சனி, 1 ஜூலை, 2017

டாலர் தேசமும் எனது அனுபவமும் (இறுதி பகுதி)

வாருங்கள் நண்பர்களே. எனது அமெரிக்க அனுபவத்தை பற்றி இந்த வாரத்துடன் நிறுத்திகொள்வோம்.

மாற்று திறனாளியாய் பிறந்தாலும் அமெரிக்காவில் தான் பிறக்க வேண்டும் என திரு. எஸ். வீ. சேகர் ஒரு தொலை காட்சி பேட்டியில் கூறியதாய் ஞாபகம். 

ஆம் நண்பர்களே, அது உண்மை தான்.  மாற்று திறனாளிகளுக்கு , குறிப்பாக சக்கர நாற்காலியில் வருவோர்க்கு மிகுந்த முன்னுரிமை உண்டு எவ்விடத்திலும்.  அவர்கள் பேருந்தில் ஏற வசதியாய் பேருந்தின் படி தானாக கீழே இறங்கி அந்த சக்கர நாற்காலியை பேருந்தினுள்ளே ஏற்றிக்கொள்ளும். பேருந்து ஓட்டுனர் (அங்கு நடத்துனர் இல்லை) முன் வந்து அந்த நாற்காலியை உள்ளே இருக்கும் இரும்பு கம்பத்தில் கட்டி விட்டு பின்னர் தான் ஊர்தியை நகர்த்துவார். இவை எல்லாம் முடியும் வரை மிக பொறுமையாய் இருப்பர் மக்கள்.

இவ்வளவு ஏன் நண்பர்களே, பெரு நகரங்களில் அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்.. ??) ஓட்டுனர் கூட தன் கையில் போக்குவரத்து விளக்கின் கட்டுபாட்டை தன்னிடம் வைத்திருப்பார், தான் செல்லும் இடமெல்லாம் வேகமாக செல்ல வேண்டுமென.  அந்த அளவிற்கு அங்கு மதிப்பு உயிருக்கு.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமும் தமக்கென ஒரு புனை பெயரை வைத்துகொள்ளும்.

நியூயார்க் எம்பயர் ஸ்டேட் எனவும், கலிபோர்னியா கோல்டன் ஸ்டேட் எனவும், நான் இருந்த விஸ்கான்சின் மாகாணம் டெய்ரி (பால் வள) மாகாணம் எனவும் அழைக்கப்படும். இதை தமது வாகனத்திலேயே அவர்கள் பதித்து விடுவார்கள் பெரும்பாலானோர்.

இது போன்று அங்கு உள்ள 50 மாகாணங்களும் ஒரு புனை பெயரை கொண்டுள்ளன என்றால் அமெரிக்கர்கள் தம்மை பற்றி எந்த அளவு பெருமை கொண்டவர்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு பீடிகை ஏன் நண்பர்களே, விஷயத்திற்கு வருவோம். என்ன தான் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தாலும் அங்கு ஏனோ தெரியவில்லை, துப்பாக்கி வாங்குவது எளிது தான், கடைக்கு சென்று காய்கறி வாங்குவது போல.

அது போன்ற ஒரு துப்பாக்கியை கொண்டு தான்  இஞ்சின் ஆயில் ஊற்றிய பன்றி நிறத்தில் ஒருவனும், ரத்தமே முழுவதும் வெளுத்து போன நிறத்தில் ஒருவனும் எனது வாகனத்தை ஆளுக்கு ஒரு புறம் தட்டிக்கொண்டு இருந்தனர். வேறு வழியின்றி நான் எனது பக்கம் உள்ள கண்ணாடியை மட்டும் இறக்கினேன்.

பன்றியின் நிறத்தில் இருந்த அவன் சடாரென உள்ளே பாய்ந்து சாவியை உருவ முயன்றான். வாகனம் ஆயுத்த நிலையில் இருந்தமையால் அவனால் உருவ இயலவில்லை. இதை கண்ட என மனைவி அவனை இரு கரம் கூப்பி (என்னவோ இருவருக்கும் இந்திய கலாசாரம் தெரியும் என எண்ணி) ஐயோ ஐயோ என சொல்ல ஆரம்பித்தார். பின்னால் இருந்த என மூத்த மகள் அவன் மீது பாய்ந்து அவன் கரத்தை தட்டி விட முயன்றாள் தைரியமாய். 

இளைய மகளோ எனது இருக்கைக்கு கீழே ஒளிந்து கொண்டாள்.

இதற்கிடையே நான் பற்சக்கரத்தை (கியர்) இயக்கி வாகனத்தை நகர்த்த முயலும் பொது அவன் துப்பாக்கியை நீட்டினான் என மீது. அவர்கள் வந்த நோக்கம் எனக்கு புரிந்து விட்டது வழிப்பறி என.

எனவே அங்கு உடனே எனது பண பையை (மொழியாக்கம் purse என நினைக்கிறேன்) தூக்கி எறிந்து விட்டு ஊர்தியில் பறந்தோம். வழியிலேயே காவல் துறையை கை பேசியில் அழைத்தோம்.

அவர்கள் சொன்ன படி செல்லும் வழியில் ஓர் எரி பொருள் நிலையத்தில் காத்திருந்தோம். அந்த நிலையத்தை நடத்துபவர் ஒரு பாகிஸ்தானி. மிக நன்றாக உபசரித்தார் , என்னை போன்ற நிறைய பலி கடாக்களை கண்ட அனுபவத்தின் பேரில்.

காவலர்கள் வந்தனர். அவர்கள் கேட்ட கேள்வி திருடர்கள் உருவம் எப்படி இருந்தது, நான் பார்த்த துப்பாக்கியின் அளவு என்ன முதலானவை.

மறு நாள் அந்த காவலர் என்னை அழைத்து எனது பணப்பை கிடைத்து விட்டது என கூறி என்னை வந்து பெற்றுக் கொள்ள சொன்னார்.

அந்த ஊர் காவல் நிலையம் மிக சுத்தமாய் இருந்தது. காவலர் என்னுடைய பணப் பையை கொடுத்து கையோடு புகைப்படமும் எடுத்து கொண்டனர், சாட்சிக்காக.

திரும்பி வரும் போது தான் யோசித்தேன். நாங்கள் தப்பியது இறை அருள் தான் என்பதில் ஐயம் இல்லை , ஒரு வேலை அந்த நபர்கள் என்னையோ எனது மனைவியையோ சுட்டிருந்தால் எனது குழந்தைகளின் நிலை அந்த இருட்டில் மட்டுமல்ல , அந்த நாட்டில் என்ன ஆகி இருக்கும் என யோசித்தேன்.

எனது பணப்பையை அவனிடம் தூக்கி எறிந்து விட்டு நான் பறந்தது அந்த வாகனத்தில் மட்டுமல்ல, அந்த நாட்டை விட்டும் தான்.

இன்னொரு முறை திரும்பி பார்ப்பமா நாங்க...............

எமது அடுத்த வெளியீடு : ஐயர்ஸ் கிச்சன்