போது தனக்கென ஒரு பாதுகாப்பு படையையே வைத்துக் கொண்டு இந்த விலங்குளை காத்தார்.

அங்கிருந்த பொது மக்களும் இவருக்கு உதவினர் என்பது கூடுதல் தகவல்.

இவருக்கு யானைகள் என்றால் ஒரு தனி பிரியம் தான்.

கட்டுக்குள் அடங்கா யானைகளை தனது மாறு பட்ட முயற்சிகளால் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதில் லாரன்ஸ் வல்லவராய் இருந்தார்.

        

                         லாரன்ஸ் யானைகளுடன் 

காட்டிலிருந்து பிடித்து வரப்படும் யானைகள் ஒரு வேலை மனிதன் சொல் கேளா விட்டால் அவைகள் சுட்டுக் கொல்லப் பட நாள் குறிக்கப் படும்.

அப்படிப் பட்ட வேதனையான நாட்களில் ஒன்றை பற்றி லாரன்ஸ் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

“அதிகாலை சுமார் 4.45 மணி, நானா என்று பெயரிடப்பட்ட யானையின் முன் நான் நின்று கொண்டு இருந்தேன்.நானா கொல்லப் பட வேண்டிய நாள் அது.

ஒரு புறம் மின்சார வேலி, மறு புறம் காடு.நான் காட்டை நோக்கி கையை காட்டி, எனக்கு தெரிந்த விலங்குகள் மொழியில் அதனை ஓடு , ஓடு என்று கூறிக் கொண்டு இருந்தேன்.
சரியாய் சொல்ல தெரிய வில்லை என்ன நடந்தது என்று, நானா மெல்ல திரும்பி தப்பித்து சென்று விட்டாள் காட்டுக்குள். அன்று அவள் காப்பாற்ற பட்டும் விட்டாள்.

                         லாரன்ஸ் தான் பழக்கும் யானையுடன்

இது போன்ற நிகழ்வுகள் ஒன்று, இரண்டு அல்ல. பலவற்றை அவர் குறிப்பிட்டு உள்ளார் தனது நூலில்.

சரி நண்பர்களே. விஷயத்திற்கு வருவோம்.

மார்ச் மாதம் 7ஆம் தேதி 2012ல் சுமார் 31 யானைகள் இரு குழுக்களாய் காட்டிலிருந்து இவரது இல்லம் நோக்கி வர துவங்கின.

          
யானைகளின் ஊர்வலம் இவர் இல்லத்தை நோக்கி

ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ இல்லை. அவைகள் நடந்தது 12 மணி நேரங்கள்.
யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை இவரது இல்லம் இருக்கும் திசையை, ஒரு முறையேனும் அவைகள் வந்ததும் இல்லை.

ஆனாலும் 12 மணி நேரங்கள் யாருக்கும் எந்த சிரமமும் அளிக்காமல், நூற் பிடித்தார் போல் நன்கு வழி தெரிந்தது போல், சரியாய் வந்தடைந்து இவரது இல்லத்தை சுற்றி அமர்ந்து கொண்டன.

இந்த 32 யானைகளும் அசையாமல் சுமார் ஒன்றைரை நாள் உணவும் , ஆகாரமும் இல்லாமல் அமர்ந்தே இருந்தன அவர் இல்லத்தின் முன்பு.

ஏன் தெரியுமா நண்பர்களே, அஞ்சலி செலுத்த – தமக்காக வாழ் நாளில் பெரும் பகுதியை செலவிட்ட அந்த மகான் இறப்பிற்கு.

யார் ,எப்படி சொன்னார்கள் இவரது மறைவினை இந்த விலங்குகளுக்கு..... ?

எப்படி இந்த வேழங்கள் இவரது இல்லத்தை மிகச் சரியாய் கண்டு பிடித்து வந்தன...?

தலைவன் இறந்தால் கடையை உடைத்து , பேருந்தை எரித்து துக்கம் கொண்டாடும் இந்த சமூகத்தில் அமைதியாய் 36 மணி நேரங்கள் எப்படி அமர்ந்திருந்தன அஞ்சலி செலுத்த ... ?

உயர் குலத்திற்கு ஓர்  இடு காடு , தாழ்ந்த குலத்திற்கு ஒன்று என இறந்த பின்னும் பேதம் பார்க்கும் மனிதன் எங்கே, கூட்டம் கூட்டமாய்  வாழ்ந்து ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் இந்த யானைகள் எங்கே ..?


         ஆறாம் அறிவு மனிதனுக்கா இல்லை விலங்குகளுக்கா ..?





சனி, 17 பிப்ரவரி, 2018

இதனை இதனால் இவன் முடிப்பன்

வாருங்கள் நண்பர்களே திரை இசை பாடகர்களை பற்றி ஒரு பார்வை பாப்போம், என் ரசனைக்கு எட்டிய வரை.

திரை இசை மீது பொதுவாகவே இசை மீது எனக்கு ஒரு மாபெரும் ஈர்ப்பு உண்டு , குறிப்பாக 1950 களிருந்து 1990கள் வரை.

கர்நாடக சங்கீத ராகங்களின் அடிப்படையில் அமைந்த பாடல்களை மிகவும் ரசிப்பவன் நான்.
அத்தகைய பாடல்களில் பாட்டும் நானே ஆகட்டும், சங்கராபரணம் ஆகட்டும் அல்லது சிந்து பைரவி ஆகட்டும். எந்நேரமும் மனதை வருடக்கூடியவை.

சில வருடங்ககளுக்கு முன்பு “பட்டத்து ராணி” என்ற பாடலை கூர்ந்து கவனித்து கேட்ட பின்பு தான் பல்வேறு பாடகர்களை ஒப்பீடு செய்து பார்க்க துவங்கினேன்.

ஒரு சில பாடல்களை தங்கள் குரலை ஏற்ற இறக்கத்தோடு பாடும் திறமை கொண்டவர்கள் என்று கொண்டால் என மனத்திரையில் முதலில் வருபவர் திரு T.M.S .

நவரசத்தையும் உடன் பக்தியையும் (நவரசத்தில் பக்தியும் உள்ளடக்கமா என தெரியவில்லை) வெறும் குரலை கொண்டு நம் மனக்கண் நிறுத்துபவர்  அவர்.

பாட்டும் நானே என பக்தியையும் , நிலவை பார்த்து என சோகத்தையும் பூமாலையில் ஓர் மல்லிகை இல் காதல் ரசத்தையும் என அனைத்து வகை பாடல்களிலும் மிளிர்ந்தவர் அவர்.

இவருக்கு இணையாக ஒருவரை ஒப்பிட வேண்டும் என்றால் அது SPB தான்.  இதற்கு உதாரணம் ஒன்றோ இரண்டோ அல்ல, ஆயிரக் கணக்கான பாடல்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி.

ஆயினும் SPB-யால் பக்தி ரசம் சொட்டும் பாடல்களில் மிளிர முடியவில்லை என்பது என கருத்து.

காதலிக்க நேரமில்லை படத்தில் “மலர் என்ற” எனும் பாடலும், சிவந்த மண்ணில் “பட்டத்து ராணி” பாடலும் வெள்ளி விழா திரை படத்தில் “காதோடு தான்” பாடலும் LR ஈஸ்வரி அளவிற்கு யாரும்  பாட இயலாது என் துணிபு.

மாபெரும் பாடகி என பெயரெடுத்த சுசீலாவால் கூட ஈஸ்வரி அளவிற்கு பாடியிருக்க இயலுமா என்பது கேள்வி குறி.

ஏனெனில் என்னை பொறுத்த வரை, சுசீலா அவர்களுக்கு என்ன தான் திறமை இருந்தாலும், அவரால் குரலில் ஏற்ற இறக்கங்களை கொண்டு வர இயலாது.

ஒரே சீராக தான் அவர் பாடுவார்.

மென்மையான பாடல்கள் ஆயிரம் அவர் பாடியிருந்தாலும், விருதுகள் பெற்றிருந்தாலும் LR ஈஸ்வரி போல் பணமா பாசமா வில் “இலந்த பழம்” நிச்சயம் ஒன்று கூட விற்று இருக்க முடியாது. 

மேலும் சிவந்த மண்ணில் “பட்டத்து ராணி” யாய் மிளிர்ந்த இருக்கவும் முடியாது இவரால்.

இது தெரிந்து தானோ என்னவோ இசை அமைப்பாளர்கள் மென்மையான பாடல்களை (melodious) மட்டுமே சுசீலாவிற்கு வழங்கினர் என எனக்கு தோன்றுகிறது.
“முதல் மரியாதை”யில் பூங்காற்றை திரும்பி பார்க்க செய்யவும்  , குரலிலேயே வெட்டி வேரின் நாற்றத்தையும் உணர வைக்க முடியும் என்றால் அது மலேசியாவால் மட்டும் தான் இயலும்.

சிந்து பைரவியில் “மனதில் உறுதி வேண்டும்” என்று நம் மனதில் நிற்க ஜேசுதாஸ் அவர்களால் மட்டுமே இயலும்.

“இளைய நிலா”  மற்றும் “நிலாவே வா” என எத்தனையோ பாடல்கள் மூலம் பூமிக்கு நிலாவை அழைத்து வர SPB அவர்களால் தான் முடியும்.

மிக மிக இனிமையாய் சிங்கார வேலனே என்று கொஞ்சும் சலங்கையிலும், நிலா காயுது என சகலகலா வல்லவனில் தன் குரலில் நம்மை கிறங்க வைக்க ஜானகி அவர்களால் மட்டுமே இயலும்.

அடித்து சொல்வேன் – மேற்கூறிய இரு பாடல்களிலும் ஜானகியின் இடத்தை நிரப்ப இன்று வரை யாரும் பிறக்கவில்லை என்று.

தளபதி திரை படத்தில் ஜேசுதாசும், SPBயும் இணைந்து பாடிய உற்சாகம் நிறைந்த “காட்டுக் குயிலு” பாடலில், SPB அளவிற்கு ஜேசுதாஸ் ஆல் நம் மனசில் இடம் பிடிக்க இயலவில்லை எனும்போது எனக்கு தோன்றும் பழமொழி “புறங்கை புண்ணிற்கு கண்ணாடி” என்பதே.

இப்படி இந்த பாடலை இவர் தான் பாடல் வேண்டும் என தெரிவு செய்து அதனை அந்த பாடகர் கொண்டு பாட வைத்த இசை அமைப்பாளர்களில் முதன்மையாய் தோன்றுபவர்கள் K V மகாதேவன் அவர்களும், MSV அவர்களும் மற்றும் நமது இசை ஞானியும் தான்.

இவற்றை பார்க்கும் இதனை இதனால் இவன் முடிப்பன் துவங்கும் குறளே எனக்கு தோன்றுகிறது இதற்கு உதாரணமாய்.

அறிஞர் பெருமக்கள் விளக்கினால் எனது கருத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாய் உள்ளேன்.