செவ்வாய், 24 அக்டோபர், 2017

முத்தையா எனும் கவிஞன்


ஆண்டு 1981, 17 அக்டோபர். அன்று சிகாகோ தமிழ் சங்கத்திலிருந்து அந்த செய்தி வந்த போது , தமிழ் நாடே சோகத்தில் மூழ்கியது. ஆம், அன்று தான் சிகாகோவில் தமிழ் சங்க மாநாட்டில் பங்கேற்க சென்ற போது கவியரசு மறைந்தார். 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவரின் தமிழ் அறிவு இன்று தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பலரைவிட மேலானது என்றால் அதற்குமாற்று கருத்து இல்லை என்றே நினைக்கிறன்.   

அவர் நினைவாக கடந்த 16 ஆண்டுகளாய் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராஜா முத்தையா அரங்கில் விழா எடுக்கப் படுகிறது, திரு. S.P முத்துராமன் மற்றும் திரு. AVM  சரவணன், நல்லி குப்புசாமி செட்டியார் மற்றும் பலரால். இந்த ஆண்டு Oct 21 (வார இறுதி என்பதை கணக்கில் கொண்டு ) அதே அரங்கில் நடைபெற்றது. இதை கண்டு களிக்க எனக்கு அழைப்பும் கிட்டியது. எனது தந்தையுடன் சென்றிருந்தேன்.

நிகழ்ச்சியில் கண்ணதாசன் புகழ் மட்டும் பாடப் படவில்லை, கட்டுரை போட்டியில் வென்ற மாணவ மாணவியர்க்கும் கவியரசு நினைவாய் பரிசுகள் வழங்கப் பட்டன.  வெற்றி பெற்ற மாணவர்களில் ஒருவர் புகழ் பெற்ற வழக்குரைஞர் திருமதி. சுமதி அவர்களின் மகள். தாய் போன்றே மிக நன்றாக பேசினார்.

பின்னர் பேசிய இருவரின் சாராம்சத்தை இங்கு கூற விரும்புகிறேன்.

திரு. நல்லி குப்புசாமி தி.நகரில் கண்ணதாசன் சிலை அமைந்த கதை கூறினார்.


சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு திரை உலகினர் கவி அரசுவிற்கு ஒரு சிலை நிறுவ ஆசை பட்ட பொது, மெல்லிசை மன்னர் தமிழ் நாடு எங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேர்த்து வேண்டியவைகளை செய்தார். அப்போதைய முதல் அமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்களிடம் அனுமதி பெற சென்ற பொது,இதை அரசு விழாவாக எடுப்போம் என்று அவரே முன்வந்து செய்தார் என்பது கூடுதல் தகவல்.



அடுத்து பேசிய பட்டி மன்ற பேச்சளார் மற்றும் வழக்குரைஞர் திருமதி. சுமதி அவர்கள் தான் மற்ற எல்லோரையும் விட மிகவும் கவர்ந்தார். அவர் கூறியதன் சாராம்சம் கீழே.

கண்ணதாசன்  நிகழ்ச்சி என்றால் அங்கு “புல்லாங்குழல் கொடுத்த”  பாடல் இன்றி இசை நிகழ்ச்சி தொடங்குவதில்லை என்றார். அப்பாடலின் முதல் மூன்று வரிகளை எடுத்து விளக்கம் சொன்னார் திருமதி. சுமதி.  நான் “வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே” என்ற மூன்றாம் வரியை மட்டும் எடுக்கிறேன். 

கங்கையில் வண்டுகள் எங்கிருந்து வந்தன... ?

மகா பாரதத்தில் , பீமன் பலமுடையவன் மட்டுமல்ல, நீச்சலில் அதிக ஆர்வம் கொண்டவன். தினமும் கங்கையில் குதித்து, ஒரு கரையிலிருந்து மறு கரை வரை அனாயசமாக நீந்துபவன். ஒரு நாள் இதை கவனித்த துரியோதனன் ஆற்றினுள்ளே பெரும் ஈட்டிகளை (அந்த நஞ்சு தடவப்பட்ட ஈட்டிகள் உதிரத்தில் மட்டுமே கரையும் தன்மை கொண்டவை ) பீமன் குதிக்கும் இடத்தில் ஆழ நட்டான், பீமனை கொல்லும் நோக்கில். இதை அறிந்த கண்ணன் பீமனுடன் கங்கை கரைக்கு வந்தது, பீமன் அறியா வண்ணம் ஈட்டிகள் புதைக்க பட்ட இடத்தில் மேல் வண்டுகளை நீர் மீது அமர விட்டான். தான் வழக்கமாக குதிக்கும் இடம், வண்டுகள் சூழ்ந்து இருந்ததால் இடம் மாறி குதித்து நீந்திய பீமனை , காப்பற்றியதாய் சொல்கிறது மகா பாரதம். இந்த நிகழ்ச்சியினையே அடிப்படையாய் கொண்டு “வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே” என்ற வரியை மட்டுமல்ல, இப்பாடல் முழுவதுமே கண்ணனின் அற்புதங்களை அடிப்படையாய் கொண்டே கண்ணதாசன் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் “ abstract “ என்று ஒரு சொல் உண்டு. அதன் பொருள், மனதில் தோன்றும் (existing in thought or as an idea but not having a physical existence) எண்ணம் / யோசனைக்கு  எழுத்து  வடிவம் கொடுக்க இயலாமை. தமிழில் எனக்கு தோன்றுவது இல் பொருள் உவமை அணி. (சரியா / தவறா என தமிழ் ஆசான்கள் தான் கூற வேண்டும்) . அந்த இயலாமையே முறியடியத்து அனாயாசமாக சொற்களில் விளையாடுபவர் கவியரசு அவர்கள்.


உதாரணம் “ சுமதி என் சுந்தரி “ படத்தில் வரும் பொட்டு வைத்த முகமோ பாடல். அதில் ஒரு வரி.

கரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாக கேட்டேன்


கடற்கரையிலிருந்து நாம் கடலினுள் வானத்தை பார்க்கும் போது  வானமும் கடலும் ஒரு புள்ளியில் (Horizon) சேருவது போல தோன்றும். கப்பலில் பயணம் செய்ய செய்ய அந்த புள்ளி மேலும் நீண்டு கொண்டே செல்லும் . கண்ணிற்கு தெரியும் அந்த புள்ளியை நெருங்க இயலாது. அதாவது, இருக்கும் ஆனா இருக்காது. பெண்களுக்கு இடை இருக்கும் ஆனா இருக்காது.  இதை தான் சிவாஜி ஜெயலலிதாவின் (இல்லாத) இடையை , வானும் கடலும் சேரும் புள்ளியை ஒப்பிட்டு பாடுகிறார். என்னே ஒரு ஒப்பீடு / கற்பனை பாருங்கள் நண்பர்களே.  

கவிஞரின் அத்திக்காய் பாடலிலிருந்து வீடு வரை உறவு பாடல் வரை நான் எத்தனையோ அவரின் வரிகளை மிகவும் ரசிப்பவன். இந்த உவமையை கேட்ட பின், எனக்கு கண்ணதாசன் பற்றிய மதிப்பு மேலும் பல மடங்கு கூடியது என்னவோ உண்மை.

ஆனாலும் எனக்கு ஓர் ஐயம் கவியரசுவின் பாலும் பழமும் படத்தில் வரும், “மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்” என்ற பாடல்  வரிகளில்.

மனதிலிருந்து தான் நினைவுகளே தோன்றும் என்ற போது, மனதாலும் (மற்றும்) நினைவாலும் தாயாக வேண்டும் என ஏன் கூறினார். எனது ஐயத்தை யாரேனும் தெளிவு படுத்துமாய் கேட்டுகொள்கிறேன்.

அவர் பேச்சை முடித்த பின்னர் இசை நிகழ்ச்சி துவங்கியது.

வழக்கம் போல்  “புல்லாங்குழல் கொடுத்த”  பாடலுடன் ஆரம்பம். நாங்கள் அரங்கிலிருந்து வெளியேறும்போது MSVன் சீடர் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” பாடலை பாட துவங்கினார்.

நடந்து வந்தது எனது வாகனத்தை நாங்கள் எடுத்து கொண்டு செல்லும் போது அந்த பாடலின் இறுதி வரிகள் ஒலித்துக்கொண்டு இருந்தன.

“நான் நிரந்தனமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை“