சனி, 13 ஜனவரி, 2018

நடமாடும் நூலகம்

நூலகங்கள் பற்றி ஒரு பார்வை பாப்போம், வாருங்கள் நண்பர்களே.

1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் கரந்தை நூலகத்தில் உறுப்பினராய் சேர்ந்தது எனக்கு இன்றும் பசுமரத்து ஆணியாய் மனதில் இருக்கிறது.

உறுப்பினர் எண்  1248 எனது.

அப்போது தான் சாண்டில்யங்களும், சுஜாதாக்களும், பட்டுகோட்டை பிரபாகர்களும் , லக்ஷ்மிக்களும் எனக்கு அறிமுகமான நேரம் அது, வாண்டு மாமாவை தவிர.

பொன்னியின் செல்வன் எனக்கு அறிமுகமானது 1987 தான். அதை இன்றும் படித்து மகிழும் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு ஒரு தலை செருக்கே.

சரி நண்பர்களே விஷயத்திற்கு வரும் முன், நூலங்கள் பற்றி நான் இணையத்தில் ஆராய்ந்த பொது கிடைத்ததென்னவோ கிழே உள்ள தகவல் தான்.

சுமார் கி.மு 3500 – 4000 களில், Ancient Library of Alexandria” என்று  எகிப்தின் அலெக்சாண்ட்ரியா நகரில் உலகின் முதல் மற்றும் மிகப் பெரிய நூலகம் உருவாக்கப் பட்டதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்த பெஞ்சமின் பிராங்க்ளின் தான் 1731-ல் பிறர் பயன்பாட்டிற்கான நூலகம் (Lending Library) ஒன்றை முதன் முதலில் துவங்கிய நபராக அறியப் படுகிறார்.

சுமார்  100 ஆண்டுகளுக்கு முன்பு நூலகங்கள் எப்படி இருந்தன தெரியுமா?

நூலகங்கள் குறித்து, தமிழ் பல்கலை கழகத்தில் பணியாற்றி, அண்மையில் மறைந்த, திரு பத்மநாபன் என்பவர் எனது பாட்டனாரை 1993ம் ஆண்டு, ஜூன் மாதம் பேட்டி கண்டு, ஒலி நாடாவில் பதிவு செய்திருக்கும் செய்திகளைப் பார்ப்போம் வாருங்கள்.

1920-களில் நூலகங்கள் என்பன, நடமாடும் வடிவத்திலேயே இருந்திருக்கின்றன. சீருந்து (VAN) ஒன்றில் நூல்கள் நிரப்பப் பட்டு, இரு புறமும் பதாகைகள் கட்டப் பட்டு ஓட்டுனர் ஊர்தியை ஓட்ட , நூலகங்கள் பற்றி பிரசாரம் செய்ய எட்டாம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியரை கொண்டு இவ்வாகனம் இயக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு தாலுக்கா மட்டுமே சென்று வரும்.

பெரும்பாலும் கதை புத்தங்களை சுமந்து செல்லும் இந்த நடமாடும் நூலகம், செல்லும் வழியில் நூல்களை முதலில் விநியோகம் செய்தபடி செல்லும்.

திரும்பி வரும் வழியில் நூல்களை மீண்டும் பெற்றுக் கொள்ளும்.

1930களில் முதல் நடமாடும் நூலகம் என்பது, மன்னார்குடியை சுற்றி உள்ள 95 கிராமங்களை சுற்றி வந்ததாகவே தெரிகிறது.

தஞ்சையைப் பொறுத்த வரை , பனகல் கட்டிடத்திலிருந்து காலையில் கிளம்பும் நூலகம், மாலையில் அதே கட்டிடத்திற்கு வந்து சேரும்.

இதன் வாகன ஓட்டுனரின் பெயர் வடிவேலு. பிரச்சாரத்திற்கு உதவியவர் தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த திரு. T.V.ரத்தினசாமி என்பவராவார். 

இவர் நந்தனார் திரை படத்தில் நடித்தவர்(தண்டபாணி தேசிகர் படம் அல்ல).

1920களில் துவங்கிய இவரது பணி, சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் படங்களில் நடிக்க சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இவருக்கு பிறகு மராட்டா பள்ளியில் இருந்து ஓர் ஆசிரியர் இப்பணியை செய்தார். 

பெரும்பாலான ஆசிரியர்கள் இப்பணியினை விரும்பி செய்ததாகத் தெரியவில்லை. தங்களது மேல் அதிகாரியின் கட்டளையின் பேரிலேயே இவர்கள் செய்து வந்தனர்.

கரந்தையிலிருந்து புறப்படும் வாகனங்கள் பள்ளிஅக்ரஹாரம் வழியாக அம்மன்பேட்டை, கண்டியூர் மற்றும் திருவையாறு வரை சென்றிருக்கின்றன. மறுபுறம்  அய்யம்பேட்டை , பாபநாசம் வரையிலும் கூட உண்டு.

மேலும் ஒரு வாகனம் வல்லம் வரை சென்றாலும், சாலையின் மோசமான நிலை காரணமாக, வடுவூர் வரை செல்லவில்லை ஆனால் செங்கிப்பட்டி வரை சென்று வந்திருக்கிறது.

இந்த சீருந்தானது முன்புறம் இயந்திரத்தை கொண்டது. ஓட்டுனர் அருகில் பிரச்சாராம் செய்பவர் அமர்ந்து கொள்வர். தகரத்தை கொண்டு பின் புறம் மூடப் பட்டு இருக்கும்.

Gramophone record-ஐ சுமந்து செல்லும் இவ்வாகனத்தில் பாடல்களை ஒலிக்க விடுவதன் மூலம் தன் கவனத்தை ஈர்க்கும். 

இவை பெரும்பாலும் பக்தி பாடல்களே.

இந்த நடமாடும் நூலகப் பணியானது, சுதந்திரத்திற்கு பின்னர் நிறுத்தப் பட்டிருக்கிறது.  1970-இல் மீண்டும் துவங்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் நிதி சுமையின் காரணமாக, சுமார் 10 ஆண்டுகளிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

எனது தந்தையும் நூலகராக பணி புரிந்த காரணத்தாலோ என்னவோ தெரியவில்லை, எனக்கு புத்தகங்கள் மீது மிகவும் பிரியம்.

ஒரு சிறிய நூலகமே வீட்டில் வைத்திருக்கும் நான், வருடா வருடம் சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு சென்று நூல்கள் வாங்க தவறுவதில்லை கடந்த ஆண்டுகளாக.

என்ன தான் காகிதங்களிருந்து நூல்கள் மடி கனிக்கு சென்று தற்போது கிண்டில் (kindle) என விஞ்ஞான வளர்ச்சி அடைத்தாலும், மாபெரும் எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை கூறியது நினைவிற்கு வருகிறது.

            புத்தகங்கள் சாவதில்லை, அவைகள் வடிவம் மாறுகின்றன.